பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா?  – சீமான் கண்டனம்

30

அறிக்கை: பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா?  – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

முதன்மை உணவுப்பொருட்களுள் ஒன்றாக இருக்கிற பாலின் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் வரை உயர்த்தியிருக்கிற தமிழக அரசின் செயல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கடும் கொந்தளிப்பினையும் ஏற்படுத்தியிருக்கிறது. அத்தியாவசியப் பண்டமான பாலின் விலையை இலாப நோக்கோடு வணிகப்பார்வையில் ஒரேடியாக உயர்த்தியிருப்பது ஏழை, நடுத்தர மக்களை நேரடியாகப் பாதிக்கிற கொடுஞ்செயல். இவ்விலையேற்றத்திற்கு இடுபொருட்களின் விலையுயர்வைக் காரணமாகக் காட்டுவதை ஒருநாளும் ஏற்க முடியாது. இதன்மூலம், விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தத் தமிழக அரசு முழுமையாகத் தவறிவிட்டது என்பதனையே உணர்த்துவதாக இருக்கிறது.

குறைவான தொகைக்குப் பாலினைக் கொள்முதல் செய்து அதனைவிட அதிகமான விலைக்கு மக்களிடம் விற்று ஒரு வியாபாரி போல மக்களின் சுமையில் இலாபம் பார்க்கத் துடிக்கும் தமிழக அரசின் செயல் வெட்கக்கேடானது. வன்மையானக் கண்டனத்திற்குரியது. அதிகமான விலைக்கு பாலினைக் கொள்முதல் செய்தாலும் மானியம் அளித்து அவற்றைக் குறைவானத் தொகைக்கு மக்களுக்கு அளிப்பதே பொறுப்புள்ள ஓர் அரசின் கடமையாக இருக்க முடியும். அதனைச் செய்யாது, பாலின் விலையை அதிகப்படியாக ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிக்கும் இரக்கமற்ற நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது அரச நிர்வாகத்தின் படுதோல்வியையே காட்டுகிறது. ‘மக்களிடையே பால் விலையேற்றம் எந்தக் கொந்தளிப்பினையும் ஏற்படுத்தவில்லை. யாரும் அதற்கெதிராகப் போராடவில்லை’ எனக்கூறி பால் விலையேற்றத்தை மக்கள் ஆதரிப்பது போல கருத்துருவாக்கத்தைச் செய்ய முயலும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, மக்கள் போராடியப் போராட்டங்களுக்கெல்லாம் செவிசாய்த்து அரசு அதற்குத் தீர்வு கண்டிக்கிறதா என்கிற கேள்விக்குப் பதில் கூறுவாரா? மக்கள் போராடுவதற்கு முன்பு அவர்களின் தேவையறிந்து சேவைசெய்வதே ஒரு நல்ல அரசிற்கான இலக்கணமாகும். அத்தகைய அரசை நிறுவத்தான் இந்நாட்டில் மன்னராட்சி முறை வீழ்த்தப்பட்டு, மக்களாட்சி முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்று மக்களின் உணர்வுக்கோ, அவர்களின் உரிமைக்கோ மதிப்பளிக்காது ஒரு அமைச்சரே பேசுவது இவ்வாறு பேசி வருவது அபத்தமானது.

ஆகவே, தமிழக மக்களின் பின்தங்கிய பொருளாதார நிலையைக் கணக்கில்கொண்டு அவர்களின் மீது மேலும் சுமை ஏறாமல் இருக்க ஏற்றப்பட்டப் பாலின் விலையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்