பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே!- புரட்சிப்பாவலர் பாரதிதாசன்

3163

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே!
– புரட்சிப்பாவலர் பாரதிதாசன்

ஆதிக்காலத்தில் தமிழ்ச்சமூகத்திற்கு பெண்களே தலைமை வகித்திருக்கிறார்கள். இடைக்காலத்தில் நிகழ்ந்த அந்நியப் பண்பாட்டுப் படையெடுப்பினாலும், இனக்கலப்பினாலுமே பெண்களுக்குரிய தலைமைப் பறிக்கப்பட்டிருக்கிறது. அத்தகையச் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலத்தில் பல்கிப்பெருகி வருவது பெண்களின் நடமாடும் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பான வாழ்க்கை முறையினைக் கேள்விக்குறியாக்குவதாகவும் உள்ளது. பெண்களை நதியாகவும், தெய்வமாக உருவகப்படுத்தி வழிபடும் நாட்டில் பெண்களுக்கு எதிரான இத்தொடர் தாக்குதல்கள் ஒவ்வொரு மனிதருக்குமான தலைகுனிவு என்பதை மனதில் கொள்ள வேண்டும். விளிம்புநிலையில் இருக்கும் அடித்தட்டு சமூகத்துப் பெண்கள் மீது ஆணாதிக்க வன்முறை அதிகளவில் நிகழ்த்தப்படுகிறது என்றாலும், இத்தொடர் தாக்குதல்கள் ஒட்டுமொத்தப் பெண் சமூகத்தின் மீதே ஏவப்படுபவையே!

இவை எல்லாவற்றிற்குமானத் தீர்வாகப் பெண்கள் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்ற கல்வி முறை, திரைப்படம் என எல்லாவற்றிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்குச் சமநிகராக பெண்களுக்கு 50 விழுக்காட்டு இடஒதுக்கீட்டினைப் பெற்றுத்தர முன்வர வேண்டும். மகப்பேறு காலத்தை 6 மாதங்களாக நீட்டித்து ஊதியத்துடன் கூடிய விடுப்பைத் தர வேண்டும். அலுவலங்களில் பணிபுரியும் பெண்களின் வசதிக்காக 15 நிமிடங்கள் தாமதமாக வந்தாலும் பணியில் இணைந்துகொள்ள நேரநீட்டிப்பு செய்ய வேண்டும். பெண்களுக்கென அதிகப்படியானப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். பெண்களுக்கென தனி சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கென தனிப்படை அமைத்து அவர்களின் பாதுப்பான வாழ்க்கையினை உறுதி செய்ய வேண்டும்.

இந்தியத் தேர்தல் அரசியல் வரலாற்றில் இதுவரை செய்யாத முன்னெடுப்பை வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி செய்யவிருக்கிறது. பாலினச் சமத்துவத்தைப் பேணும் விதமாக 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் சரிநிகராகக் களமிறக்குகிறது. அதேபோல, 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான வாய்ப்பினை வழங்கவிருக்கிறது. பெண்ணியத்தை பேசிக் கொண்டிருக்கிற அரசியல் இயக்கங்களுக்கு மத்தியில் அதனைக் களத்தில் சாதித்துக் காட்டியப் பெருமை நாம் தமிழர் கட்சியினையே சாரும். இந்த நாளில் பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத் தரவும் நாம் தமிழர் கட்சி சமரசமின்றி சமர் செய்யும் என இந்நாளில் உறுதியளிக்கிறேன்.

அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்!

பெண்மை போற்றதும்! பெண்மை போற்றதும்!

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-கிணத்துக்கடவு தொகுதி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – ஜெர்மனி பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030028