தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட தாயகப்பெருவிழாவை தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி மாநிலம் முழுக்கக் கொண்டாடுவோம்!

431

தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட தாயகப்பெருவிழாவை தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி மாநிலம் முழுக்கக் கொண்டாடுவோம்!
– சீமான் பேரழைப்பு

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ எனப் போற்றிக் கொண்டாடுமளவுக்குப் பரந்து விரிந்த நிலப்பரப்பைக் கொண்ட தமிழ்நாடு, திராவிட -தேசிய கட்சிகளின் அரசியல் தவறுகளால் தனது நிலப்பகுதிகளைப் பெருமளவு இழந்தபோதும் தமிழர்கள் தேசிய இனம் எனப் பறைசாற்றும் பெருமையோடு தமிழர்களின் பெருந்தாயகமாகவும் பன்னெடுங்காலமாகத் திகழ்கிறது.

தமிழ்நாடு தனித்தப் பெருந்தேசமாக விளங்கியதும், தமிழ்நாடு, தமிழகம் எனப் பண்டைய காலத்திலேயே அழைக்கப்பட்டதையும் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு அறியத் தருகின்றன. அந்நிலப்பரப்பு இன்று இந்திய ஒன்றிய அரசின் கீழ் மாநிலமாகயிருந்தாலும் தமிழர்கள் என்ற ஒரு தனித்த தேசிய இனத்தின் தாய் நிலமாகத் திகழ்ந்து அதற்கான இருக்கிற பண்பாட்டு விழுமிய குணங்களோடு விளங்கி இந்தியப் பெருநாட்டிற்கே முன்மாதிரியாக ஒளிர்கிறது.

உலகில் வாழும் பல்வேறு தேசிய இனங்கள் தாங்கள் வாழும் நிலப்பரப்பில் தங்கள் தாய்மொழியின் அடிப்படையிலேயே நாடுகளாக உருவாகி தங்களுக்கெனப் பண்பாட்டு அடையாளங்களோடு திகழ்ந்து வருகின்றன. மொழி தான் ஒரு தேசிய இனத்தின் முகமும், முகவரியுமாகத் திகழ்கிறது.
அந்தவகையில் இந்திய ஒன்றிய அரசின் கீழ் வாழ்கின்ற பல்வேறு தேசிய இனங்கள் மொழிவாரியாக மாநிலங்களாக 1956 ஆம் வருடம் பிரிந்தன. அதன் தொடர்ச்சியாக
உலகெங்கும் பரவி வாழும் 12 கோடிக்கும் மேலான தமிழர்களுக்கும் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு ஒரு மாநிலமாக 1956ஆம் வருடம் நவம்பர் 1ஆம் தேதி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. பிற மொழி இனத்தாரின் குடியேற்றங்களாலும், நில ஆக்கிரமிப்புகளாலும், திராவிட -தேசிய அரசியல் கட்சிகளின் சிந்தனையற்ற அரசியல் நடவடிக்கைகளாலும் நமது தாயக நிலத்தின் பூர்வீக நிலப்பரப்பில் முக்கியமான பகுதிகள் அண்டை மாநிலங்களுக்கு இந்திய ஒன்றிய அரசால் தாரைவார்க்க பட்ட நிலை இருந்தாலும், தமிழர்களின் தாய் நிலமான தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் நாள் வரலாற்றுச் சிறப்புக் கொண்ட பெருநாளாகும்.

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தமிழ்த்தேசியப் பேரினம் இன்றைக்கு மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, வாழ்வியல், நாகரீகம், பழக்கவழக்கம், தொன்றுதொட்ட வேளாண்மை, மெய்யியல் மரபு, வழிபாட்டுரிமை என இனத்தின் அத்தனை தொன்மக்கூறுகளையும் இழந்து நிற்கையில், தமிழீழம் எனும் தமிழர்களின் இன்னொரு தாய் நிலமே மொத்தமாய் அபகரிக்கப்பட்டு, தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆட்படுத்தப்பட்டு உலக அரங்கில் நீதிகேட்டு அலைகையில் இன ஓர்மையினால் விளையும் பேரெழுச்சி தமிழ்த்தேசிய பெருஉணர்வாகத் தமிழர் மனதில் இன்று பெருகி நிற்கிறது.
தமிழர்கள் யாவரும் தமிழ்த்தேசியப் பேருணர்ச்சி கொண்டு இன ஓர்மையைக் கட்டமைத்து, அரசியலதிகாரத்தினைப் பெற்று, இழந்த உரிமைகளையும், நிலப்பரப்பினையும் மீளப்பெற்றிடவும், இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை நிலைநாட்டிடவுமாகச் சூளுரைத்து இனமானப்பணி செய்ய வேண்டியது ஒவ்வொரு தமிழரின் காலக்கடமையாகும்.

அந்த இனமான கடமையை நம்முள் நிலை நிறுத்திட, நினைவூட்டிட செய்கின்ற நாளாக ‘தமிழ்நாடு நாள்’ என தமிழக அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் நாள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, தமிழ்த்தேசிய திருநாளாகும்.

வருகிற நவம்பர் 1 அன்று தமிழ்நாடு நாளை தாயகப் பேருவகையோடு பேரெழுச்சியாகக் கொண்டாட முன்னேற்பாடுகளையும் செய்திடுவோம். தமிழ்த்தேசிய இனத்தின் தாய் நிலமான தமிழ்நாடு மொழிவாரியாக அங்கீகரிக்கப்பட்ட திருநாளை, நாம் தமிழர் கட்சி வடிவமைத்து அளித்திருக்கிற, ஒட்டுமொத்த தமிழர்களுக்கெனப் பொதுவாக அமைந்திருக்கிற , அரசியல் சாதி மதம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்த தமிழ்நாட்டுக்கொடியை ஏற்றி, தமிழ்நாட்டுப் பாடலை இசைத்து இனிப்புகள் வழங்கி பெருமையோடு தமிழர்கள் அனைவரும் தமிழ் நாடெங்கும் கொண்டாட வேண்டுமென ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன். இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும், இருக்கிற உரிமைகளைப் பாதுகாக்கவும், இனத்தின் ஓர்மையைக் கட்டியெழுப்பவும், தமிழர் அறத்தினைக் கொண்டு தமிழ்நாட்டினை ஆளுகை செய்திடவும், தமிழர்களுக்கென்று அரசதிகாரத்தின் மூலம் தேசம் நிறுவிடவும் உழைத்திட தமிழ்நாடு நாளில் பேரெழுச்சி கொண்டு உறுதியேற்போம்.

வெல்க தமிழ்!
வாழ்க தமிழ்நாடு!

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவேலூர் சட்டமன்றத் தொகுதி -டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்காலம் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திவீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர் 219ஆம் ஆண்டு நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு – தலைமையகம்