தூய குடிநீர் இலவசம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

824

தூய குடிநீர் இலவசம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

  • இன்னும் கால் நூற்றாண்டு கழித்து உலகின் பணக்காரர்கள் பட்டியலை எடுத்துப் பார்த்தால் தங்கம் விற்றவரோ, பெட்ரோல், டீசல் விற்றவரோ இருக்க மாட்டார்கள். குடிநீர் விற்றவர்தான் முதன்மைப் பணக்காரராக இருப்பார். தங்கம்,பெட்ரோல், டீசல் இல்லாமல் மனிதன் வாழ முடியும்.
  • தண்ணீர் இல்லாமல் எந்த ஓர் உயிரினமும் உயிர் வாழ முடியாது. தவித்த வாய்க்குத் தண்ணீரைக்கூட தன் நாட்டு மக்களுக்குக் கொடுக்க முடியாத அரசு எதற்கு? எனவேதான் நாம் தமிழர் அரசு தன் நாட்டு மக்களுக்குத் தூய குடிநீரை இலவசமாகக் கொடுக்கும் திட்டத்தை முன்வைக்கிறது.

முதல் துரோகம்:

  • நீர் சூழ்ந்த உலகில் வாழும் 715 கோடி மக்களுக்கும், 2 விழுக்காடு குடிநீர்தான் இருக்கிறது. இந்த 2 விழுக்காடு குடிநீரை 20 விழுக்காடாக மாற்றுவது எப்படி என்று யோசிக்காமல், குடிநீரை விற்றால் நிறையச் சம்பாதிக்கலாம் என்று நினைத்ததுதான் உயிரினத்திற்குச் செய்த மிகப்பெரிய துரோகம்.
  • கல்வி, மருத்துவம் தண்ணீரை விற்பனைப் பொருளாக சந்தைப்படுத்தும் தேசம் உருப்படாது. தண்ணீரை விற்பனை செய்வது மானுட சமூகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உயிரினத்திற்கும் செய்த மிகப்பெரிய பச்சைத் துரோகம். என்று நாம் தமிழர் அரசு கருதுகிறது.

கணினி இலவசம் சரி, தண்ணீர்?:

  • ஒரு மனிதன் குளிக்காமல் ஒரு வாரம் இருக்க முடியும். ஆனால் தண்ணீரைக் குடிக்காமல் ஒரு நாளும் இருக்க முடியாது, எனவேதான் தண்ணீரை உயிர் ஆகாரமாகக் கருதுகிறோம்.
  • எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுக்கின்ற அரசு தண்ணீரை மட்டும் விற்பனைப் பொருளாக வைத்திருக்கிறது. 30 ஆயிரம் மதிப்புள்ள கணினியை இலவசமாகக் கொடுக்கின்ற அரசு தண்ணீரை 10 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது என்றால் தண்ணீர் உயர்ந்த சந்தைப் பொருளாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.
  • தண்ணீரை விற்பனை செய்வது மானுட சமூகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உயிரினத்திற்கும் செய்த மிகப்பெரிய பச்சைத்துரோகம் என்று நாம் தமிழர் அரசு கருதுகிறது. – சீமான்

கடல்நீர் குடிநீரா?

சுற்றுச் சூழலைப் பாதிக்கும் கடல் நீரைக் சுத்திகரித்துக் குடிநீராகப் பயன்படுத்தும் திட்டத்தை நாம் தமிழர் அரசு எதிர்க்கிறது. அதற்கென ஒதுக்கப்படும் 50 ஆயிரம் கோடி ரூபாயை வீண் என்று கருதுகின்றோம். நாம் தமிழர் அரசு அத்தகைய திட்டத்தைச் செயல்படுத்தாது. அந்தத் தொகையில் நீர் நிலைகளை ஆழப்படுத்தினாலே மழைநீரைத் தேக்கி, நீர்வளத்தைப் பெருக்கி அதன்மூலம் அனைவருக்கும் தூய குடிநீரைத் தடையின்றிக் கொடுக்க முடியும்.

மற்ற உயரினங்களுக்கும் தண்ணீர்

உயிர் ஆகாரமாக இருக்கின்ற தண்ணீர் தனியார் முதலாளிகளிடம் விற்பனைக்குப் போய்விட்டது. நிலத்தடி நீரை ஊறிஞ்சி பல கோடிக் கணக்கான லிட்டர் விற்றுக் கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தையும் தாண்டி வெளி மாநிலம், வெளிநாடுகள் என்று தண்ணீர் குடுவைகளில் (போத்தல்களில்) ஏற்றுமதியாகிறது, அதனால் நிலத்தடி நீர் கொள்ளை போகிறது.

  • மனிதன் தன் தேவைக்குக் கடையில் சென்று பணம் கொடுத்துத் தண்ணீரை வாங்கிக்குடிக்க முடியும். ஆனால் கோழி, கொக்கு, குருவி, காக்கை, சிங்கம், கரடி, புலி, ஆடு, மாடு போன்ற அனைத்து உயிரினங்களும் எந்தக் கடைக்குச் சென்று தண்ணீரை வாங்கிக் குடிக்கும்? மனிதன் தான் வாழ்வதற்கு மற்ற உயிரினங்களை அழிப்பது மிகவும் கொடுமையானது, அதை நாம் தமிழர் அரசு மாற்றும்.

அப்பா நம்மாழ்வார் பாதையில்

வேளாண் பெருங்குடியோன் அப்பா நம்மாழ்வார் சொல்வது போன்று தேக்கி வைக்கும் நீரை வேளாண்மைக்குப் பயன்படுத்திவிட்டு, நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் நீரைக் குடிநீராகப் பயன்படுத்துவோம். அதற்கு ஏற்ப ஏரி, குளம், கண்மாய்களில் நீர்த்தேக்கும் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம். அனைவருக்கும் தூய குடிநீரை இலவசமாகத் தருவோம்.

அனைத்து உயிர்களுக்குமான நீர்த்தேவையை நாம் தமிழர் அரசு உறுதி செய்யும்.

முந்தைய செய்திமறை நீர்க் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
அடுத்த செய்திஇயற்கை வேளாண்மை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு