பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும் ஆவின் நெய் விலை உயர்வை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

129

பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும் ஆவின் நெய் விலை உயர்வை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

ஒன்றரை ஆண்டுகளில் நான்காவது முறையாக ஆவின் நெய் விற்பனை விலையை ரூ.115 அளவிற்கு திமுக அரசு உயர்த்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆவின் பால் பொருட்களின் விலையை வாங்க முடியாத அளவிற்கு திமுக அரசு மீண்டும், மீண்டும் கடுமையாக உயர்த்துவதென்பது சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும்.

அரசு நிறுவனமான ஆவின் பால், வெண்ணெய், நெய் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின் விலையை திமுக அரசு தொடர்ச்சியாக உயர்த்தி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதன்படி, ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 15 ரூபாய் அளவிற்கு உயர்த்திய திமுக அரசு, கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதன் முறையாக ஆவின் நெய் விலையை லிட்டருக்கு ரூ.20 உயர்த்தியது. மீண்டும் அதே ஆண்டு ஜூலை மாதம் லிட்டருக்கு 45 ரூபாயும், டிசம்பர் மாதம் மேலும் 50 ரூபாயும் என உயர்த்தியது. தற்போது, மேலும் 80 ரூபாய் அளவிற்கு ஆவின் நெய் விலையை உயர்த்தி பசு நெய் என்பதே பகற்கனவாக, ஏழை மக்களுக்கு எட்டாத பண்டமாக திமுக அரசு மாற்றியுள்ளது அதன் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஆவின் பால் நிறுவனத்தை முற்று முழுதாகச் சிதைக்கும் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க திமுக அரசு எந்த முயற்சியும் எடுக்காத காரணத்தினால் ஆவின் பால் கொள்முதல் மெல்ல வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் விளைவாக குஜராத் பால் நிறுவனமான அமுல் தமிழ்நாட்டுப் பால் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதலைச் செய்யும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது. அது மட்டுமின்றி ஆவின் நிறுவனத்தின் கையிருப்பிலிருந்த 10 ஆயிரம் டன் வெண்ணெய் மற்றும் 25 ஆயிரம் டன் பால் பொடியைக் குறைந்த விலைக்குத் தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டு, தற்போது வடமாநில பால் நிறுவனங்களிடம் அதிக விலை கொடுத்து வெண்ணெய், பால் பொடியை வாங்கி வருகிறது திமுக அரசு. இதன் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மண்ணின் மைந்தர்களாகிய பால் உற்பத்தியாளர்களுக்கும், முகவர்களுக்கும் உரியத்தொகையினை திமுக அரசு வழங்க மறுப்பதால் ஆவின் நிறுவனம் மிகப்பெரிய நட்டத்திற்கு ஆளாகியுள்ளது என்பதுதான் கொடுமைகளின் உச்சமாகும்.

ஆகவே, திமுக அரசு நிர்வாகத் திறமையின்மை மற்றும் முறைகேடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள ஆவின் நிறுவன நட்டத்தை ஈடுகட்டும் பொருட்டு ஏழை எளிய மக்கள் தலையில் கூடுதல் சுமையை ஏற்றும் செயல்களைக் கைவிட்டு, உயர்த்தப்பட்ட ஆவின் நெய் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், மண்ணின் மைந்தர்களாகிய பால் உற்பத்தியாளர்களுக்கும், முகவர்களுக்கும் உரிய விலையை வழங்கி பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன்.

 

 

– செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமதுரை நடுவண் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவந்தவாசி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்