புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை

148

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்,
மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், இன்று 25-03-2019 முதல்
16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

முதல் நாளான இன்று 25-03-2019 மாலை 05 மணியளவில் புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி.ஷர்மிளா பேகம். (இளங்கலை சமூகவியல்) மற்றும் தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் திருமதி பா.கெளரி (ஆசிரியர்) ஆகியோரை ஆதரித்து புதுச்சேரி சுதேசி ஆலை அருகில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் “விவசாயி” சின்னத்திற்கு வாக்குக்கேட்டு பரப்புரையாற்றினார். அப்பொழுது பாஜகவும் காங்கிரசும் வெவ்வேறல்ல; இரண்டு கட்சிகளுக்கும் கொள்கை ஒன்றுதான். நீட், ஜி.எஸ்.டி உள்ளிட்ட திட்டங்களைக் காங்கிரஸ் கொண்டுவந்தது. பாஜக செயல்படுத்தியது. தேர்தல் நேரத்தில் தான் இரண்டு கட்சிகளும் சண்டையிட்டுக்கொள்வது போல நடிக்கின்றன. தேசியக் கட்சிகளின் வீழ்ச்சியும் மாநிலக் கட்சிகளின் எழுச்சியுமே இந்திய நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்குப் பாதுகாப்பானது. சுழற்சிமுறையில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் பதவி என்றநிலை வரவேண்டும். தமிழகம், புதுவை மற்றும் டெல்லியில் முதலமைச்சர் அதிகாரத்தில் ஆளுநர்களின் தலையீடு அதிகரித்துக்கொண்டே போகிறது. விவசாயிகளுக்கு மானியம், கடன் தள்ளுபடி அறிவிக்கும் இவர்களால் விவசாயிகள் யாரால் ஏழையாகவும் கடனாளியாகவும் ஆனார்கள் என்று பதில்கூற முடியுமா என கேள்வியெழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து இரவு 08:30 மணியளவில் கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சித்ரா (இளங்கலை வணிகவியல்), சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சிவா ஜோதி (முதுகலை வணிகவியல்) ஆகியோரை ஆதரித்து பரப்புரை செய்தார்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திநாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இரண்டாம் நாள் (26-03-2019)