உயரிய தமிழிலக்கிய விருது பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் உறுதியளித்தபடி வீடுகள் வழங்கப்படுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
இந்திய ஒன்றிய, மாநிலங்கள் மற்றும் பன்னாட்டு அளவில் வழங்கப்பெறும் இலக்கியத்திற்கான உயரிய விருதுகளைப் பெற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துப் பல மாதங்களாகியும், எழுத்தாளர்கள் பலருக்கும் இதுவரை வீடுகள் வழங்காமல் தமிழ்நாடு அரசு காலந்தாழ்த்தி வருவது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. தமிழ் அறிஞர்களுக்கு வீடுகள் வழங்குவதில் தமிழ்நாடு அரசு பாரபட்சம் காட்டுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமது அளப்பரிய எழுத்துத் திறத்தாலும், கற்பனை வளத்தாலும், அறிவாற்றலாலும் காலத்தால் அழியாத காவியங்கள் படைத்து அன்னைத் தமிழுக்குப் பெருமை சேர்த்த தமிழறிஞர் பெருமக்கள் வறுமையில் வாடுவதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நிரந்தர வாழ்விடம் அமைத்துக் கொடுத்து, அவர்களது துயரமிக்க வாழ்வில் சிறிதளவினையாவது துடைக்கத் தமிழ்நாடு அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது. இருப்பினும், அதிலும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வீடுகள் உடனடியாக வழங்கப்படுவதும், சிலரினை தொடர்ந்து காத்திருப்புப் பட்டியலில் வைத்திருப்பதும், பலருக்கு வீடுகள் வழங்க மறுப்பதும் திமுக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறது. உயிர்நிகர் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றிய சான்றோர் பெருமக்களுக்கு நியாயமாக சேர வேண்டிய உரிமையைத் தரமறுத்து, அதிலும் தமிழ்நாடு அரசு பாகுபாடு பார்க்கிறது என்கிற குற்றச்சாட்டு ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.
ஆகவே, திமுக அரசு தமிழறிஞர் பெருமக்களுக்கு ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படுவதில் எவ்வித அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கும் இடமளிக்காமல், தமிழ் இலக்கியத்திற்கான தமிழ்நாடு அரசின் விருதுகள், இந்திய ஒன்றிய அரசின் விருதுகள் மற்றும் பன்னாட்டு உயரிய விருதுகள் பெற்ற தமிழறிஞர்கள் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படுவதை உறுதிசெய்து விரைந்து வீடுகள் வழங்க வேண்டுமெனவும், குறிப்பாக அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை கைவிட்டு, வீடு மற்றும் நிலமில்லாது உண்மையிலேயே வறுமையில் வாடும் எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
உயரிய தமிழிலக்கிய விருது பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் உறுதியளித்தபடி வீடுகள் வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்!https://t.co/L8vRZniYc0@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/aIFVtOJYdK
— சீமான் (@SeemanOfficial) July 14, 2022
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி