அறிக்கை: தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் – சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் வானுயர ஓங்கி நிற்கின்ற தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற 2020 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதியன்று நடக்கவிருக்கிற செய்தியறிந்து பெருமகிழ்ச்சியடைந்தேன். உலகின் இரண்டாம் பெரிய வல்லரசை நிறுவிய தமிழ்ப்பேரரசன் அருண்மொழிச்சோழன் சைவ சமயத்தின் மீதும், தமிழர் இறை சிவனின் மீதும் கொண்ட பெரும்பற்றினால் இக்கோயிலை நிறுவி அதற்கு ‘இராசராசேச்சரம்’ என்று பெயரிட்டு அழைக்கலானார். சிவப்பக்தராக விளங்கிய அருண்மொழிச்சோழன் தனது பெயரை ‘சிவபாதசேகரன்’ என வைத்துக்கொண்டது அவரது சைவ சமயப்பற்றுக்குச் சான்றாகும். கோயிலின் உருவாக்கத்திற்கு உதவியவர்கள் அனைவரின் பெயரையும் பொறித்திருக்கும் வரலாற்றுப்பெருமைகள் பல வாய்ந்த தஞ்சை பெருவுடையார் கோயிலுக்குக் குடமுழுக்கு செய்யும் இவ்விழா தஞ்சைப் பெரிய கோயிலின் அரும்பெரும் சிறப்புகளை உலகுக்கு அறியத்தரும் என்பதோடு மட்டுமல்லாது, தமிழர் மூதாதை இறையனாரின் புகழைப் போற்றும் வரலாற்று பெருநிகழ்வாகும்.
இப்பெருவிழாவில் தமிழர் மெய்யியலையும், தமிழ் மரபுகளையும் நிலைநாட்டும் பொருட்டு குடமுழுக்கு விழாவை முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும், ஆதிப்பாட்டன் சிவனின் பெருமைகளைக் கூறுகின்ற பன்னிருதிருமறைகளில் முதல் ஏழு திருமறைகளான தேவாரத்தையும், எட்டாம் திருமறையாகிய திருவாசகத்தையும் பாடியே குடமுழுக்கு நடைபெறவேண்டும் என்றும், குடமுழுக்குப் பணிகளின்போது சோழர் காலத்து கல்வெட்டுகள், சிற்பங்கள் போன்றவைகளைப் பாதுகாப்பாகக் கையாண்டு, அவற்றில் எவ்வித இடைச்செருகலோ, வரலாற்றுத்திரிபோ இல்லாதவண்ணம் பாதுகாக்க வேண்டும் என்றும், எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாவண்ணம் பாதுகாப்பைப் பலப்படுத்தி குடமுழுக்கு ஏற்பாடுகளையும், பணிகளையும் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
—
செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.