திருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

384

அறிக்கை: பிணையினைப் பெற்றும் திருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

திருச்சி மத்திய சிறையில்,  அகதிகள் எனும் பெயரில் சிறப்பு முகாம் எனப்படுகிற சித்திரவதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு வதைக்கப்படும் ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட உறவுகள் இன்று 16-11-2019 காலை திருச்சி மத்திய சிறை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 166 நாம் தமிழர் உறவுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வந்தாரை வாழ வைக்கும் தமிழர் நிலத்தில் சொந்த இனத்து ஈழச்சொந்தங்கள் 20 பேர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற செய்தியானது பெருத்த மனவேதனையையும், ஆறாத ரணத்தையும் தருகிறது. ஈழ நிலம் முழுவதும் சிங்களப்பேரினவாதிகளால் அழித்தொழிக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் தாங்கள் தந்தையர் நாடெனக் கருதும் இந்தியப் பெருநாட்டை நோக்கி, தாயகத்தமிழகத்தில் அடைக்கலம் கேட்டு வருகிற அன்னைத்தமிழ் சொந்தங்களைச் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்து அகதிகள் எனும் பெயரில் சிறப்பு முகாம் எனப்படுகிற சித்திரவதை முகாம்களில் அடைத்து அவர்களை வதைப்பது ஒவ்வொரு தமிழரையும் வெட்கித்தலைகுனிய வைக்கிறது.

இந்நாட்டிற்கு எவ்விதத் தொடர்புமில்லாதவர்களான திபெத்திய அகதிகள்கூட ஒரு நல்வாழ்க்கையை இங்கு வாழ்கிறபோது, சொந்த இரத்தங்களான ஈழத்தமிழ்ச்சொந்தங்கள் சந்தேக வளையத்திற்குள்ளேயே வைக்கப்பட்டு, அடிப்படை வசதிகூட இல்லாத ஓரிடத்தில் அடைத்து வைக்கப்பட்டு இன்னல்கள் பலவற்றுக்கு ஆளாக்கப்படுவது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும். சிறப்பு முகாம்கள் எனும் வதை முகாம்களை மூடக்கோரியும், ஈழச்சொந்தங்களுக்குப் பாதுகாப்பான பொருளாதார வாழ்வினை இந்நிலத்தில் உறுதிபடுத்தக்கோரியும் பல ஆண்டுகளாக நாங்கள் போராடியும் அதனை அரசு இதுவரை பொருட்படுத்தவேயில்லை.

தற்போது திருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ்ச்சொந்தங்கள் பலரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு, அதன்பிறகு பொய் வழக்குத் தொடுக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டவர்கள்தான். அவர்களில் பலருக்குக் பிணை கிடைத்தும் அவர்களைத் தமிழக அரசு விடுவிக்க மறுத்துவருவது சட்டவிரோதமானது.

அதனைப் பல நாட்கள் கேட்டுப் போராடியும் கவனம்பெறாத நிலையிலேயே வேறு வழியின்றி அவர்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். ஆகவே, தமிழக அரசு இனிமேலாவது இவ்விவகாரத்தில் உரிய கவனமெடுத்துப் பிணைபெற்ற ஈழத்தமிழ்ச்சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

முந்தைய செய்திமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி
அடுத்த செய்திநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி