பாட்டன் பூலித்தேவன் வீரவணக்க நிகழ்வு | தமிழ்த்தேசியப்போராளி தமிழரசன் – அனிதா நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

21

01-09-2022 | பூலித்தேவன், தமிழரசன், அனிதா நினைவேந்தல் – சென்னை | சீமான் செய்தியாளர் சந்திப்பு

வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 307ஆம் ஆண்டு பிறந்தநாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிக்கு எதிரான ‘நீட்’ தேர்வுமுறையை ஒழிக்கச் சட்டத்தின் வழிநின்று போராடி, கல்வி உரிமைக்காகத் தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாளுமான 01-09-2022 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்விற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்ததிப்பில் சீமான் அவர்கள் கூறியதாவது,

வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் வீரத்தைப் போற்றுவோம்!

“எங்களுடைய அன்னை நிலம், அந்நியரிடம் அடிமைப்பட்டு விடக்கூடாது என்கிற உயர்ந்த நோக்கத்திற்காக தன் உயிரை முன்னிறுத்தி, வீரப்போர் புரிந்த மான மறவன், எங்களுடைய வீரப்பெரும்பாட்டன், பூலித்தேவன் அவர்களினுடைய 307வது பிறந்தநாள் இன்று. நாம் தமிழர் கட்சி பொதுவாக யாருடைய பிறந்த நாட்களையும் கொண்டாடுவதில்லை, தமிழர் மரபின்படி நினைவு நாளைத்தான் போற்றுவோம். எங்கள் பாட்டனாருக்கு நினைவு தினம் எது என்று வரலாற்றில் குறிப்பு இல்லாத காரணத்தினால் அவர் பிறந்த தினத்தை நாங்கள் போற்றுகிறோம். நெற்கட்டான்செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பூலித்தேவனை எதிர்த்து வெள்ளையர்கள் படையை நடத்தி வந்தபோது, எந்த இடத்திலிருந்து அவர்கள் படையை நடத்தி வந்தார்களோ அந்த இடம் வரை துரத்தி அடித்த வீரப்பெருமகன் தான் எங்களுடைய பாட்டனார். ஆங்கிலேயனுடைய பீரங்கி குண்டுகளாலேயே தகர்க்கமுடியாத உறுதியான கோட்டையை கட்டி ஆட்சி புரிந்தவர் எங்கள் பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்கள். அவருடைய நினைவைப் போற்றுகிற இந்நாளில், எந்த நோக்கத்திற்காக அவர் வீரப்போர் புரிந்தாரோ, அவர் வழியே வருகிற மானத்தமிழ் பிள்ளைகள் நாங்கள் அந்த உணர்வை எங்கள் உள்ளத்தில் ஏந்தி தொடர்ச்சியாக அரசியல் களத்தில் போராடுவோம் என்கிற உறுதியை ஏற்கிறோம். அதுவே எங்கள் பெரும்பாட்டனுக்கு நாங்கள் செலுத்துகிற உண்மையான வீரவணக்கமாக இருக்க முடியும். நாம் தமிழர் கட்சி பெருமிதத்தோடும் திமிரோடும், எங்களுடைய பாட்டன் பூலித்தேவன் அவர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்துகிறோம்” என்று கூறினார்.

தமிழ்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் நினைவைப் போற்றுவோம்!

”எங்களுடைய அண்ணன், தமிழ்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்கள், ஒரு எளிய மகன். அடிமைப்பட்டு இருக்கிற அன்னை தமிழ்ச் சமூகத்தின் உரிமை, அதன் பாதுகாப்பான நல்வாழ்வு, அதுவே தன் முதன்மையான கடமை என்று கருதி, ஒரு புரட்சிகர அரசியலைக் கட்டி அமைக்கப் போராடியவர். எங்களுடைய தாத்தா கலியபெருமாள் அவர்களின் வழியிலேயே அரசியல் பயணத்தைத் தொடர்ந்தவர். அந்த இனமானப்போராளி எங்களுடைய அண்ணன் தமிழரசன் அவர்களினுடைய நினைவு நாள் இன்று. சாதிய மதப் பிளவு தான் தமிழ்தேசிய இனத்தின் ஓர்மையை சிதைக்கிறது. ஒரு சமத்துவ சமூகம் அமைக்க, தமிழ்தேசிய இனம் ஒன்றுபட்டு பாதுகாப்பாக வாழ, சாதி மத உணர்ச்சியை பின்னுக்குத்தள்ளி, தமிழ்தேசிய இன உணர்ச்சியை மேலோங்குவது தான் சரியான காலத்தேவை, வரலாற்றுப்பணி என்று அப்பணியைத் தொடங்கி தொடர்ந்தவர் எங்களுடைய அண்ணன் தமிழரசன் அவர்கள். அவருடைய நினைவைப் போற்றுகிற இந்நாளில், அண்ணன் தமிழரசன் அவர்களுக்கு, உலகெங்கும் இருக்கிற தமிழ் சமூகத்தின் சார்பாக நாம் தமிழர் கட்சி எங்களுடைய வீரவணக்கத்தை செலுத்துவதில் மகிழ்கிறோம். அவருடைய நினைவை சுமந்து, அவர் கனவை நோக்கி பயணிப்போம் என்கிற உறுதியை ஏற்கிறோம்”

கல்வி உரிமைப் போராளி தங்கை அனிதா நினைவைப் போற்றுவோம்!

“அன்பு தங்கை 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணை பெற்றும்கூட, தான் மருத்துவ கல்வி கற்று, மருத்துவ வசதி பெற முடியாத எளிய அடிதட்டு மக்களுக்கு அந்த அரும்பணியைச் செய்ய வேண்டும் என்கிற கனவோடு கல்வி கற்ற நம்முடைய அன்பு தங்கை அனிதா அவர்கள், அந்த கனவு நிறைவேறாத காயத்தை தாங்கிக்கொள்ள முடியாமல், தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து, பல தம்பி தங்கைகள் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்கள். ஆனால், அவள் பற்றவைத்த நெருப்பு இன்னும் எரிந்துகொண்டு தான் இருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் ‘நீட்’ தேர்வு இருக்கிறது, ஆனால் அதற்கு எதிரான போராட்டம் இருக்கிறதா என்றால், அது தன்மானமிக்க தமிழர்கள் வாழும் நிலத்தில் தான் இருக்கிறது. இந்தி எதிர்ப்பு, நீட், ஜிஎஸ்டி, சிஏஏ, என்ஆர்சி என்று எந்த ஒரு அநீதியான திட்டங்கள், சட்டங்கள் வரும்போது அதை எதிர்த்து போர்புரிகிற போர்க்குணம், இன்னும் தன்மானமிக்க தமிழ் மக்களிடத்தில் தான் இருக்கிறது என்பதை காட்டுகிறது. தங்கை அனிதாவின் உயிரை முன்னிறுத்திய அந்த புரட்சிகர போராட்டம், தன் உயிரைக் கொடுத்தேனும் அடித்தட்டு மக்கள் மருத்துவக் கல்வியைப் பயில்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக தான், அவள் அந்த ஈகத்தைச் செய்தாள். ஆனால், அது இன்று வரை பயனற்று இருக்கிறது. அவளுடைய அண்ணன்மார்கள் அவள் கண்ட கனவை வீணாக்க விடமாட்டோம். எதிர்காலத்தில் அமையும் தமிழ்தேச அரசு, அவளுடைய கனவை நிறைவேற்றும் என்கிற உறுதியை ஏற்று, என் தங்கை அனிதா அவர்களுக்கு எங்களுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறோம்”

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருவரங்கம் தொகுதி வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திவிளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இலவச கண்சிகிச்சை முகாம்