உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு முதலில் தமிழில் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

259

அறிக்கை: உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு முதலில் தமிழில் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழ் நெறிப்படியே நடத்த வேண்டும் என வீரத்தமிழர் முன்னணி சார்பாக தம்பி செந்தில்நாதன் அவர்களும், தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு சார்பாக ஐயா பெ.மணியரசன் அவர்களும், இன்னபிற தமிழ் ஆர்வலர்களும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடுத்த வழக்கில் கிடைக்கப் பெற்றிருக்கிற தீர்ப்பு முழுமையான நிறைவினைத் தராவிட்டாலும், சற்றே மன ஆறுதலைத் தந்திருக்கிறது.

‘உன் நிலத்தில் உன் மொழி ஆள வில்லையென்றால், நீ அடிமை’ என்கிறார் அண்ணல் காந்தியடிகள். நிலம், அதிகாரம், நீதி, வழிபாடு என எந்த நிலையிலும் எமதுயிர் மொழி தமிழ் இல்லாது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதன் விளைவாகவே அடிமைத் தேசிய இனத்தின் மக்களாக இன்று மாறி நிற்கிறோம். தமிழ்ப்பேரரசன் அருண்மொழிச்சோழன் தமிழர் நிலத்திலே
கட்டியெழுப்பியுள்ள தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு விழாவினை தமிழிலேயேதான் நடத்த வேண்டும் எனும் தார்மீக உரிமையையே கோரிக்கையாக முன்வைத்துப் போராடுகின்ற இழிநிலைக்குத் தள்ளப்பட்டு நிற்கிறோம். தமிழுக்கு இடப்பட்டிருக்கிற இத்தளையைப் போக்கவும், தமிழ்ப்பேரினத்தின் அடிமை விலங்கொடிக்கவும் அறப்போராட்டம் வாயிலாகவும், சட்டப்போராட்டம் வாயிலாகவும் பன்னெடுங்காலமாகப் போராடி வருகிறோம். அந்தவகையில், தற்போது கிடைத்திருக்கிற நீதிமன்றத் தீர்ப்பு முழுமையான வெற்றி இல்லாவிட்டாலும், முன்னேற்றத்திற்கான முதற்படிதான்!

தஞ்சைப் பெரிய கோயிலில் தமிழ் மற்றும் சமசுகிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது தமிழுக்குக் கிடைத்த முதல்படி வெற்றிதான் என்றாலும்கூட, அனைத்து நிலைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட்டு நிலைநிறுத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் உலகத்தமிழர்களின் ஒற்றை விருப்பமாக இருக்கிறது. கோயிலின் கருவறை, கலசம், கொடிமரம், யாகசாலை, அர்த்த மண்டபம் ஆகிய ஐந்து இடங்களிலும் சமசுகிருதத்துக்கு இணையாக தமிழ் மொழி பயன்படுத்தப்படும் என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. ஆகவே, அதனை மெய்ப்பிக்கும் வகையில், சமசுகிருத அர்ச்சகர்களுக்கு இணையான எண்ணிக்கையில், தமிழ் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் எனவும், அனைத்து இடங்களிலும் சமசுகிருதத்துக்கு இணையாக தமிழுக்கும் சமமான கால அளவு கொடுக்கப்பட வேண்டும் எனவும், சமசுகிருதத்திற்கு எவ்விதத் தனிப்பட்ட முதன்மைத்துவமும் வழங்கப்படக்கூடாதெனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவற்றைக் கடைப்பிடித்து, முதலில் தமிழில் குடமுழுக்கு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

ஆதிபாட்டன் சிவனைப் போற்றித் தொழும் இக்குடமுழுக்கில் தமிழர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, தமிழ் கோபுரமேறுவதைக் கொண்டாட உள்ளன்போடு வேண்டுகிறேன்!

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு/ரிஷிவந்தியம் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-காங்கயம் தொகுதி