வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ப்பதற்குத் தடைவிதித்துள்ள உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

127

வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ப்பதற்குத் தடைவிதித்துள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தேனி மாவட்டம் மேகமலையில், மலையடிவார மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்ப்பதால், புல்வெளிகள் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ப்பதற்குத் தடைவிதித்து உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள மேய்ச்சல் நிலங்களை நம்பி தொன்றுதொட்டு ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தொல்குடித் தமிழர்களின் வாழ்வாதாரத்தை நசித்து, அவர்களை வறுமையில் தள்ளுவதாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.

நீண்ட நெடிய மலைக்காடுகளும், பரந்து விரிந்திருக்கும் மலைச்சாரல் புல்வெளிகளும் இயற்கையாகவே தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்வதோடு, காடுகளில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவினை வழங்கும் ஆற்றலுடையது. யானை நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 250 கிலோவரை உணவு உட்கொள்ளும் வழக்கத்தை உடையன. அவற்றை ஒப்புநோக்கும்போது மனிதர்கள் வளர்க்கும் கால்நடைகள் மிகமிகக் குறைந்தளவு உணவையே உண்பதால், அவற்றால் மலைவளம் பாதிக்கப்படுவதாகக் கூறுவதும் ஏற்புடையதல்ல. மேலும், இயற்கையிலேயே வலுவான நோய் எதிர்ப்புச்சக்தி கொண்ட வன விலங்குகளுக்கு, கால்நடைகளால் நோய் பரவுகின்றது என்பதும் அடிப்படை ஆதாரமற்றதாகும்.

அதுமட்டுமின்றி, வன உயிரினங்கள் பெருமளவு அழிந்துவிட்ட தற்காலச் சூழலில் இயற்கை சமநிலைப் பேணுவதில், மனிதர்களால் வளர்க்கப்படும் கால்நடைகள் பெருமளவு பங்கு வகிக்கிறது என்பதே எதார்த்த உண்மையாகும். எனவே, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வனப்பகுதியை ஒட்டியுள்ள மேய்ச்சல் நிலங்களில் தமிழ்நாட்டுத் தொல்குடிகள் கால்நடைகளை மேய்த்து வரும் நிலையில், திடீரெனத் தற்போது கால்நடைகளால் புல்வெளிகள் அழிக்கப்படுவதாகக் கூறுவது ஏற்புடையதல்ல.

இயற்கையோடு இயந்த தமிழர்களின் மரபுவழி வேளாண்மையை அழித்து முடித்துவிட்டு, விதைகளுக்காகவும், செயற்கை உரங்களுக்காகவும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையேந்தி நிற்கும் அவல நிலையை உருவாக்கியுள்ளதைப்போல, மரபுவழி கால்நடைத்தொழிலை அழித்து, தொல்குடித் தமிழர்களை ஆடு, மாடு வளர்ப்பினை விட்டு வெளியேற்றுவதற்கான பன்னாட்டு நிறுவனங்களின் சதித்திட்டமாக இது இருக்குமோ என்ற சந்தேகத்தையும் மேய்ச்சல் பெருங்குடி மக்கள் எழுப்புகின்றனர்.

அதுமட்டுமின்றி, மலைக்காடுகளையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டுமென்று உண்மையான அக்கறை இருக்குமாயின், ஒவ்வொருநாளும் காடுகளில் முறைகேடாக மரங்கள் வெட்டப்பட்டு டன் கணக்கில் கடத்தப்படுவதையும், சொகுசு விடுதிகள், அடுக்குமாடி கட்டிடங்கள், தண்டவாளங்கள், சாலைகள், தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு கருவிகள், அறிவியல் ஆய்வகங்கள் ஆகியவை அமைப்பதற்காக, வன விலங்குகளின் வாழ்விடங்களும், வழித்தடங்களும் சுருக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை எடுப்பதே சரியானதாக இருக்கும்.

ஆகவே, தமிழர்களின் மேய்ச்சல் மரபுரிமையைப் பறிக்கின்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, ஆடு, மாடு மேய்க்கும் தொல்குடி தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்திட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி