கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானமின்றித் தவிக்கும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

328

அறிக்கை: கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானமின்றித் தவிக்கும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

கொரோனா பரவல் காரணமாக அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் அவற்றில் பணிபுரிந்த இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் வருமானமின்றித் தவித்து வருவதும், தனியார் பள்ளிகள் முழுவதுமாகக் கைவிட்ட நிலையில் தமிழக அரசும் அவர்களைக் கண்டுகொள்ளாதிருப்பதும் மிகுந்த வேதனையைத் தருகிறது.

ஊரடங்கு போடப்பட்ட கடந்தாண்டிலிருந்து அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முழுச்சம்பளமும் வழங்கப்பட்டு வரும் நிலையில், பல தனியார் பள்ளிகளோ ஐம்பது விழுக்காடு ஆசிரியர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தி, அவர்களுக்கும் மிகக்குறைவான ஊதியத்தையே வழங்கி வருகின்றன. இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் செய்வதறியாத நிலையில் வேறு வேலையின்றி, வருமானத்திற்கு வேறு வாய்ப்பின்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், தங்கள் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைகூட நிறைவேற்ற முடியாத இயலாமை நிலை காரணமாக மனவுளைச்சலுக்குள்ளாகி, வாழ்விற்கும் சாவிற்கும் இடையே போராடிவருகிறார்கள்.

ஆகவே, வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் உழலும் இலட்சக்கணக்கான தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு தற்காலிகத் துயர்துடைப்பு நிதியாக ரூபாய் பத்தாயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். மாணவர்களுக்கு எவ்விதச் சலுகையும் காட்டாமல் முழுக்கட்டணத்தையும் வசூலிக்கும் தனியார் பள்ளிகள், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதுபோல முழுமையான சம்பளத்தையும் வழங்க முடியாவிடினும் குறைந்தப்பட்சமாக அவர்களது வாழ்வாதாரத்தைப் பேணுகிற வகையில் 50 விழுக்காடு ஊதியத்தையாவது தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டியது பேரவசியமென்பதை உணர்ந்து அதனைச் செயலாற்ற தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டுமென அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி, ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிப்பெற்று பணி நியமனம் செய்யப்படாமல் பல ஆண்டுகளாகக் காத்திருப்பவர்களுக்கு உடனடியாகப் பணியாணை வழங்க வேண்டுமெனவும், ஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது வரம்பை 40 லிருந்து 57 ஆக மீண்டும் உயர்த்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து இலட்சத்தீவுகளுக்கான நிர்வாகி பிரஃபுல் கோடா பட்டேலை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபத்மநாதபுரம் தொகுதி சாலையை சீரமைக்கும் பணி