பள்ளிக்கல்வி இயக்குநரகத்தை ரத்து செய்து, ஆணையமாக மாற்ற முடிவெடுத்திருப்பது பள்ளிக்கல்வித்துறையின் நலனைப் பாதிக்கும் மிகத்தவறான நிர்வாக முடிவு! – சீமான் கண்டனம்

656

அறிக்கை: பள்ளிக்கல்வி இயக்குநரகத்தை ரத்து செய்து, ஆணையமாக மாற்ற முடிவெடுத்திருப்பது பள்ளிக்கல்வித்துறையின் நலனைப் பாதிக்கும் மிகத்தவறான நிர்வாக முடிவு! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

பள்ளிக்கல்வித்துறையில் நீண்டகாலமாக நடைமுறையிலிருக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் எனும் பதவியினை நிர்வாகச்சீர்திருத்தம் எனும் பெயரில் ரத்து செய்து ஆணையமாக மாற்ற முடிவெடுத்து, தமிழக அரசு செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. அரசின் இம்முடிவு கல்வியாளர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் பல்வேறு விதமான குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

கல்வி முறைமைக்கு என்றுமே அடித்தளம் பள்ளிக்கல்வி என்கிற அளவில் பள்ளிக்கல்வி நிர்வாகத்தை, பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர், தலைமை ஆசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர், மண்டலக் கல்வி அலுவலர் எனக் கால அனுபவம் சார்ந்து படிப்படியாகப் பொறுப்பு உயர்வு பெற்றுதான் பள்ளிக்கல்வி இயக்குநராக முடியும் என்பது மிகச்சிறந்த அனுபவத்தைக் கொண்டவராகவும், நிர்வாகத்திறன் பெற்றவராகவும் பள்ளிக்கல்வி இயக்குனர் அமைவதற்கு வழிவகுத்தது. இப்படி அனுபவம்மிக்க, நிர்வாகத்திறன் வாய்ந்த ஒரு பொறுப்பினை முற்றாக ரத்துசெய்து ஆணையமாக மாற்ற உத்தரவிட்டிருப்பது மிகத்தவறான நிர்வாக முடிவாகும்.

பள்ளிக்கல்வி இயக்குநர் பொறுப்பை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக அவரது பொறுப்புகளை பள்ளிக்கல்வி ஆணையரே மேற்கொள்வார் என்பது ஏற்கத்தக்கதல்ல. பள்ளிக்கல்வி ஆணையர் பதவி என்பது ஐ.ஏ.எஸ். படித்த நிர்வாக அதிகாரிகளுக்கானது. அவர்களுக்கு பள்ளிக்கல்வி முறைமை குறித்தும், பள்ளி ஆசிரியர்களின் சிக்கல்கள், மாணவ மாணவியரின் தேவைகள், பாடத்திட்டச் சிக்கல்கள் குறித்த அடிப்படை அனுபவ அறிவும், நடைமுறைச்சிக்கல்கள் சார்ந்த தீர்வுகள் எடுக்கும் திறனும் இருக்கும் என எதிர்பார்ப்பது தவறானது எனவே, பள்ளிக்கல்வி இயக்குநரகத்தை மூடிவிட்டு அதை ஆணையமாக மாற்றும் தமிழக அரசின் முடிவு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் அச்சப்படுவது முழுக்க முழுக்க நியாயமானது. அதுவும் பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியை ரத்து செய்வது குறித்து பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறையைச் சார்ந்த நிர்வாகிகள் இவர்களுக்கிடையே எந்தக் கருத்து கேட்புக் கூட்டமும் நடக்காத சூழலில் தமிழக அரசு திடீரென இம்முடிவை அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. பள்ளிக்கல்வித்துறையின் நலனைப் பாதிக்கும் இம்முடிவு ஆசிரியப் பெருமக்களிடையேயும், கல்வியாளர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஆகவே, மாணவர்கள், ஆசிரியர்களின் நலனை மனதிற்கொண்டு பள்ளிக்கல்வி இயக்குநரகத்தை ஆணையமாக மாற்றும் முடிவைக் கைவிட்டு, ஏற்கனவே நடைமுறையிலிருந்த பழைய முறையையே பின்பற்ற வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமதுரை வடக்கு தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திசேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி மே 18 இன எழுச்சி நாள் நினைவுட்டும் நிகழ்வு