தமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம்! உறுதியாய் வெல்வோம்!- சீமான் சூளுரை

300

மே 18 – வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்கே என்பதை உலகிற்குக் காட்ட, தமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம்! உறுதியாய் வெல்வோம்!
– சீமான் சூளுரை

வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனம் தனித்தன்மை கொண்ட ஒரு இறையாண்மை தேசிய இனமாகும். தாயகத்தமிழகம்,தமிழீழம் என்கின்ற இரண்டு தாயக நிலங்களை உடையப் பூர்வகுடி மரபினர் தமிழர். தமிழர்களின் பூர்வீக தாய் நாடான தமிழீழ நிலத்தை பல நூற்றாண்டுகளாக சிங்களர்கள் ஆக்கிரமித்து மண்ணின் பூர்வ குடிகளான தமிழர்களை அடிமைத் தேசிய இனமாக வீழ்த்தி சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர மக்களாக நடத்தி வருகின்றனர். கொடுமையான சிங்கள ஆதிக்கத்தை எதிர்த்து தமிழர்கள் அகிம்சை வழியில் தந்தை செல்வா தலைமையில் போராடிப் பார்த்தார்கள். ஆனால், சிங்கள வல்லாதிக்கமோ தமிழர்களை அடிமைப்படுத்துவதில், உரிமைகளைப் பறிப்பதில்,நிலத்தை அபகரிப்பதில் முனைப்பாக இருந்து தமிழர்களை அழித்தொழிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வந்தது.

இந்தக் கொடுமையான அநீதிக்கு எதிராகத்தான் எம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் வீரம் செறிந்த தமிழின இளைஞர்கள் விடுதலைப்புலிகள் என்கின்ற வரலாற்றில் இதுவரை காணாத மாபெரும் போராளிகளின் அமைப்பினைத் தொடங்கி, சிங்கள இராணுவத்திடமிருந்து தமிழரின் இறையாண்மையை மீட்க மாபெரும் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போரை நிகழ்த்தினார்கள். இந்த விடுதலைப் போரால் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழீழ நிலம் மீட்கப்பட்டு தமிழரின் ஆளுகைக்குள் வந்தது. தமிழ் இன வரலாற்றில் வீரமங்கை வேலு நாச்சியாருக்குப் பிறகு, அடிமைப்பட்டுப் போன நிலத்தை மீட்ட ஒரே ஒரு தலைவராக நம் தேசிய தலைவர் விளங்குகிறார்கள்.

இந்த உலகத்தில் களவற்ற, ஊழல் இலஞ்சமற்ற,அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தாய் மொழியில் அமைந்த,பெண்களுக்குப் பாதுகாப்பும் சம உரிமையும் நிறைந்த ஒரு பொன்னுலகப் பூமியாக தமிழ் ஈழ சோசலிச குடியரசு நாட்டினை என்னுயிர் அண்ணன் நம் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் துளித்துளியாக செதுக்கி உருவாக்கினார்கள்.

இந்திய பெருநாட்டில் எல்லையிலே தமிழர்களின் ஒரு நாடு உருவானால் அது இந்திய நாட்டிற்கு மாபெரும் பாதுகாப்பாக விளங்கும் என்பதை உணர்ந்து கொள்ளத் தவறிய இந்திய அரசியல் தலைவர்கள் சிங்களப் பேரினவாத அரசுடன் இணைந்து கொண்டு தமிழர்களின் கனவு நிலமான தமிழீழ நாட்டினை அழிக்க துணிந்தார்கள்.

உலக வல்லாதிக்க நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கொண்டு இந்திய வல்லாதிக்க அரசோடு இணைந்து சிங்கள அரசுக்கு கடன், ஆயுத உதவி, ஆலோசனை என அனைத்தையும் வழங்கி இதுவரை வரலாறு காணாத இன அழிப்பினை செய்வதற்கு உடன் நின்றன. தனது சொந்த நாட்டின் மக்களின் மீதே தடை செய்யப்பட்ட ஆயுதங்களை கொண்டு கொடும் தாக்குதலை நடத்தி இலட்சக்கணக்கானத் தமிழர்களை அழித்து இந்த நூற்றாண்டு காணாத மாபெரும் இனப்படுகொலையை சிங்களப் பேரினவாத அரசு செய்து முடித்தது.

விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்ற பொய்யுரையை வைத்துக்கொண்டு விடுதலைப்புலிகளின் அழிவிற்கு பின்னால் தமிழர்களுக்கு சம உரிமை வழங்குவோம் என்ற பசப்பு வார்த்தைகளோடு சிங்கள அரசு இந்த இன அழிப்பு போரினை நடத்தியது.

கடந்த 2009 மே 18 வரை நடந்த இந்தக் கொடுமையான இன அழிப்புப் போரில் பல இலட்சக்கணக்கான தமிழர்கள் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கானப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். மனநோயாளிகளை போல நிர்வாண உடல்களை படமெடுத்து சிங்களப் பேரினவாத அரசு தனது வக்கிரத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படையாக காண்பித்தது.

நடந்து முடிந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு கடந்த 10 ஆண்டுகளாக உலக அரங்குகளில், ஐநா மனித உரிமை அமர்வுகளில் தமிழர்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறோம். ஆனால், நியாயமான எமது குரலை உலக சமூகம் சிறிதளவுகூட மதிக்காமல் சிங்களப் பேரினவாத அரசிற்கு தனது முழுமையான ஆதரவினை வழங்கி வருவது தமிழ்த்தேசிய இனத்திற்கு உலகச் சமூகம் செய்துவருகிற மாபெரும் அநீதியும்,பெருங்கொடுமையும் ஆகும்.

உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற 12 கோடி தமிழர் என்கின்ற தேசிய இன மக்களின் ஒற்றைக் கோரிக்கையான தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பினை ஐ.நா. மன்றமும், உலகச் சமூகமும் முன்னெடுக்காமல், மெளனமாக இருப்பது இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த சிங்களனின் இனப்படுகொலையை அங்கீகரிக்கிற நடவடிக்கையாகவே தமிழர்களாகிய நாங்கள் கருதுகிறோம்.

இனப்படுகொலை நிகழ்ந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும்கூட தமிழர்களின் பூர்வீக நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. போரின்போது காணாமல் போன, கைது செய்யப்பட்டப் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை பற்றிய எந்தத் தகவலையும் சிங்களப் பேரினவாத அரசு அளிக்காமல் கொடும் மௌனம் காத்து வருகிறது. இன்னமும் தமிழர் நிலத்தில் சிங்கள இராணுவத்தினரின் அத்துமீறல்களும், அநீதியான கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகள் சிங்கள இனமும்,தமிழினமும் இலங்கை என்ற ஒற்றை நாட்டிற்குள் இணைந்து வாழ முடியாது என்கின்ற நிலையையும், சுதந்திர தமிழ் ஈழ சோசலிசக் குடியரசின் தேவையையும் மீண்டும் மீண்டும் உறுதி செய்து வருகின்றன.

இனி தமிழீழ நிலத்தில் இன்னொரு விடுதலைப் போராட்டத்திற்கான சூழல் இல்லாத நிலையில் அதற்கானப் போராட்ட வடிவங்களை கடல் கடந்து வாழக்கூடிய தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் மக்களாகிய நாம் முன்னெடுக்கவேண்டிய கடமையில் இருக்கிறோம். தமிழர்களின் மற்றொரு தாய் நிலமான தமிழகத்தில் இனப்படுகொலை காலங்களில் எந்த அதிகாரத்தினால் நமது போராட்டங்கள் நசுக்கப்பட்டனவோ, அந்த அதிகாரத்தினை கைப்பற்ற வேண்டிய மாபெரும் தேவை தற்போது எழுந்திருக்கிறது. அந்தத் தேவையை உணர்ந்துதான் தாயகத் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கானத் தமிழர்கள் இனத்திற்கான மாண்புமிக்க தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள்.

மே 18, ஒவ்வொரு தமிழனும் மறக்கக்கூடாத ஆழ்மனதில் வஞ்சினம் மேற்கொள்ள வேண்டிய நாளாக அமைந்து இருக்கிறது. இந்த இனப்படுகொலை நிகழ்ந்த நாளில் வீழ்ந்த இனம் வீழ்ந்ததாகவே இருக்கட்டும் என வீழ்த்தியவர்கள் இறுமாந்து இருக்க, அதை முறியடித்து வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்காகவே என்பதைத் தமிழர்கள் தமக்குள்ளாகவே உறுதி செய்து கொள்கின்ற எழுச்சி நாளாக இந்நாள் அமைகின்றது.

தமிழர்களின் தாய் நிலமான ஈழப் பெரு நிலத்தில் இந்த நாளில்தான் புலிக்கொடி வீழ்த்தப்பட்டது.ஆனால், இன்று அதே புலிக்கொடி உலகமெங்கும் தலைநிமிர்ந்து பறக்கிறது. இன்றல்ல ஒரு நாள். உறுதியாய் ஈழத்திலும் புலிக்கொடி பறக்கும். அடிமை இருட்டின் கீழ்வானம் சிவக்கும். ஈழம் பிறக்கும்.

வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்கே என்பதை உலகிற்குக் காட்ட, தமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம்! உறுதியாய் வெல்வோம்!

மாவீரர் சிந்திய குருதி
வெல்வது உறுதி.

தாயக விடுதலைப் போரில் உயிர் நீத்த தாய்த் தமிழ் உறவுகளுக்கும், இன பற்றாளர்களுக்கும் எமது அக வணக்கம்.

தன்னுயிர் தந்து விடுதலை வேட்கைக்காகக் களத்தில் நின்ற எம் மாவீரர்களுக்கு எமது வீரவணக்கம்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி