டெல்லியில் ஏற்பட்ட இசுலாமியர்களுக்கு எதிரான மதக்கலவரம் ஒட்டுமொத்த நாட்டிற்கே ஏற்பட்டத் தலைகுனிவு! – சீமான் கண்டனம்

43

அறிக்கை: டெல்லியில் ஏற்பட்ட இசுலாமியர்களுக்கு எதிரான மதக்கலவரம் ஒட்டுமொத்த நாட்டிற்கே ஏற்பட்டத் தலைகுனிவு! ஊடகவியலாளர்கள் மீதும் திட்டமிட்டத் தாக்குதல் சாட்சியங்களின்றி கலவரம் செய்வதற்கான சதிசெயல்!- சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

இந்தியத்தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள மதக்கலவரமும், இசுலாமியர்களுக்கு எதிரானத் தொடர் தாக்குதல்களும் அதிர்ச்சியளிக்கின்றன. குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடு முழுமைக்கும் நடைபெற்று வரும் போராட்டங்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு போராடுவோர் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு கோரத்தாக்குதல் நிகழ்த்தப்படுவதும், போராட்டக்களங்கள் வன்முறைக்களங்களாக மாற்றப்பட்டு ஆளும் வர்க்கத்தின் துணையோடு மதரீதியாக நாட்டைத் துண்டாடும் முயற்சிகள் நடப்பதும் வன்மையானக் கண்டனத்திற்குரியது. இவையாவும் இந்திய அரசியலமைப்புச்சாசனத்தின் அடிநாதமான மதச்சார்பின்மை எனும் மகத்தானக் கோட்பாட்டினை சிதைத்தழித்து, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் இந்நாட்டின் பன்முகத்தன்மையையைத் தகர்த்து ஒற்றைமயமாக்கும் எதேச்சதிகாரப்போக்காகும். டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெறக்கோரி நிகழ்ந்த போராட்டம் திட்டமிட்டு வன்முறைக்களமாக மாற்றப்பட்டு இசுலாமியர்களும், ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டிருப்பது அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்! இதில் தர்கா தீ வைத்து எரிக்கப்படுவதைப் படம்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் தம்பி அரவிந்த் குணசேகர் கடுமையாக தாக்கப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. அவரோடு மேலும் சில பத்திரிக்கையாளர்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிருப்பதாக செய்திகள் வருகிறது. அவர்கள் அனைவரும் விரைவில் மீண்டுவர வேண்டுமென எனது விருப்பத்தைத் தெரிவிக்கிறேன். டெல்லியில் ஷாஹின்பாக் பகுதியில் பல நூற்றுக்கணக்கான பெண்கள் அறப்போராட்டம் நிகழ்த்தி வரும் நிலையில், ஜாஃப்ராபாத் பகுதியிலும் அதேவகை போராட்டத்தை வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த பெண்கள் கடந்தவாரம் முன்னெடுக்கத் தொடங்கினர். அதே இடத்தில் குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக பாஜக மூத்தத் தலைவர் கபில் மிஸ்ரா ஆர்ப்பாட்டம் நடத்த பாஜகவினருக்கு அழைப்புவிடுத்து, குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக ஆட்களைக் களமிறக்கிவிட்டதே இக்கலவரத்திற்கு முழுமுதற்காரணமாகிறது. குஜராத்தில் நடந்த இனப்படுகொலையின்போது தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு இசுலாமியர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டது போல, டெல்லி கலவரத்திலும் திட்டமிட்டுத்தாக்குதல் தொடுக்கப்பட்டு இசுலாமியர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள சூழலிலும்கூட இந்நாட்டின் குடிகளை மதத்தால் பாகுபடுத்தி அச்சுறுத்துவதும், சொந்த நாட்டு மக்கள் மீது கலவரத்தை அனுமதித்து அமைதி காப்பதும் பன்னாட்டு அரங்கில் இந்நாட்டு ஆட்சியாளர்களின் கோர முகத்தை அம்பலப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இந்நாட்டின் குடிகளாக விளங்கும் மண்ணின் மக்களான இசுலாமியர்களை வேற்று நாட்டவர் போலக் கருதி அவர்களைத் தாக்கும் இக்கொடுஞ்செயல்கள் யாவும் ஒட்டுமொத்த நாட்டிற்கே ஏற்பட்டத் தலைகுனிவாகும்.ஆகவே, இசுலாமிய மக்களுக்கு எதிரான இக்கலவரங்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டு, கலவரத்திற்குக் காரணமானவர்கள் எவ்விதப் பாரபட்சமுமின்றி கைதுசெய்யப்பட வேண்டும் எனவும், இசுலாமிய மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு, அறவழிப்போராட்டங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி