சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தைச் சுற்றி “மீன்பிடித் தடை பகுதி” என்று அறிவிக்குமாறு கோரி அதானி நிறுவனம், தேசிய நீர்ப்பரப்புகள் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

1013

சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தைச் சுற்றி “மீன்பிடித் தடை பகுதி” என்று அறிவிக்குமாறு கோரி அதானி நிறுவனம், தேசிய நீர்ப்பரப்புகள் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அதானி நிறுவனம், தங்கள் காட்டுப்பள்ளி துறைமுகத்தைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை “மீன்பிடி தடை பகுதி” என்று அறிவிக்கக் கோரி இந்திய அரசின் தேசிய நீர்ப்பரப்புகள் அலுவலகத்திற்கு விண்ணப்பித்துள்ளது என்று தெரியவருகிறது. கடந்த 26/08/2019 என தேதியிட்ட அந்தக் கடிதத்தில் மீனவர்களின் படகுகளும் வலைகளும் கப்பல்களின் பாதுகாப்பிற்கு அபாயமாக உள்ளன என குறிப்பிட்டு, துறைமுகத்தைச் சுற்றி மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கக் கோரி அதானி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. சென்னையைச் சார்ந்த மீனவர் சரவணன் என்பவர் தமிழ்நாடு கடல்சார் வாரியத்திடம் தாக்கல் செய்த தகவல் உரிமை கோரிக்கைக்கு விடையாக கடந்த 9/03/2021 அன்று இந்தக் கடிதம் பெறப்பட்டுள்ளது.

அதிகரிக்கின்ற கப்பல் போக்குவரத்து நெரிசல் தான் மீனவர்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் அபாயமானதே தவிர, காலம் காலமாக அந்த பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களை கப்பல்களுக்கு அபாயம் என்று கூறுவது ஆகச்சிறந்த முட்டாள்தனம். வெறும் நான்கு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தான் இந்தப் பகுதியில் மீன் பிடிக்கிறார்கள் என்று சுருக்கிவிட முடியாது. திருவொற்றியூர், எண்ணூர், பழவேற்காடு போன்ற பகுதிகளிலிருந்தும் அந்தப் பகுதியில் மீன்பிடிக்கப் படகுகள் வருகின்றன என மீனவர்களே தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இயங்கி வரும் சிறிய அளவு துறைமுகத்திற்கே (330 ஏக்கர்) சுமார் 7.7 சதுர கிலோமீட்டர் அளவு “மீன்பிடி தடை பகுதி” கோரப்பட்டுள்ள நிலையில், இன்னும் துறைமுக விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால் (6111 ஏக்கர்) எவ்வளவு பெரிய “மீன்பிடி தடை பகுதி” கோரப்படும் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை. அது அந்தப் பகுதியின் மீன்பிடி தொழிலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2008இல் L&T நிறுவனம் அங்கு துறைமுகம் அமைக்கும் போதே பல மீனவர்களின் நிலம் மற்றும் கடற்கரை நிலம் பறிக்கப்பட்டது. அதன் விளைவாக, கடலுக்கு செல்லவும், பிடித்த மீன்களை சந்தைகளுக்கு எடுத்து வரவும் மீனவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடற்கரையோர கிளிஞ்சல்களை பொறுக்கி விற்று வந்த பெண்களின் வருமானமும் பறிக்கப்பட்டது. இந்த நிலையில், மீதமிருக்கும் கடல் பரப்பையும் பறிப்பது என்பது மிகக் கொடுமையான செயலாகும்.

ஆக, பல்வேறு காரணங்களால் ஏற்கனவே அப்பகுதி மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வரும் நிலையில், அதானி துறைமுக நிறுவனத்தின் செயல்பாடுகளும், விரிவாக்கத் திட்டமும் அங்கு எஞ்சியுள்ள மீன்பிடி மண்டலங்களுக்கு ஏற்படுத்தவிருக்கும் சேதங்களை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. எவ்வளவு சிக்கல்களும் அச்சுறுத்தல்களும் வந்தாலும், நானும் நாம் தமிழர் கட்சியும், காட்டுப்பள்ளி மீனவர்களுடனும் மக்களுடனும் எல்லா நிலைகளிலும் துணை நின்று, ஒருபோதும் இது போன்ற மீன்பிடி தடை செயல்பாடுகளையும், துறைமுக விரிவாக்கத்தையும் அனுமதிக்க மாட்டோம் என உறுதியளிக்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி