வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்கள், மருத்துவ சேவையைத் தொடங்க பல இலட்ச ரூபாய் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

367

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்கள், மருத்துவ சேவையைத் தொடங்க பல இலட்ச ரூபாய் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

வெளிநாட்டில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஓராண்டுக் கட்டாய மருத்துவ சேவை Compulsory Rotatory Residential Internship (CRRI) புரிவதற்கான அனுமதியைப் பெறுவதற்கு 6 இலட்ச ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன. மருத்துவப் படிப்பிற்கே பல இலட்ச ரூபாய் பணம் செலவழித்த நிலையில் மேலும் அவர்களைக் கசக்கிப் பிழியும் வகையில் கட்டணம் செலுத்த வற்புறுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது.

நீட் தேர்வுகளால் மருத்துவ வாய்ப்பு பறிபோன மாணவர்கள், கல்வி உதவித்தொகை, கல்விக்கடன் உள்ளிட்ட உதவிகளைப் பெற்றே வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் பயின்று திரும்புகின்றனர். நாடு திரும்பியவுடன் இந்திய மருத்துவக் கழகத்தின் விதிப்படி நீட் தேர்வுக்கு இணையான FMGE (Foreign Medical Graduate) என்ற தகுதித்தேர்வை எழுத வேண்டியுள்ளது. அதில் தேர்ச்சியுற்றுச் சான்றிதழ் பெற்றபிறகு, தமிழ்நாடு மருத்துவக் கழகத்திலும் பதிவு செய்வதுடன், தடையில்லா சான்றிதழும் (NOC) பெறவேண்டும். இவ்வாறு பல்வேறு தடைகளைத் தாண்டி மருத்துவப் பட்டம் பெற்ற மாணவர்கள் சுமார் 600 பேர் தமிழகத்தில் மருத்துவப் பணிபுரிய விண்ணப்பித்துக் காத்திருக்கின்றனர்.

ஆனால் மருத்துவப் படிப்பினை முடித்த மாணவர்களுக்கான ஓராண்டு மருத்துவப் படிப்புடன் கூடிய கட்டாய மருத்துவ சேவையில் சேர்வதற்கு, வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு மட்டும் 6 இலட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அரசு விதித்துள்ள கட்டணம் என்றுகூறி 3,50000 ரூபாயும், மாணவருக்குத் தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்கும் மருத்துவக் கல்லூரிக்கு 2,00000 ரூபாயும் கட்டணமாகச் செலுத்தவேண்டியுள்ளது. ஆகமொத்தம் ஏறத்தாழ 6 இலட்ச ரூபாய் அளவுக்கு வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களிடம் கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகப் பெற்றோர்களும் மாணவர்களும் மிகுந்த வேதனை தெரிவித்துவருகின்றனர். மேலும் இந்தியாவில் வேறு எந்தவொரு மாநிலத்திலும் இவ்வாறு வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற ஒரே காரணத்திற்காக மாணவர்களிடம் அம்மாநில அரசுகள் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லையெனப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவிவரும் இப்பேரிடர் காலக்கட்டத்தில் உயிர்காக்கும் மருத்துவர்களின் உன்னதப் பணி எவ்வளவு இன்றியமையாதது என்பதை உலகம் நன்கு உணர்ந்து இருக்கும் வேளையில் ஏற்கனவே பல இலட்ச ரூபாய்கள் செலவழித்து வெளிநாடுகளில் தங்கி மருத்துவம் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் மருத்துவ சேவையைத் தொடங்குவதற்கு அனுமதி அளிக்க அரசே கையூட்டு பெறுவது போன்று மேலும் பல இலட்சங்களைக் கட்டணமாகச் செலுத்த வற்புறுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக் குறித்து தமிழ்நாடு அரசு அமைதி காப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

எனவே வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் மருத்துவ சேவையைத் (CRRI) தொடங்குவதற்கு இலட்சக்கணக்கான ரூபாயைக் கட்டாயப்படுத்திக் கட்டணமாக வசூலிக்கும் நடைமுறையை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்து உத்திரவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி‘தமிழ்ச் சமூக மையம்’ அமைத்துக்கொடுக்க முன்வந்த கனடா அரசுக்கு உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி!
அடுத்த செய்தி‘ஒன்றியம்’ எனும் வார்த்தையைக் கூறியே ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், அம்மையார் மம்தா பானர்ஜியைப் போல உளமார பாஜக அரசின் கொடுங்கோன்மையை எதிர்க்க திமுக அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்