கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித்தவிக்கும் 800க்கும் மேற்பட்ட தமிழக மருத்துவ மாணவ, மாணவிகளை, தமிழக அரசு விரைந்து மீட்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

54

அறிக்கை: கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித்தவிக்கும் 800க்கும் மேற்பட்ட தமிழக மருத்துவ மாணவ, மாணவிகளை, தமிழக அரசு விரைந்து மீட்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

https://bit.ly/38Hixu8

கிர்கிஸ்தான் நாட்டின் பிஸ்ஹெக் நகரில் உள்ள ஓ.எஸ்.ஹெச்(OSH), ஐ.யு.கே.(IUK), கே.ஜி.எம்.ஏ(KGMA), ஜலடாபாட் ஆகிய நான்கு பல்கலைகழகங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 800 மாணவ, மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக கிர்கிஸ்தான் நாட்டிலும் ஊரடங்கு செயற்பாட்டில் உள்ளது. கடந்த இரண்டு மாத காலக் கடுமையான ஊரடங்கினால் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கூட சரி வரக் கிடைக்காமல் மாணவ-மாணவியர் ஒவ்வொரு நாளையும் பெரும் போராட்டத்துடனேயே நகர்த்தி வருகின்றனர்.

மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், கிர்கிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு இயக்கப்பட்ட மூன்று விமானங்களும் கொச்சி, புது டெல்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டன. சென்னைக்கு இதுவரை எந்த விமானமும் இயக்கப்படாததால் மாணவ, மாணவிகளால் தமிழ்நாடு திரும்ப முடியவில்லை. இது தொடர்பாக, தமிழக மாணவ-மாணவியர் இந்திய தூதரகத்தை அணுகியபோது தமிழக அரசிடம் முறையிட சொல்லிவிட்டு, தங்களுக்கு எவ்வித உதவியும் செய்யாமல் கைவிரித்துவிட்டதாக அங்குள்ள மாணவ , மாணவியர் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே தமிழக அரசு கிர்கிஸ்தானிலிருந்து நம்முடைய மாணவ-மாணவியரை மீட்டுக் கொண்டுவர நேரிடையாக சென்னை, கோவை , திருச்சி உள்ளிட்ட தமிழக நகரங்களுக்குச் சிறப்பு விமானங்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே நீண்ட காலமாகக் குடும்பத்தைப் பிரிந்து இருந்ததாலும், இப்பேரிடர் காலத்தில் ஆதரவற்று வெளிநாட்டில் சிக்கித் தவித்து வருவதாலும் வெகுவாக பாதிக்கபட்டுள்ள மாணவ, மாணவியரின் உடல்நலனையும் மனநலனையும் கருத்திற்கொண்டு, தமிழக அரசு உடனடியாக கவனமெடுத்து அவர்களைப் பாதுகாப்பாக மீட்டு, விரைந்து தமிழகம் அழைத்துவர ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி