விதிகளை மீறி சாலையின் நடுவே பதாகை வைத்து தங்கை சுபஸ்ரீயின் உயிரைப் பறித்தவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

46

அறிக்கை: விதிகளை மீறி சாலையின் நடுவே பதாகை வைத்து தங்கை சுபஸ்ரீயின் உயிரைப் பறித்தவர்களையும், அதற்குத் துணைபோன அதிகாரிகளையும் உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

சென்னை, பள்ளிக்கரணை அருகே அதிமுக நிர்வாகியின் குடும்ப திருமண நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகை மேலே விழுந்ததில் சுபஸ்ரீ எனும் தங்கை நிலைதடுமாறி பின்வந்த வாகனத்தின் சக்கரத்தில் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தச் செய்தியானது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. மீள முடியாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தங்கையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது குடும்பத் துயரத்தில் முழுமையாகப் பங்கெடுக்கிறேன்.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகப் பதாகைகள் வைக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஏகப்பட்ட விதிமுறைகளை வகுத்திருக்கும் நிலையில் அதனைத் துளியும் மதிக்காது ஆளுங்கட்சியே வரம்புமீறி பொது மக்களுக்கு இடையூறாகச் சாலையின் நடுவே பதாகை வைத்து அநியாயமாக ஒரு உயிரைப் பறித்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. விதி மீறல்களுக்குத் துணைபோகும் ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கும், அதிகாரிகளின் அலட்சியமுமே முழுக்க முழுக்க இம்மரணத்திற்குக் காரணம் என்பதை எவராலும் மறுக்க இயலாது. ஏற்கனவே, கடந்த 2017ஆம் ஆண்டு கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்காக சாலையின் நடுவே அமைக்கப்பட்ட அலங்கார வளைவு மோதி ரகு என்கிற இளைஞர் உயிரிழந்த நிலையில் அதன் அதன் நீட்சியாகவே தற்போது தங்கை சுபஸ்ரீயின் மரணம் நிகழ்ந்திருக்கிறது.

இவ்விவகாரத்தில் தமிழக அரசு உளச்சான்றோடு செயல்பட்டு சாலையின் நடுவே பதாகை வைத்த அதிமுக நிர்வாகிகள் மீதும், விதிமீறலுக்குத் துணைபோன அரசு அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் எனவும், உயிரிழந்த தங்கை சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு 25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இடையூறாக எக்காலத்திலும் இனி பதாகைகள் சாலைகளில் வைக்கமாட்டோம் என்று உறுதியேற்கிறோம்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு
அடுத்த செய்திஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீதான ஆகப்பெரும் வன்முறை! – சீமான் கண்டனம்