தலைவரின் நன்மதிப்பைப் பெற்ற மூத்த ஊடகவியலாளர் ஐயா அப்துல் ஜப்பார் மறைவுற்றாலும் காலம் கடந்தும் மக்கள் மனங்களில் நிலைத்திருப்பார்! – சீமான் புகழாரம்

331

தலைவர் பிரபாகரன் அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற மூத்த ஊடகவியலாளர் ஐயா அப்துல் ஜப்பார் அவர்கள் மறைவுற்றாலும் காலம் கடந்தும் மக்கள் மனங்களில் நிலைத்திருப்பார்! – சீமான் புகழாரம்

உலகத்தமிழர்களால் நன்கறியப்பட்ட வானொலி அறிவிப்பாளரும், மூத்த ஊடகவியலாளருமான மதிப்புக்குரிய ஐயா சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் மறைந்தார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத்தாருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவராவர். கிளிநொச்சி சர்வதேசப் பத்திரிகையாளர் மாநாடு முடிந்த பின்னர், தலைவர் பிரபாகரன் அவர்கள் தனிப்பட்ட முறையில் விரும்பிச் சந்தித்த ஊடகவியலாளர் ஐயா ஜப்பார் அவர்களாவார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அச்சந்திப்பை, ‘அழைத்தார் பிரபாகரன்’ எனும் நூலாக எழுதிய ஐயா ஜப்பார், “குழந்தையைப் போல ஓடிச்சென்று கட்டிப்பிடிக்க ஆசை. ஆனால், ஆயுதமேந்திய அந்த இளைஞர்கள் ஒரு கணம் என் எண்ணத்தில் மின்னி மறைந்தனர். என்னையும், எனது எண்ணத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு சிலையாக நின்றேன். என்னை நெருங்க, நெருங்க அவருடைய நடையின் வேகம் கூடுகிறது. நெருங்கி வந்து அப்படியே கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்கிறார். அவரது தாடை என் தோளில். இன்னும் பிடி இறுகுகிறது” என நெகிழ்ந்து பதிவு செய்திருக்கிறார். அவரது எழுத்துக்குப் பெரும் ரசிகன் எனத் தலைவரே மனம்திறந்து பாராட்டுரைக்கும் அளவுக்கு, தலைவரது உள்ளத்துக்கு நெருக்கமாகத் திகழ்ந்தார் ஐயா ஜப்பார். வானொலி அறிவிப்பாளராக மட்டுமல்லாது பெரும் எழுத்தாளராகவும் திகழ்ந்த ஐயா ஜப்பார் அவர்கள் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். ஊடகத்தளத்திற்கு அவர் ஆற்றிய அரிய பல பங்களிப்புகளுக்காக எண்ணற்ற விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறார். அவரது மறைவு உலகத்தமிழர்களிடையே பெருந் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழுக்குத் தொண்டு செய்தோர் காலத்தால் அழிவதில்லை எனும் முதுமொழிக்கேற்ப, வாழ்ந்து மறைந்த ஐயா அப்துல் ஜப்பார் அவர்கள் இம்மண்ணைவிட்டு நீங்கினாலும் தமிழர்களின் நெஞ்சைவிட்டு ஒருநாளும் அகலப்போவதில்லை. தலைமுறைகள் பல கடந்தும் மக்கள் மனங்களில் நிலைத்திருப்பார்.

ஐயாவுக்கு எனது புகழ் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி