கோரிக்கை மனு கொடுக்க வந்த இசுலாமிய ஜமாத்தினரை மதத்துவேசத்தோடு மிரட்டுவதா? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பொதுமன்னிப்பு கோர வேண்டும்! – சீமான் கண்டனம்
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள கேசவநேரி மக்கள் சார்பாக நியாய விலைக்கடை குறித்த கோரிக்கை மனுவினை அளிக்கச் சென்ற இசுலாமிய ஜமாத்தைச் சேர்ந்தவர்களை, தமிழக பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திரபாலாஜி அவர்கள் கொச்சை வார்த்தைகளால் இழிவுப்படுத்தி அவமரியாதை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் சேவகர்களாக இருந்து அவர்களுக்குத் தொண்டாற்ற வேண்டிய அமைச்சர்களும், ஆட்சியாளர் பெருமக்களும் அதிகாரத்திமிரிலும், ஆட்சியில் இருக்கிற மமதையிலும் மனம்போன போக்கில் நஞ்சினைக் கருத்தாக உமிழ்வதும், மக்களின் பாடுகளை எள்ளி நகையாடுவதுமான இத்தகையத் தொடர் மக்கள் விரோதப்போக்குகள் யாவும் வன்மையானக் கண்டனத்திற்குரியது.
‘மோடி எங்கள் டாடி’ எனக் கூறித் தன்னை பாஜகவின் அறிவிக்கப்படாத ஒரு உறுப்பினராகவே மனதில் வரித்துக்கொண்டு இருக்கிற அமைச்சர் இராஜேந்திரபாலாஜிக்குள் இருக்கும் மதத்துவேசமும், இந்துத்துவச் சிந்தனையுமே இத்தகையக் கடும்போக்கை கையாள அவரை உந்தித் தள்ளியிருக்கிறது. ‘மாற்றாந்தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு’ என்றுகூறி அதற்கேற்ப அரசியலில் நாகரீகத்தைக் கடைப்பிடித்த அறிஞர் அண்ணா அவர்களின் பெயரில் இயங்கும் ஒரு கட்சியின் பிரதிநிதி இசுலாமிய, கிருத்துவ மக்களை மதவெறுப்போடு அணுகியிருப்பது வெட்கக்கேடானது. மேலும், ஜமாத்தைச் சேர்ந்தப் பெருமக்களிடம், ‘காஷ்மீரைப் போல ஒதுக்கி வைக்கப்படுவீர்கள்’ என மிரட்டியிருப்பது அதிகாரம் தங்களிடத்திலிருக்கிற ஆணவமும், அகங்காரமும் நிறைந்தப் பேச்சு; வெறுப்பரசியலின் உச்சம். இவ்வாறு பேசுவதற்கு அவருக்கு யார் இத்தகையத் துணிவைத் தந்தது? யார் நிலத்தில் யார் யாரை ஒதுக்கி வைப்பது? தமிழகமென்ன அவரது அப்பா வீட்டுச்சொத்தாக எண்ணிக்கொண்டு, தன்னை தமிழகத்தின் நிரந்தர அமைச்சராக எண்ணிக்கொண்டு பேசியிருக்கிறார். காலங்காலமாக இம்மண்ணில் நிலைபெற்று நீடித்து வாழும் தமிழர்களை இசுலாத்தைத் தழுவி நிற்பதாலேயே அந்நியர்கள் போலக் காட்டி அரசியல் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் எடுபடுமென அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நினைத்துக் கொண்டிருக்கிறார். நாம் தமிழர் கட்சி இந்நிலத்தில் இருக்கிறவரை கனவிலும் அத்தகைய நோக்கம் கைகூடாது. எமது அண்ணன் பழனிபாபா அவர்கள் கூறியது போல, இசுலாமிய மக்கள் அந்நியர்கள் அல்ல, இம்மண்ணின் மைந்தர்கள். பெருமைமிக்க தமிழ்த்தேசிய இனத்தின் மக்கள். அவர்களை அந்நியர்களாகச் சித்தரிப்பதையும், சிறுபான்மையினர் எனக் கூறித் தனிமைப்படுத்துவதையும் நாம் தமிழர் கட்சி வன்மையாக எதிர்க்கிறது; கண்டிக்கிறது.
எல்லா மதத்தவரின் வரிப்பணத்திலும்தான் அரசும், நிர்வாகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில், ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்கு மட்டும் ஏதும் செய்ய மறுப்பது எத்தகைய அணுகுமுறை? இதுதான் சனநாயகமா? இதுதான் இந்நாடு கூறும் மதச்சார்பின்மையா? மதவேறுபாடின்றி நல்லிணக்கத்தோடும், ஒருமைப்பாட்டோடும் வாழ்கிற தமிழகத்தில் ஒரு அமைச்சரே சமூக ஒற்றுமைக்கு எதிராக இத்தகைய நச்சுக்கருத்தை விதைக்கலாமா? எவ்வித வேறுபாடும், பாகுபாடுமின்றி மக்களுக்குத் தொண்டாற்றுவேன் எனச் சத்தியப் பிரமாணம் எடுத்துவிட்டு இன்றைக்கு அதற்கெதிராக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நடந்திருப்பது அவரது தகுதியின்மையையே காட்டுவதாக உள்ளது. பாஜகவின் ஊதுகுழலாக மாறி அவர்களின் இந்துத்துவ அரசியலைப் பரப்புவதற்குப் பதிலாக நேரிடியாகவே பாஜகவில் இணைந்து ராஜேந்திரபாலாஜி அதனைச் செய்யலாம். அமைச்சரின் இத்தகையப் பேச்சை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இதுவரை ஏன் மறுக்கவில்லை? நடவடிக்கை எடுக்கவில்லை? அவர்களும் இக்கருத்தில் உடன்படுகிறார்களா? என தெளிவுப்படுத்த வேண்டும்!
இசுலாமிய மக்களை இழிவுப்படுத்தும் விதத்தில் கருத்துத் தெரிவித்து, அவர்களது மனதைப் புண்படுத்திய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தனது கருத்துகளைத் திரும்பப் பெற்று, அதற்கு இசுலாமிய மக்களிடம் பொது மன்னிப்புக் கோர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி