மாவீரர் நாள் 2019 – சீமான் அறிக்கை

899

என் உயிருக்கு இனிப்பான தாய்த்தமிழ் உறவுகளே!

இன்று மாவீரர் நாள். நம் மொழி காக்க நம் இனம் காக்க நம் மண் காக்க நம் மானம் காக்க தன்னுயிரைத் தந்து இந்த மண்ணிற்கு விதையாகிப் போன மாவீரர் தெய்வங்களைப் போற்றுகிற திருநாள். தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தங்களது உயிர் ஈகத்தால் உலக வரலாற்றின் புரட்சிகரப்பக்கங்களில் உதிர எழுத்துக்களால் பொறித்துச் சென்ற புனிதமானவர்களை நம் உயிரில் நிலைநிறுத்தி வணங்குகிற நாள்.

மாவீரர்கள்! இந்த உலகம் இதுவரை கண்டிராத மகத்தான மாமனிதர்கள். அடிமைப்பட்டுக் கிடக்கின்ற தாய் மண்ணின் விடுதலை என்கின்ற புனித இலக்கினை தன் வாழ்வின் உயரிய குறிக்கோளாகச் சுமந்து அந்த இலட்சியத்திற்காகவே வாழ்ந்து, அந்த உயரிய இலக்கிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்து இந்த மண்ணுலகில் மங்காதப் புகழை அடைந்தவர்கள்.

ஆற்றங்கரைகளில் நாகரீகம் தோன்றியக் காலத்திலிருந்து மனித இனம் தனது எழுச்சிக்காக போராடி வருகிறது. தன் மீது விதிக்கப்படும் அனைத்து அடக்கு முறைகளிலிருந்தும் விடுதலைபெற ஒவ்வொரு காலகட்டத்திலும் அது முயன்று வருகிறது. இதுவரை எழுதப்பட்ட வரலாறு அனைத்துமே மனிதர்களின் கட்டுப்படுத்த முடியாத விடுதலை உணர்ச்சியின் பெரும் கதையாடல்கள்தான். நாகரீக வளர்ச்சியில் சக மனிதனை அடிமைகொள்கிற, சுரண்டிக்கொழுக்கிற, அடுத்தவன் நிலத்தைப் பிடிங்கி அபகரிக்கிற இன்னொரு மனிதன் தோன்றும்போது அநீதியும், வல்லாதிக்கமும் தோன்றுகின்றன. அதேசமயத்தில், அதற்குச் சற்றும் குறையாத வடிவத்தில் நீதியும், புரட்சிகர எழுச்சியும் இணைந்தே தோன்றுகின்றன. அடிமைப்படுத்தப்பட்டவன் எழ முயற்சிக்கிறான். தன் மீது பிணைக்கப்பட்டு இருக்கிற வல்லாதிக்கச் சங்கிலிகளை உடைத்தெறிய உன்மத்தம் கொள்கிறான். காலங்காலமாக மானுட இனம் வகுத்து வைத்திருக்கிற ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாக வைத்து வீழ்த்துபவர்களுக்கும், வீழ்த்தப்படுபவர்களுக்கும் இடையிலான போர்தான் வரலாறு முழுக்க நிரப்பப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு இனமும் தன் தாய் நிலத்தில் மானத்தோடும், இறையாண்மையோடும், அடக்குமுறைகள் அற்ற முழு விடுதலையோடும் வாழ எப்போதும் போராடி வருகின்றன. அவ்வாறே தமிழ்த்தேசிய இனமும் தனது தாயக விடுதலைக்காக நீண்டகாலமாகப் போராடி வருகிறது. தமிழர்களின் தாய் நிலங்களில் ஒன்றான ஈழப்பெருநிலம் சிங்கள அடிப்படைவாதத்தால் அடிமைப்படுத்தப்பட்டு மண்ணின் பூர்வக்குடிமக்கள் தனது சொந்த மண்ணிலேயே இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றப்பட்டு எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டு அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டபோது, தங்கள் இன்னுயிரை ஈந்தாவது தாய் மண்ணை மீட்டாக வேண்டும் என்கின்ற உறுதியில் பெரும் புயலென புறப்பட்டவர்கள் நம் மாவீரர்கள்.

தமிழீழம் என்பது ஈழப்பெருநிலத்தில் வாழும் தமிழர்களுக்கான தாயகம் மட்டுமல்ல. இந்த உலகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனுக்குமான தாய்நிலம். ஆதியில் தோன்றிய தமிழினம் குமரிக்கண்டமாய் பரவி விரிந்துக்கிடந்தபோது தமிழீழமும், தாயகத்தமிழகமும் ஒரே நிலங்களாகத்தான் இருந்தன. ஒரு தாய் மக்களாக, ஒரு இனத்தின் மாந்தராகவே தமிழர்கள் உருவாகி செழித்தார்கள். இதை நவீன காலத்து அறிவியலும் ஒத்துக்கொள்கிறது. இடையில் புகுந்தக் கடலாலும், நிகழ்ந்தக் கடல்கோள்களாலும் ஒரு இனத்து மக்கள் வாழ்ந்த ஒரே நிலம் தாயகத்தமிழகம், தமிழீழம் என்று இரண்டு நிலங்களாகப் பிரிந்தன. ஈழத்தில் பூர்வக்குடி மக்களான தமிழர்கள் அந்நிலத்தில் முழு இறையாண்மையோடு அரசாண்டு வந்தார்கள். ஆனால், இடையில் வந்த சிங்களர்கள் நமது தாய் மண்ணை ஆக்கிரமித்து கொண்டதோடு மட்டுமில்லாமல் அந்த நிலத்தில் நீடித்து நிலைத்து வாழ்ந்த ஆதி குடிகளானத் தமிழர்களின் நிலங்களை அபகரித்து, உரிமைகளை பறித்து சொந்த மண்ணிலேயே அடிமை ஆக்கினார்கள். விடுதலைகோரி நின்ற விழிகளை சிங்கள இனவாதிகள் தங்கள் காலணிகளால் மிதித்து அழித்தார்கள். உரிமைகோரி உயர்ந்த கரங்களை சிங்களர்கள் தனது இனவாத வாளால் வெட்டி எறிந்து இறுமாப்பு சிரிப்பு சிரித்தார்கள். உலக வல்லாதிக்கங்களின் உதவியோடு, தனது இனவாத அரசாதிகாரத்தின் மூலம் தமிழர்களைக் கொன்று குவித்து ஒரு பாரிய இனப்படுகொலையை நிகழ்த்தியப் பிறகும் இனவெறி அடங்காது தமிழினத்தை முழுமையாக அழிக்கத் துடிக்கிறார்கள் சிங்கள இனத்துவேசிகள்.

அடிமைப்பட்ட இனத்தின் வெடித்தெழும் கோபத்தோடு மண்ணை மீட்க எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் பல்லாயிரக்கணக்கான தமிழின இளையோர் தங்கள் உயிரை ஏந்தி, தாய் மண்ணை காக்க ஆயத்தமானார்கள். அதுவரை மூடிக்கிடந்த உலகத்தின் செவிகளை தங்களது புரட்சி முழக்கத்தின் மூலமாக வெடிவைத்து தகர்த்தார்கள். உயிரையும் இழக்கத் தயாராகிவிட்ட அம்மாவீரர்களின் ஈகங்கள் அடைத்துக் கிடந்த உலகத்தின் விழிகளை திறக்க வைத்து ஈழத்தின் பக்கம் திரும்ப வைத்தன. நெஞ்சுரமும் துணிவுமிக்க ஒரு இளம் தலைமுறை சாகவும் துணிந்து நிற்கும்போது அதுவரை எழுதப்பட்டிருந்த அனைத்து அடிமை விதிகளும் மாற்றி எழுதப்படத் தொடங்கின. அளப்பரிய தன் சாகசங்களால் அடிமைப்பட்டு அல்லலுற்ற தமிழ் மண்ணை தங்கள் உயிரை விதைத்து தமிழீழச் சோசலிச குடியரசு நாடாக உருவாக்கினார்கள் மாவீரர்கள். போர்க்களங்களில் துளியளவு கூட அறம் பிசகாது தலைவரின் சொல் பற்றி நின்று மக்களைக் காத்த மனித உருவிலான தெய்வங்கள் எங்கள் மாவீரர்கள்.‌

உலகமே வியக்கும் வண்ணம் ஈகங்கள் பல செய்து, தாயக விடுதலைக்காக போராடி நின்ற மாவீரர் கனவாக உருவான ஈழ தேசத்தை சிங்கள இனவாத அரசு உலகில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்து உலக வல்லாதிக்க இராணுவப் பலத்தோடு அழித்து முடித்தது. இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து மறுக்க முடியாத இனப்படுகொலை ஒன்றைத் திட்டமிட்டு நிகழ்த்தி சிங்கள அரசு பேயாட்டம் ஆடி பத்தாண்டுகள் கடந்து விட்டன. தன் சொந்த நிலத்திலேயே முள்வேலி கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு தமிழர்கள் முடக்கப்பட்டார்கள். 10 ஆண்டுகள் கடந்துவிட்டப் பிறகும் இனப்படுகொலைக்கான நீதி இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. போரின்போதும் அதற்குப் பிந்தைய காலகட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டப் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களைப் பற்றி இதுவரை ஒரு தகவலையும் சிங்கள அரசு தெரிவிக்கவில்லை. உலகத்தின் அனைத்து மன்றங்களிலும் கடக்க முடியா வலியோடும், காய்ந்திடா கண்ணீர் தடத்தோடும் சிங்கள இனவாதிகள் நிகழ்த்திய இனப்படுகொலை குறித்தும், தமிழர்களின் நிர்ணய உரிமை குறித்தும் நாம் முறையிட்டு வருகிறோம். இதுவரை தமிழ்த்தேசிய இனத்திற்கு உரிய நீதி கிடைத்துவிடவில்லை.

இன்று சூழல்கள் மாறியிருக்கின்றன. இனப்படுகொலை நிகழ்த்தி தமிழினத்தை அழித்து முடித்த ராஜபக்சே குடும்பத்தினர் மீண்டும் அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். முன்னைப் போலவே மீண்டும் ஒரு இனப்படுகொலை நடக்க அனைத்து வாய்ப்புகளும் கூடி வருகிற அச்சச்சூழல் ஈழப் பெருநிலத்தில் நிலவுகிறது. ஒருபோதும் சிங்கள அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்திய அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்ள மாட்டார் என்பதும், அவர் சீன வல்லாதிக்கத்தின் அடியாள் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்திய எல்லை அருகே சீன வல்லாதிக்கம் வலிமை பெறுவதென்பது எதிர்கால இந்திய அரசின் நலன்களுக்கு மிகவும் கேடானது. எதிரானது. ஆபத்தானது. இதுவரை இந்திய அரசு கடைப்பிடித்து வந்த பிழையான வெளியுறவுக் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரத்தை சமீபத்திய இலங்கையின் தேர்தல் முடிவுகள் உருவாகிவிட்டன.

தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்திற்கு இந்திய அரசு மதிப்பளிக்க வேண்டிய காலம் பிறந்து விட்டதாகவே கருதுகிறேன். நீண்ட நெடிய காலமாய் விடுதலை தாகத்தோடு துடித்துக்கொண்டிருக்கும் ஈழ மக்களுக்கு சர்வதேசச் சமூகத்தின் முன்னால் நடத்தப்பட வேண்டிய சுயநிர்ணய உரிமை குறித்தான வாக்கெடுப்பு ஒன்றே தீர்வாக அமையும். இனியும் சர்வதேசச் சமூகம் கனத்த மௌனம் காட்டாமல் இனப்படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்களைக் குற்றவாளி கூண்டில் நிறுத்துவதுதான் தமிழர்கள் இதுவரை பட்டத் துயரங்களுக்கு தீர்வாக அமையும்.

தாய் மண்ணை காக்கத் தன் இறுதி மூச்சு உள்ளவரை விடுதலை தாகத்தோடு களமாடி நின்ற எம் மாவீரர்களின் மூச்சுக்காற்று இந்த மண்ணில்தான் உலவுகிறது. ஒவ்வொரு நொடியும் அனலேறிய அந்த மூச்சுக்காற்றுதான் நமது இலட்சிய பாதையை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. மாவீரர்கள் எந்தக் கனவிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்து எம்மண்ணில் விதையாக விழுந்தார்களோ, தாயக விடுதலை என்கின்ற அந்த புனிதக் கனவினை நிறைவேற்ற, தனித்தமிழீழ சோசலிசக் குடியரசை நிறுவ ஒவ்வொரு தமிழரும் பற்றுறுதியோடு உழைத்து களமாட வேண்டும் என்பதுதான் இந்த மாவீரர் நாளில் நாம் நமது அடி மனதிற்குள் எழுப்ப வேண்டிய உறுதிப்பாடு!

மாவீரர்களுக்கு எனது வீரவணக்கம்!

மாவீரர் சிந்திய குருதி.. ஈழம் வெல்வது உறுதி!

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசுற்றறிக்கை: இன எழுச்சிப் பெருங்கூட்டம் – ஒத்தக்கடை(மதுரை)
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பொதுக்குழுக் கூட்டம் – 2019