பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகளும், தழல் இதழின் ஆசிரியருமான அம்மா தேன்மொழி அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழாரம்

605

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகளும், தழல் இதழின் ஆசிரியருமான அம்மா  தேன்மொழி அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழாரம் | நாம் தமிழர் கட்சி

தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதே தனது அருந்தவப்பயனென வாழ்ந்து மறைந்திட்ட தமிழ்த் தேசியத் தந்தை ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் அன்பு மகளும், சொல்லாய்வறிஞர் ஐயா ப.அருளியார் அவர்களின் இணையரும் தழல் இதழின் ஆசிரியருமான பெருமதிப்பிற்குரிய அம்மா ‘தழல்’ தேன்மொழி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா தேன்மொழி அவர்கள் தந்தையைப் போலவே தமிழ்த்தேசியக் களத்தில் போர்க்குணமும், போராட்ட உணர்வும் நிரம்ப விளங்கியவர்; மண்ணுரிமைக்காகவும், இன மீட்சிக்காகவும் அயராது களத்தில் நின்றவர். இராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 தமிழர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டபோது தனது தாலிக்கொடியை வழக்கு நிதிக்காகக் கழற்றி தந்து அவர்களின் விடுதலைக்காகக் குரல்கொடுத்தவர். தனிப்பட்ட முறையில் என் மீது பேரன்பு கொண்டிருந்தார். நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி குறித்து தாயன்போடு அக்கறையும், அளப்பெரும் பெருமையும் கொண்டு பல்வேறு தருணங்களில் அதுகுறித்து என்னிடம் எடுத்துரைத்திருக்கிறார். 2013ஆம் ஆண்டு கடலூரில் நடைபெற்ற இன எழுச்சி மாநாடு உட்படப் பல்வேறு நிகழ்வுகளில் எம்மோடு பங்கேற்றிருக்கிறார். இனத்தின் நலனுக்காக இறுதிவரை களம் கண்ட அம்மா தேன்மொழி அவர்களின் இழப்பு ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமூகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பாகும். அம்மாவுக்கு எனது புகழ் வணக்கம்!


செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன போராட்டம
அடுத்த செய்திகபசுரகுடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு – தட்டாஞ்சாவடி