நபிகள் பெருமகனாரை இழிவுபடுத்திய பாஜக கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்க! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி
இறைத்தூதரென்று உலகெங்கும் வாழும் இசுலாமிய மக்களால் பெரும் மதிப்போடு பின்பற்றக்கூடிய போற்றுதற்குரியப் பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களை இழித்துரைத்து அவமதிப்பு செய்யும் வகையில் பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
(1/2) pic.twitter.com/HK52vWB9G6
— சீமான் (@SeemanOfficial) February 1, 2021
இறைத்தூதரென்று உலகெங்கும் வாழும் இசுலாமிய மக்களால் பெரும் மதிப்போடு பின்பற்றக்கூடிய போற்றுதற்குரியப் பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களை இழித்துரைத்து அவமதிப்பு செய்யும் வகையில் பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மதத்துவேசத்தோடும், மக்களைப் பிரித்தாண்டு கலவரம் செய்யும் உள்நோக்கத்தோடும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எழுதி வரும் கல்யாணராமன் தற்போது நபிகள் பெருமகனாரைக் கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது எதன் பொருட்டும் சகிக்க முடியாதவை.
தமிழகத்தில் காலூன்றவும், அரசியல் செய்திடவும் வழியற்ற பாஜக, கல்யாணராமன் போன்ற மூன்றாந்தர ஆட்களைக் கொண்டு நச்சுக்கருத்துகளையும், கொச்சையான விமர்சனங்களையும் தொடர்ச்சியாக முன்வைத்து அதன்மூலம் கலவரங்களையும், மதப்பூசல்களையும் உருவாக்கிட முனைவது கீழ்த்தரமான, இழிவான அரசியல் போக்காகும். அதனை ஒருபோதும் தமிழர் நிலமும், தமிழ் மக்களும் அனுமதிக்க மாட்டார்கள் என இதன் மூலம் எச்சரிக்கிறேன்.
ஆகவே, மதக் கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள கல்யாணராமனை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் உடனடியாகக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மத அடிப்படைவாதத்தைத் தூண்டிவிட்டு சமூக நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிப்போர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி