மறை நீர்க் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

633

மறை நீர்க் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

குளிர்பானத் தொழிற்சாலைகளுக்குத் தடை:

  • தாமிரபரணி ஆற்றில் ஒரு தனியார் குளிர்பான நிறுவனம் நாள் ஒன்றுக்கு ஒன்பது லட்சம் லிட்டரும், மற்றொரு நிறுவனம் 13 லட்சம் லிட்டரும் தண்ணீர் எடுத்துக்கொள்ள 99 வருடக் குத்தகைக்கு விற்றிருக்கிறார்கள். தினசரி 22 இலட்சம் லிட்டர் தண்ணீர். ஆண்டிற்கு 803 கோடி லிட்டர் தண்ணீர் செலவாகிறது. தமிழகம் முழுதும் பல இடங்களில் இப்படித் தனியாருக்குத் தண்ணீரைத் தாரைவார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
  • கங்கைகொண்டான், திருச்சி உறையூர், திருமழிசை, மதுரை வைகை ஆறு, சிவகங்கை, பெருந்துறை, திருவள்ளூர் அரண்வாயல், செங்கல்பட்டு, தண்டலம் கூட்டுச்சாலை, படப்பை உள்ளிட்ட பல இடங்களில் இருக்கும் தனியார் குளிர்பானம் மற்றும் மதுபான நிறுவனங்கள் அனைத்தும் தடை செய்யப்படும். அரசு அவர்களோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தங்கள் நீக்கப்படும். இதன் மூலம் மண்ணின் நீர்வளம் காக்கப்படும்.
  • இந்த மண்ணை, இயற்கை வளத்தை, நீர் வளத்தை அடுத்த தலைமுறைக்கு அப்படியே பாதுகாத்து வழங்கிட வேண்டியது நம் கடமை. நமது நீர்வளத்தைச் சேமித்துப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழகத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும். பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நீர் வளத்தினைப் பாதுகாக்கப் புதிய கொள்கை மறை நீர்ப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்படும்.

கோழி வளர்ப்பில் நீர்க் கொள்ளை:

  • ஒரு கோழி முட்டை ஒருவாகி விற்பனைக்குச் செல்ல 196 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இந்தியாவின் மொத்த முட்டைத் தேவையில் 90 விழுக்காடு முட்டைகள் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து மட்டுமே நிறைவேற்றப்படுகிறது.
  • ஆண்டிற்கு 2000 கோடி முட்டைகள் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகிறது. ஒரு முட்டைக்கு 196 லிட்டர் தண்ணீர் என்றால் 2000 கோடி முட்டைக்கு நான்கு இலட்சம் கோடி லிட்டர் தண்ணீர் செலவாகிறது. அதாவது 133 டி.எம்.சி. தண்ணீர் செலவாகிக் கொண்டிருக்கிறது. இது தமிழகத்தின் நீர்ப் பொருளாதாரத்தை, நீர் ஆதாரத்தைக் கொள்ளையடிக்கும் போக்காகும்.
  • ஒரு கிலோ இறைச்சிக் கோழிக்கு 4325 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. தமிழ்நாட்டில் இருந்து ஆண்டிற்கு சுமார் 2000 கோடி கிலோ கறிக்கோழி ஏற்றுமதியாகிறது. இதற்கான தண்ணீர்ச் செலவு 86,50,000 லிட்டர் ஆகும்.

கார் உற்பத்தியில் கொள்ளைபோகும் நிலத்தடி நீர்:

  • தமிழ் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒரு டன் எடையுள்ள கார் உற்பத்தியாகி வெளியே வருவதற்கு 4,50,000 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இந்தத் தனியார் நிறுவனம் ஆண்டிற்கு சுமார் 50 இலட்சம் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. ஆக சுமார் 25 இலட்சம் கோடி லிட்டர் தண்ணீர் இங்கே கொள்ளைப்போய்க்கொண்டிருக்கிறது. அதாவது ஆண்டிற்கு சுமார் 83 டி.எம்.சி. தண்ணீர் விலையேதும் இல்லாமல் கொள்ளைப்போய்க்கொண்டிருக்கிறது.
  • அமெரிக்க சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முட்டை மற்றும் இறைச்சிகளைச் சொந்த நாட்டில் உற்பத்தி செய்வதில்லை. மூன்றாம் உலக நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்து கொள்கிறார்கள். காரணம் நீராதாரம் செலவாகிறது. இறைச்சி முட்டைகளை இறக்குமதி செய்வதற்காகும் தொகைகளைவிடத் தூய தண்ணீருக்கான செலவு பல ஆயிரம் கோடி அதிகம் என்பதால்தான், தன் நாட்டில் உள்ள தண்ணீரைப் பாதுகாத்துக்கொண்டு இறைச்சி முட்டைகளை இறக்குமதி செய்துகொள்கிறார்கள். சொந்த நாட்டின் நீராதாரத்தைத் தேவையின்றி அழிக்கக்கூடாது என்ற பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது.
  • ஆடு மாடுகளின் ஒரு கிலோ தோலைப் பதனிட்டு அதனைச் செருப்பாகவோ, தோல் பொருளாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் தண்ணீரும், ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 19,000 லிட்டர் தண்ணீரும் செலவாகிக் கொண்டிருக்கிறது என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தால் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகவே இருக்கிறது.

புதிய நீர்த்தேக்கத் திட்டங்கள்:

  • சிறுவாணி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் முழுதும் தமிழகத்தைப் சேர்ந்தது. ஆனால் சிறுவாணி அணை கேரளாவில் இருப்பதால் நொய்யல் ஆற்றில் வருகின்ற நீர்வரத்து கோவை மாநகர குடிநீர் தேவையைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாததாக இருக்கிறது. அதனால் சிறுவாணி அணைக்கருகில் தமிழக எல்லையில் புதிய அணை கட்டப்படும். சிறுவாணியில் இருக்கும் உபரிநீர் ஆனைக்கட்டி வழியாகக் கோட்டத்துறை ஆற்றில் கலந்து கேரளா மாநிலம் செல்வதைத் தடுக்க ஆனைக்கட்டியில் நீர்த்தேக்கம் கட்டிக் கணுவாய் சங்கனூர்ப் பள்ளம் வழியாக நொய்யல் ஆற்றில் கலக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஆண்டு முழுவதும் மழைபெய்யக்கூடிய வால்பாறை மலைப் பகுதியில் பெய்யும் மழைநீர் சோலையாறு வழியாகக் கேரளாவில் நுழைந்து கடலில் கலந்துகொண்டிருக்கிறது. எனவே வால்பாறையில் புதிய அணையைக் கட்டி அமராவதி ஆற்றுக்கு நீரைக் கொண்டுவரும் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவோம்.
  • பழனிமலை மற்றும் கொடைக்கானல் மலையில் பொழியும் மழைநீரைத் தேக்கப் புதிய அணையைக் கட்டி அந்த நீரைச் சண்முகா ஆற்றில் கலக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவோம்.
  • கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள புளியஞ்சோலை, கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை ஆகிய பகுதிகளில் பொழியும் மழைநீரைத் தேக்கப் புதிய நீர்த்தேக்க அணை கட்டப்படும்.
  • மக்களின் வாழ்வியலுக்கான இப்பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் செய்து முடிக்கப்படும் எனத் தமிழக மக்களாகிய எம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு நாம் தமிழர் அரசு உறுதி அளிக்கிறது.

தண்ணீரின் தேவையில் தன்னிறைவு அடைவோம்! – சீமான்

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-கோவில்பட்டி தொகுதி
அடுத்த செய்திதூய குடிநீர் இலவசம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு