ஆசிரியர் பணித்தேர்வில் தேர்ச்சிபெற்று பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் பார்வை மாற்றுத்திறனாளியினருக்கு உடனடியாகப் பணியாணை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

1149

ஆசிரியர் பணித்தேர்வில் தேர்ச்சிபெற்று பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் பார்வை மாற்றுத்திறனாளியினருக்கு உடனடியாகப் பணியாணை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

ஆசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வு ( NET) மற்றும் மாநில தகுதித் தேர்வு ( SET) ஆகிய தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பும் முடிந்து காத்திருக்கும் பார்வை மாற்றுத்திறனாளியினருக்கு இன்றுவரை பணியாணை வழங்காமல் தமிழக அரசு இழுத்தடிப்பு செய்துவருவது வன்மையான கண்டனத்திற்குரியது. மாற்றுத்திறனாளிகளைக் கனிவோடு நடத்தி அவர்களது தன்மானமிக்க நல்வாழ்விற்கு உறுதுணையாக இருக்க வேண்டிய அரசு, அவர்களை இத்தனை ஆண்டுகள் காக்க வைத்து, வீதியில் இறங்கிப் போராட வைத்திருப்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

2013ஆம் ஆண்டுச் சென்னையில் வாழ்வாதார உரிமைக்காகப் போராடிய பார்வை மாற்றுத்திறனாளிகளைச் சிறிதும் மனச்சான்று இன்றிக் காவல்துறையால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு 75 கிமீ தொலைவிற்கு அப்பால் இறக்கிவிடப்பட்டதை உயர்நீதிமன்றமே கடுமையாகக் கண்டித்ததோடு இதுபோன்ற அடக்குமுறைகளை மாற்றுத்திறனாளிகள் மீது இனி கையாளக் கூடாது என்றும் எச்சரித்தது. ஆனால் பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் இன்றளவும் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்பதும், அதற்காகப் போராடும் மாற்றுத்திறனாளிகள் மிகக் கடுமையாகத் தாக்கப்படுவதும் பெரும் வேதனையளிக்கிறது.

கல்வி கற்பதில் தொடங்கி, போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வது வரை வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் உடலளவிலும், மனதளவிலும், சமூக அளவிலும் பெரும் சவால்களை எதிர்கொண்டு, பல்வேறு தடைகளைத் தாண்டித்தான் ஆசிரியர் பணித்தேர்வு உள்ளிட்ட உயரிய பணியிடங்களுக்குத் தங்களை அணியமாக்கி வெற்றிபெறுகின்றனர். யாரையும் சார்ந்திராது தன்மானத்தோடு வாழும் வகையில் தங்களுடைய கடினமான முயற்சியாலும், அயராத உழைப்பாலும் ஆசிரியர் பணித்தேர்வில் வெற்றிபெற்றுச் சான்றிதழ் சரிபார்ப்புவரை முடித்தும் பணியாணை வழங்காமல் காலங்கடத்துவதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக உரிமைக்காக அறவழியில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்திவரும் பார்வை மாற்றுத்திறனாளிகளை இனியும் போராடி துன்பமுறச் செய்யாமல் அவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளுக்குச் செவிமடுக்க வேண்டும். 2013ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சிபெற்றுச் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து, பணிக்காகக் காத்திருக்கும் அனைத்து பார்வையற்றோருக்கும் உடனடியாக ஆசிரியர் பணிநியமன ஆணை வழங்க வேண்டும். கல்லூரி உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வில் (NET/SET) தேர்ச்சி பெற்றுப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிப் பேராசிரியர் பணியினை உடனடியாக வழங்க வேண்டும்.

2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 107 மற்றும் 108ன் படி அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், அரசு உதவிப்பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் வருகை விரிவுரையாளர்களாகப் பணியமர்த்தப்பட்ட அனைத்து பார்வை மாற்றுத்திறனாளிகளையும் எவ்வித பாகுபாடுமின்றி அரசுக் கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியர்களாகப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். மேலும், இவ்வரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பணி நியமனம் செய்யாத கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தைத் திரும்பப்பெற உத்தரவிட வேண்டும். அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் போன்றவற்றில் மாற்றுத் திறனாளிகள் சட்டம் 1995, மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 ஆகிய சட்டங்களில் குறிப்பிட்டுள்ளபடி பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு விழுக்காடு இட ஒதுக்கீட்டினை முறையாகக் கணக்கிட்டு, அனைத்து துறைகளிலும் உடனடியாகச் சிறப்பு ஆட்சேர்ப்பு மூலமாகப் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பார்வை மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி அவர்களின் நீண்டகாலத் துயர் துடைக்க வேண்டுமென்று நாம்தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி – கொடிகம்பம் நடுவிழா
அடுத்த செய்திஅங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, சரியான சமமான ஊதியம் வழங்கிட தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்