20 ஆண்டுகளுக்கு மேல் மின்வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

59

20 ஆண்டுகளுக்கு மேல் மின்வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

20 ஆண்டுகளுக்கு மேலாக மின்வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களைப் பணிநியமனம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து மின்வாரிய ஊழியர்கள் நடத்தி வருகின்ற பட்டினிப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்கள் வைத்திருக்கிருக்கும் கோரிக்கை மிகத் தார்மீகமானது. நியாயமானது.

முறையான ஊதியமோ, விபத்து காப்பீடோ இன்றி 1997ஆம் ஆண்டு முதல் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரியும் தொழிலாளர்களைப் பணிநியமனம் செய்யாது, வெளிமாநிலத்தவரை பணிக்கு அமர்த்தும் நோக்கோடு கேங்மேன் பணியிடத்தை உருவாக்கியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. இதன்மூலம், பல ஆண்டுகளாக அரும்பாடாற்றி உழைத்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல், கஜா புயல் எனும் பேரிடர் ஏற்பட்டபோது பல நாட்கள் ஓய்வின்றி உழைத்தத் தொழிலாளர்களின் உழைப்பையும் அலட்சியம் செய்திருக்கிறது தமிழக அரசு.

ஆண்டொன்றுக்கு 6 முதல் 8 இலட்சம்வரை புதிய நுகர்வோர் மின் இணைப்பு பெறுகின்றனர். இத்தகைய நுகர்வோருக்கு இணைப்பு அளித்தல், பராமரித்தல், மின் உற்பத்தியை உயர்த்துதல் உள்ளிட்டப் பணிகளுக்குக் கூடுதலாக தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஆரம்பக்கட்டப் பணிகளைச் செய்யும் கள உதவியாளர்கள் இடம் நிரப்பப்படாததால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இடம் காலியாக உள்ளது. அதனை நிரப்ப எவ்வித முயற்சியையும் எடுக்காத தமிழக அரசு, வெறுமனே 5,000 பேரை கேங்மேன் முறையில் தேர்வுசெய்யவிருப்பதாக அறிவித்திருப்பது அப்பட்டமான நிர்வாகச் சீர்கேடு. உழைப்புச் சுரண்டலில் ஈடுபடும் மோசடித்தனம். இது தமிழக அரசு பணிநிரந்தரம் தொடர்பாகக் கொடுத்த வாக்குறுதியை மீறுவதாகும்.

ஆகவே, அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் எனவும், அவர்களை பணிநியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருஙகிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதேனி நாம் தமிழர் கட்சி முயற்சியால் திறக்கப்பட்ட கழிவறைகள்
அடுத்த செய்திபியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்