‘சாட்டை’ துரைமுருகன் மீது பொய்வழக்குப் புனைந்துச் சிறைப்படுத்தி, பழிவாங்குவது கொடுங்கோன்மையின் உச்சம்! – சீமான் கடும் கண்டனம்

772

‘சாட்டை’ துரைமுருகன் மீது பொய்வழக்குப் புனைந்துச் சிறைப்படுத்தி, பழிவாங்குவது கொடுங்கோன்மையின் உச்சம்! – சீமான் கடும் கண்டனம்

தமிழ்த்தேசிய ஊடகவியலாளரும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது மீண்டும் பொய்வழக்குப் புனைந்து, அவரைக் கைதுசெய்து சிறைப்படுத்தியிருக்கும் திமுக அரசின் செயலானது வன்மையானக் கண்டனத்திற்குரியது. அரசியல் பழிவாங்கும்போக்கோடு அவர் மீது ஏவப்படும் தொடர் அடக்குமுறைகளும், கடும் ஒடுக்குமுறைகளும், அடுத்தடுத்த வழக்குகளும் கருத்துரிமைக்கு எதிரான சனநாயகத்தை அழிக்கிற அரசதிகாரக்கொடுஞ்செயல்களாகும்.

பாக்ஸ்கான் ஆலைத்தொழிலாளர்கள் போராட்டம் குறித்த செய்தியைப் பேசியதற்காகவே, அவர் மீது அவதூறு வழக்குத்தொடுத்து, கலவரத்தைத் தூண்ட முயன்றாரெனக் கூறி அதனைத் திரித்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றவழக்கைப் பதிவுசெய்திருப்பது எதன்பொருட்டும் ஏற்றுக்கொள்ள முடியாத பெருங்கொடுமையாகும். வழக்கமாகக் கடைபிடிக்கப்படும் எந்த சட்ட நடைமுறைகளும் கடைபிடிக்கப்படாமல் ஆள்கடத்தல் போல அத்துமீறி நுழைந்து, அவரைக் கைதுசெய்து, அவரது குடும்பத்தினருக்குக்கூட தகவல்தராது, அவரது மனைவி, பிள்ளைகளை அலைக்கழிப்பு செய்தது சனநாயகம் மாண்புகளுக்கும், சட்ட நெறிமுறைகளுக்கு எதிரான அதிகார அத்துமீறலாகும்.

தனிப்பெரும் முதலாளிக்குச் சொந்தமான பாக்ஸ்கான் எனும் தொழிற்சாலையில் நடந்த அநீதிக்கெதிராகப் போராடிய பெண்பிள்ளைகள் மீது காவல்துறையினர் கொடுந்தாக்குதலை ஏவுவதும், போராடும் பெண்களுக்கு ஆதரவுதெரிவிக்கச் செல்வோரையும், அவர்களுக்கு ஆதரவாகக் கருத்துப்பரப்புரை செய்வோரையும் கொடுஞ்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்துவதும் கொடுங்கோன்மையாகும்.
பாதிக்கப்பட்ட மண்ணின் மக்களுக்கு ஆதரவாக நிற்காது, பன்னாட்டு நிறுவனத்தின் பக்கம்நின்று, அவர்களுக்காகக் காவல்துறையை ‌ ஏவல் ஆட்கள் போல பயன்படுத்துவதும் மண்ணின் பிள்ளைகளைத் தனிப்பெரு முதலாளிக்காக அடித்து உதைப்பதுமான செயல்கள் இங்கே நடப்பது மக்களுக்கெதிரான காட்டாட்சி என்பதை உறுதி செய்கிறது.

மண் மீதும், மக்கள் மீதும் பற்றுறுதி கொண்ட மாசற்ற இளைஞனான என் தம்பி துரைமுருகன் சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தும் அளப்பெரியத் தாக்கத்தை சகிக்க முடியாது, ஆட்சி அதிகாரத்தால் தொடர்ச்சியாக அவரைக் கைது செய்து, உளவியலாக அச்சுறுத்தி அவரை முடக்க நினைப்பது திமுக அரசின் பாசிசப்போக்கின் உச்சமாகும்.

ஆறுமாதக்காலத்தில் மூன்றாவது முறையாக தம்பி துரைமுருகனைச் சிறைப்படுத்தும் திமுக அரசு, எச்.ராஜா மீதும், சுப்ரமணியசுவாமி மீது வழக்குத் தொடுக்க வக்கற்று நிற்பதேன்? அவர்கள் மதமோதலை உருவாக்கும்விதமாகவும், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும்விதமாகவும் பேசியதற்கான சான்றுகள் இருக்கும்போதும் அவர்கள் மீது சட்டநடவடிக்கைகளைப் பாய்ச்ச திமுக பயப்படுவதேன்? மாரிதாஸ் மீதான வழக்கே ரத்தாகும்வண்ணம் வலுவில்லாத வாதத்தை முன்வைத்து, பணிந்ததேன்? எதற்காகவாவது இந்த விடியல் அரசிடம் பதிலுண்டா? கடந்த காலங்களில் அதிகாரத்திமிரிலும், பதவிபோதையிலும் வெறிபிடித்து அலைந்த பெரும் பெரும் ஆட்சியாளர்களும், மன்னர்களும் வீழ்ந்தழிந்த வரலாறு தெரியுமா ஐயா ஸ்டாலினுக்கு? ஆணவமும், அதிகார மமதையும் கொண்டு மண்ணின் மக்கள் மீதும், போராளிகள் மீதும் ஒடுக்குமுறையை ஏவியக் கொடிய ஆட்சியாளர்களைக் காலமும், மக்களும் தூக்கியெறிந்ததெல்லாம் தெரியுமா ஐயா ஸ்டாலினுக்கு?

ஒருவர் எதிர்க்கருத்து பேசுகிறாரென்பதாலோ, ஆட்சியை பற்றி விமர்சனம் வைக்கிறாரென்பதாலோ அவரைக் குறிவைத்து கைதுசெய்து சிறையிலடைத்து அச்சுறுத்த முனைவது கொடுங்கோல் தனத்தின் வெளிப்பாடேயாகும்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்

எனும் தமிழ்மறையோன் வள்ளுவப்பெருந்தகையின் கூற்றையும், அதற்கு ஐயா கருணாநிதி எழுதிய பொழிப்புரையையுமாவது அறிவாரா ஐயா ஸ்டாலின்? தொடர்ச்சியானக் கைதுகள் மூலம் சாட்டை துரைமுருகன் மீது அரச வன்முறையை நிகழ்த்திய திமுக அரசு தான் இழைக்கிற அநீதிகளுக்கு எல்லாம் விரைவில் மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

எனவே, தம்பி சாட்டை துரைமுருகன் மீதான பொய்வழக்குகளைத் திரும்பப் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமுத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் 27ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | தலைமையகம்
அடுத்த செய்திவேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்