முதுகுளத்தூரில் மின்விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த தம்பி ஆரோனின் மரணத்திற்குக் காரணமான மின்வாரியத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

157

முதுகுளத்தூரில் மின்விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த தம்பி ஆரோனின் மரணத்திற்குக் காரணமான மின்வாரியத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒன்றியம், மணலூர் ஊராட்சிக்குட்பட்ட மணிப்புரத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் களப்பணியாளர் அன்புத்தம்பி சே.சி.ஆரோன் அவர்கள் மின்விபத்தில் சிக்குண்டு மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். வாழ வேண்டிய இளம் பருவத்தில் உயிரிழந்த தம்பியின் இறப்புச்செய்தி கேட்டு மனம்கலங்கி நிற்கிறேன். தம்பி ஆரோனை இழந்து வாடும் தம்பி மணிக்குமார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

மின்வாரியத்தினரின் அலட்சியப்போக்கால், குளியல் தொட்டியில் குளித்து கொண்டிருந்த பொழுது மின்கம்பி அறுந்து தலையில் விழுந்து மின்சாரம் பாய்ந்ததாலேயே தம்பி ஆரோன் மரணித்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. இதுபோன்ற விபத்துகள் ஏற்படக்கூடுமென முன்கூட்டியே எச்சரித்து, பலமுறை மனுகொடுத்தும் மின்வாரியத்தினர் அக்கறையற்று இருந்ததால் அநியாயமாக ஒரு உயிர் பறிபோயிருக்கிறது.

ஆகவே, தம்பி ஆரோனின் மரணத்திற்குக் காரணமான மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மீது துறைரீதியாகவும், சட்டரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இறந்துபோன தம்பி ஆரோனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி