சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கான புதிய வரைவைத் திரும்பப்பெறுக! – சீமான்

125

அறிக்கை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கான புதிய வரைவைத் திரும்பப்பெறுக! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA – Environmental Impact Assessment) அறிவிக்கை -2020 வரைவு இவ்வாண்டு மார்ச் மாதம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் கொரோனா நோய்த்தொற்று ஆட்கொண்டிருக்கும் இப்பேரிடர் காலத்தில், சூன் 30ம் நாள் முடியும் முன் தங்கள் புதிய அறிவிக்கை குறித்த தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள பொதுமக்களுக்கு கால அளவு வழங்கியது. தற்போது அக்கருத்துத் தெரிவிக்கும் காலம் ஆகஸ்ட் 11 வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அறிவிக்கை 2020 ஐ ரத்து செய்யக்கோரி, கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு அவை வலுப்பெற்று வருகின்றன.

இந்தப் புதிய வரைவானது, செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு,
மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வழங்கப்பெறும் சுற்றுச்சூழல் அனுமதியை எளிதாக்குவது மட்டுமில்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நடைமுறையிலுள்ள பல சுற்றுச்சூழல் விதிகளை மேலும் நீர்த்துப்போகவும் வழிவகை செய்கிறது. குறிப்பாக, பல திட்டங்களுக்கு பொதுமக்கள் இடத்தில் ஆலோசனை பெறாமலே செயல்படுத்தப்படலாம் எனும்‌ வாய்ப்பை வழங்குவது அதிர்ச்சி அளிக்கிறது. இது நமது முன்னோர்கள் போராடிப்பெற்ற மக்களாட்சித் தத்துவம் எனும் மகத்தான கொள்கையையே மொத்தமாகக் குலைப்பதாகும்.

2006 – சுற்றுச்சூழல் அறிவிக்கையில் பொதுமக்களின் கருத்துத் தேவைப்படாத ஆறு திட்ட வகைகள் மட்டுமே இருந்தன. ஆனால், புதிய 2020 ஆம் வரைவின்படி மேலும் 14 புதிய வகைகளுடன் ஏறக்குறைய 20 திட்டங்களுக்கு மக்கள் கருத்துத்தேவையில்லை எனும் நிலை உருவாகியுள்ளது. இனி, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுதல் போன்ற திட்டங்களுக்கு பொதுமக்களின் கருத்து கேட்கப்படமாட்டாது. குறிப்பாக, சேலம் எட்டுவழிச்சலை, பனங்குடி எண்ணெய் சுத்திகரிப்பாலை போன்ற திட்டங்கள் எளிதாக நிறைவேற்றப்படக்கூடும். இந்த புதிய வரைவு 2020ல், பல திருத்தங்கள் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளதுடன், சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய தொழில்துறை திட்டங்களை அமைப்பதற்கான செயல்முறைகளை எளிதாக்குகின்றன.

இது நாட்டின் இயற்கை வளங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறை நல்வாழ்விற்கும் கேடுவிளைவிக்க கூடியது; பேராபத்தானது. ஏற்கனவே, இயற்கைக்கெதிராக மனிதகுலம் மேற்கொண்ட அத்துமீறல்களாலேயே, பருவநிலை மாற்றம், புவிவெப்பமயமாதல் போன்ற இயற்கைச்சீர்கேடுகளும் , கொரோனா போன்ற இதுவரை வந்திராத புதிய நோய்த்தொற்று பரவல்களும், நோய்த்தாக்கங்களும் ஏற்பட்டு இந்த பூமியே மனிதர்கள் வாழ்வதற்கு சாத்தியமற்றதாக மாறிவரும் நிலையில், மேலும் சூழலை மாசுபடுத்தி, பாழ்படுத்தக் கூடியவகையில் இத்தகைய முறையற்ற அனுமதிகளை சட்டப்பூர்வமாக வழங்குவதென்பது மேலும் இயற்கையை சீரழிக்கவே வழிவகுக்கும்.

ஆகவே, பொதுமக்களின் கடுமையான எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ள நிலையில் அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையிலும், நாட்டின் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம், மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இந்த 2020 – சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பினை நோக்கமாகக் கொண்டு முக்கியமான அறிவிக்கையை உருவாக்கும் போது, தலைசிறந்த சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி