புதிய கல்விக்கொள்கையைத் திரும்பப் பெறு! – கோரிக்கை பதாகை ஏந்தி சீமான் போராட்டம்

100

செய்திக்குறிப்பு: புதிய கல்விக்கொள்கையைத் திரும்பப் பெறு! – கோரிக்கை பதாகை ஏந்தி சீமான் போராட்டம் | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மாநில உரிமையான கல்வியை மொத்தமாக மத்தியப் பட்டியலுக்கு கொண்டுசெல்லும் முன்நகர்வாகவும், கல்வியை ஆரியமயப்படுத்தி நவீன குலக்கல்வித் திட்டங்களைப் புகுத்தவும், இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டுவந்து தேசிய இனங்களின் மொழி சிறப்பு, வரலாற்றுப் பெருமைகளை இருட்டடிக்கவும், அதன் தனித்துவமிக்க கூறுகளையும், பண்பாட்டு விழுமியங்களையும் மறைத்து ஒற்றைமயமாக்குவதற்கும், மும்மொழி கொள்கை மூலம் எதற்கும் பயன்தரா சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளைத் திணிப்பதற்காகவும் கொரோனா ஊரடங்கு காலத்தில் அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் இப்புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக கொள்கை முடிவெடுக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக இன்று (16-08-2020) காலை 11 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட கண்டனப் பதாகை ஏந்தும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்று, அவரது இல்லத்தின் முன்பு நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மாணவர்களுடன் இணைந்து கண்டனப் பதாகை ஏந்தி முழக்கங்கள் எழுப்பி தொடங்கிவைத்தார்.

செய்தியாளர் சந்திப்பு:

இதனையொட்டி தமிழகமெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள், மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து புதிய கல்விக்கொள்கையைத் திரும்பப்பெற வலியுறுத்தும் முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் #TNRejectsNEP என்ற குறிச்சொல்லுடன் இணைத்து அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில் (Twitter) இக்குறிச்சொல் இன்று மாலை வரை அதிகம் பகிரப்படுபவைகளில் முன்னணியில் இருந்தது.

இது பொதுமக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய வரவேற்பையும் ‘புதிய கல்விக்கொள்கை’ குறித்தான விழிப்புணர்வையும் பரவலாக ஏற்படுத்தியுள்ளது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084