தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இந்தியைத் திணிக்க முற்பட்டால் தமிழகமெங்கும் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! – சீமான் எச்சரிக்கை

42

தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இந்தியைத் திணிக்க முற்பட்டால் தமிழகமெங்கும் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! – சீமான் எச்சரிக்கை

இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் மரபுவழி மருத்துவமுறைகளுக்கான மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இணையவழி பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய தமிழக மருத்துவர்களை மத்திய ஆயுஷ் அமைச்சகச் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா வெளியேறக்கூறி அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆதிக்கமும், ஆணவமும் மிகுந்து நடைபெற்ற இச்செயலானது, காலங்காலமாக இந்தியை ஏற்காத மாநிலங்களின் மீதான மொழித்திணிப்பு மற்றும் வெறுப்பின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது. இந்தி, சமஸ்கிருத மொழித்திணிப்பை முன்னெடுத்து, அம்முயற்சிகள் யாவும் தோல்வியைத் தழுவியதால், தற்போது அரசதிகாரிகள் மூலம் மறைமுகமாக அதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசு.

இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டுமென்றால், பல தேசிய மொழிகள் இருக்க வேண்டும். அம்மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஒரே மொழிதான் அதிகாரத்திலிருந்து ஆதிக்கம் செலுத்துமென்றால், இங்குப் பல நாடுகள் பிறக்க நேரிடும். அண்மையில் உச்சநீதிமன்றமே, அரசியலமைப்பு அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் தேசிய மொழிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கச்சொல்லி அறிவுறுத்தியுள்ள நிலையில் அதற்கு முற்றிலும் நேரெதிராக மத்திய அரசு மொழித்திணிப்பை செய்ய முற்படுவது மிகப்பெரும் சனநாயகப்படுகொலையாகும்.

பிறிதொரு மொழியைக் கற்பதற்கும், அதனைப் பயிற்றுவிப்பதற்கும் நாங்கள் ஒருபோதும் எதிரிகள் அல்லர்; தாய்மொழி அல்லாது மற்றுமொரு மொழியைக் கற்பது என்பது அவரவர் தேவையின் பொருட்டும், விருப்பத்தின் பொருட்டுமாக அமையட்டும். அது ஒருவரது தனிப்பட்டவிருப்பவுரிமை. அதனை அரசு தீர்மானிப்பதும், வலுக்கட்டாயமாக ஒரு மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்துத் திணிக்க முற்படுவதும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான மிகப்பெரும் வன்முறையாகும்.

இந்தியா என்பது பல்வேறு மொழிவழித்தேசிய இனங்கள் சங்கமித்து வாழும் ஓர் ஒன்றியமாகும். பல்வேறு மொழிகளாலும், அம்மொழி பேசும் மக்களாலும் கட்டமைக்கப்பட்டுள்ள ஒன்றியத்தை ஒற்றை மொழிக்கான தேசமாக நிறுவ முற்படுவது இந்திய இறையாண்மையைத் தகர்க்கும் கொடுஞ்செயலாகும். அவரவர் தாய் நிலத்தில் அவரவர் மொழிக்கு முதன்மைத்துவம் அளிப்பது ஒன்றே இந்நாட்டின் பன்முகத்தன்மையைக் கட்டிக் காக்கும் நடவடிக்கையாக அமையும். அதன் அடிப்படையில், எமது தாய்மொழியான தமிழ்தான் எமது தாய் நிலத்தின் ஆட்சி மொழியாகவும், அதிகார மொழியாகவும், பண்பாட்டு மொழியாகவும், பயன்பாட்டு மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும், வழக்காட்டு மொழியாகவும் இருக்க வேண்டும். அவ்வுரிமையையை நிலைநாட்டவே அரும்பாடுப்பட்டுப் போராடுகிறோம். வெள்ளைய ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து காலந்தொட்டு இன்றைக்குவரை இந்தித் திணிப்புக்கு எதிராக சமரசமில்லாது சமர் செய்து வருகிறோம். உலக வரலாற்றில் எங்கும் நடந்திராத அளவுக்கு மொழிக்காக எண்ணூறுக்கும் மேற்பட்ட மக்கள் போராடி அக்களத்தில் உயிர்நீத்த பெரும் ஈக வரலாறு தமிழர்கள் எங்களுக்கு மட்டுமே உரித்தானது.

கடந்த 70 ஆண்டுகால வரலாற்றில் காங்கிரசு, பாஜக என மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி அமைந்தாலும் இந்தியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ திணிக்கும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. மத்தியில் ஆளும் அரசுகளின் இந்த எதேச்சதிகாரப்போக்கு, தற்போது தனிப்பெரும்பான்மையுடன் பாஜக அரசு அமைந்தவுடன் பன்மடங்காகப் பெருகியுள்ளது. அஞ்சலக, தொடர்வண்டிப்பணித் தேர்வுகளில் மாநில மொழிகளை நீக்கி அறிவித்ததும், ஆறு செம்மொழிகளுக்கு மொத்தமாக 30 கோடி மட்டுமே வளர்ச்சி நிதி ஒதுக்குவதும், புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு ஒவ்வொரு ஆண்டும் 6,00 கோடிக்கும் மேல் வளர்ச்சி நிதி ஒதுக்குவதும், இந்தி வாரம், சமஸ்கிருத நாள் கொண்டாட வற்புறுத்துவதும், பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில் இந்தியில் மட்டுமே பிரதமர் அனைத்து உரைகளையும் நிகழ்த்துவதும், இந்தியை இந்திய ஒன்றியம் முழுமைக்குமான தேசிய மொழியாக கட்டமைக்க முயல்வதும் மற்ற தேசிய இனங்களின் மொழியை பிராந்திய மொழியாகச் சுருக்கி, இந்திய ஒருமைப்பாட்டிற்கே பேராபத்து விளைவிக்க முயலும் பிரிவினைவாதமாகும்.

‘இந்தி தெரியாதவர்கள் எல்லாம் வெளியேறுங்கள்’ என்று சொல்வது போல, இந்தி தெரியாத மாநிலங்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியேறுங்கள் எனச் சொல்வார்களா? ‘இந்தியா இறையாண்மையுள்ள ஒரே நாடாக ஒற்றுமையாக இருக்கவேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கு வெளியே வாழும் மக்களும் தமிழைக் கற்க வேண்டும்’ என்கிறார் அண்ணல் காந்தியடிகள். ஒரே மொழிதான் தேசிய மொழியென்றால், உலக மொழிகளிலே மிகவும் தொன்மைவாய்ந்த உயர்தனிச் செம்மொழியான தமிழைத்தான் இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும். அதனைச் செய்வார்களா? மதத்தைக் காரணமாக் கொண்டு இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தாலும், அங்கு மொழித்திணிப்பால் கிளர்ச்சி ஏற்பட்டு வங்காளதேசம் எனும் தனித்தேசம் உருவான வரலாறு ஆட்சியாளர்களுக்கு மறந்து போனதா? புதிய கல்விக் கொள்கை எனும் பெயரில் மறைமுகமாக இந்தியைத் திணிக்க முற்படுவதும், இந்தி தெரியாதவர்கள் இந்தியர்களா? எனக் கேள்வியெழுப்புவதும், இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள் என அவமதிப்புச் செய்வதும் பாசிசத்தின் உச்சம்.

இந்தி பேசாத மாநிலங்களிலிருந்தும் மருத்துவர்கள் கலந்துகொள்வார்கள் எனத் தெரிந்திருந்தும் மூன்று நாள் பயிற்சி வகுப்பினை முழுக்க முழுக்க இந்தியில் நடத்தியதும், மற்ற மொழி மாநில மருத்துவர்களின் கோரிக்கைகளை அலட்சியத்துடன் புறக்கணித்ததும், குறிப்பாக மூன்றாம்நாள் முடிவில் இந்தி தெரியாதவர்கள் வகுப்பிலிருந்து வெளியேறுங்கள் எனும் ஆயுஷ் அமைச்சகச் செயலாளரின் மொழிவெறிப் பேச்சும் உள்நோக்கமுடையது; திட்டமிட்டே இது அரங்கேற்றப்பட்டிருக்கிறது. மேலும். ஆங்கிலத்தில் பயிற்சி வகுப்புகல் நடத்த வலியுறுத்திய தமிழகத்தைச் சேர்ந்த 37 சித்த மருத்துவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டிள்ளார்கள். எனவே, இதைத் தனிப்பட்ட ஒரு அதிகாரியின் செயலாக ஒதுக்கிவிட முடியாது.

தனக்கு ஆங்கிலம் சரிவரத் தெரியாது எனும் ஆயூஷ் அமைச்சக செயலாளரின் விளக்கம் எவ்வகையிலும் ஏற்புடையல்ல. ஆங்கிலம் தெரிந்திருந்தும் அதனைத் தவிர்த்து இந்தியிலேயே பேசுவது அவரது தாய்மொழிப்பற்றுக் காரணமாகத் தானே? அதே தாய்மொழிப்பற்று மற்ற மொழிவழி தேசிய இன மக்களுக்கும் இருந்தால் அது மட்டும் எப்படிப் பிரிவினைவாதமாகும்? 60 விழுக்காட்டுக்கும் மேலாக இந்தி தெரியாத மக்கள் வாழும் ஒரு நாட்டில் ஒரு துறையின் அமைச்சகத்துக்கு இணைப்பு மொழியான ஆங்கிலம் தெரியாத ஒருவரை எப்படி நியமித்தார்கள்? இதற்கு முன் இருந்தவர்களைப் போலல்லாது ஐ.ஏ.எஸ். பயிற்சி பெறாத குஜராத்தைச் சேர்ந்த வைத்தியா இராஜேஷ் கொடேச்சா அவர்களை ஆயுஷ் அமைச்சகச் செயலாளராக நியமித்ததும், அவருக்குப் பதவி நீட்டிப்பு தந்துள்ளதும் அவரது வன்மம் நிறைந்த மொழிவெறிப் பேச்சினை இதுவரை மத்திய அரசு கண்டிக்காததும் ஆளும் பாஜக அரசின் வழிகாட்டுதலின் பெயரில்தான் இவையெல்லாம் நடைபெறுகிறது என்பதை உறுதிசெய்கிறது.இதுதொடர்பாகத் தமிழக அரசு இதுவரை எவ்வித எதிர்வினையும் ஆற்றாது, அமைதி காப்பது சரியான அணுகுமுறை அல்ல.

மத்திய அரசின் பணிகளிலுள்ள அலுவலர்கள் தொடர்ந்து இந்தி மொழிவெறியோடு நடந்துகொள்வதைக் கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், அட்டவணையிலுள்ள அத்தனை மொழிகளையும் தேசிய மொழியாகவும் அலுவல் மொழியாகவும் மத்திய அரசு அறிவித்திட உரிய சட்டப் போராட்டங்களையும் அரசியல் அழுத்தத்தையும் கொடுக்க வேண்டும் எனவும், இந்தித் திணிப்பினை ஏற்காத மாநில முதல்வர்களைச் சந்தித்து மாநிலங்களின் மொழியுரிமைக் கூட்டமைப்பை உருவாக்கி மத்திய அரசின் மொழி ஆதிக்கத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட முன்வர வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறி இந்தி திணிக்க முற்படுமானால் தமிழகமெங்கும் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் என எச்சரிக்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி