விரைவில் மூடப்படவுள்ள மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணிபாதுகாப்பினை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

886

விரைவில் மூடப்படவுள்ள மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணிபாதுகாப்பினை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவந்த மகிழுந்து உற்பத்தி செய்யும் ஃபோர்டு தொழிற்சாலையானது கடந்த 10 ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வருவதாகக்கூறி, தொழிற்சாலையை வரும் ஜூன் மாதத்துடன் நிரந்தரமாக மூடப்போவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளதால் அங்குப் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளனர். நிர்வாகத்தின் இத்திடீர் முடிவால் அங்குப் பணிபுரியும் 2638 நிரந்தர மற்றும் 16000 மறைமுகத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.

தனியார்மயம், தாராளமயம், உலகமய பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட பிறகு இந்தியப் பெருநாடு, பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் வேட்டைக்காடாகி, பெரும் விற்பனை சந்தையாக மாறியுள்ளது. இதனால் நாட்டிலுள்ள தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பானது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. குறைந்த விலையில் நிலம், நீர், மின்சாரம், மனித ஆற்றல் இன்னும் பிற சலுகைகளை வாரிவழங்கி, பன்னாட்டுக் கூட்டிணைவு நிறுவனங்களைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அதையே பெரும் சாதனையாகவும் விளம்பரம் செய்கின்றன.

பல்லாயிரம் கோடி முதலீடு, பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று பிரமாண்டமாகப் பெருமைபேசி மண்ணின் வளங்களையும், மனித உழைப்பையும் கொள்ளைப்போக அரசுகளே அனுமதிக்கின்றன. மண்ணையும், மக்களையும் சுரண்டி கொழுத்த பன்னாட்டு நிறுவனங்கள், இனி சுரண்ட ஒன்றுமில்லை என்ற பிறகு கிடைத்த இலாபத்தைச் சுருட்டிக்கொண்டு நமது நாட்டுத் தொழிலாளர்களை நட்டாற்றில் விட்டுச் செல்வது அண்மைக்காலமாகத் தொடர்கதையாகிவிட்டது. ஏற்கனவே சென்னையில் இயங்கி வந்த ‘நோக்கியா’ அலைபேசி நிறுவனம் இதேபோல் திடீரென மூடப்பட்டு, அங்குள்ள தொழிலாளர்கள் வேலையிழந்தது குறிப்பிடத்தக்கது.

பன்னாட்டு தொழிற்சாலையால் உண்மையில் வளம் பெற்றது முதலாளிகளின் சொந்த நாடா? அல்லது நமது நாடா? சொந்த நாடு வளம்பெறும் என்றால் அங்கே தொடங்காமல் இங்கே வந்து ஏன் தொடங்கினார்கள்? நாட்டின் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, இலட்சக்கணக்கான பேருக்கு வேலை என்று எட்டுத்திக்கும் கொட்டி முழங்கிய இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் இப்போது வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ள மறைமலைநகர் ஃபோர்டு தொழிலாளர்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?

மறைமலைநகர் தொழிற்சாலை போன்றே, குஜராத்தில் உள்ள மற்றுமொரு தொழிற்சாலையையும் மூடப்போவதாக ஃபோர்டு நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், குஜராத் மாநில அரசு விரைந்து செயல்பட்டு ‘டாடா’ மகிழுந்து நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி, தொழிற்சாலை தொடர்ந்து இயங்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் அங்குப் பணியாற்றும் தொழிலாளர்களின் பணிபாதுகாப்பை உறுதி செய்துள்ளதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தையும் அம்மாநில அரசு பாதுகாத்துள்ளது. ஆனால், அதுபோன்றதொரு பணிபாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் தமிழ்நாடு அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்பது தொழிலாளர்களின் நல்வாழ்வின் மீது திமுக அரசிற்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பதையே காட்டுகிறது.

எனவே, தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக்கோரி, கடந்த ஒருவார காலமாக அமைதி வழியில் அறப்போராட்டங்களை முன்னெடுத்துவரும் ஃபோர்டு ஊழியர்களுக்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்கி, அவர்களின் நியாயமான பணிபாதுகாப்புக் கோரிக்கை வெல்லும்வரை துணைநிற்கும் என்று உறுதியளிக்கிறேன். மேலும், தமிழ்நாடு அரசு இனியாவது விரைந்து செயல்பட்டு, மூடப்படவுள்ள மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஈழச்சொந்தங்களுக்கான துயர்துடைப்பு உதவிப்பொருட்கள் சேகரிக்கும் பணிக்குழு 
அடுத்த செய்திபெருமகனார் நபிகள் நாயகத்தை அவமதித்து கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் மனஉணர்வுகளைக் காயப்படுத்திய பாஜக நிர்வாகிகள் நூபுர் சர்மாவையும், நவீன் ஜிண்டாலையும் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும். – சீமான் வலியுறுத்தல்