தமிழ்த் தேசிய இனம் எதிர் கொள்ளும் சிக்கல்களும் – தீர்வும் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

557

தமிழ்த் தேசிய இனம் எதிர் கொள்ளும் சிக்கல்களும் – தீர்வும் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

எங்கள் மண்ணின் வளத்தையும் மக்களின் நலத்தையும்
யார் கெடுத்தாலும் நாங்கள் பேரரணாக நின்று தடுப்போம்!
– செந்தமிழன் சீமான்

நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழத் தேசிய இனத்தின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டிருக்கிறது. நம் மாநிலத்திற்கு ஏற்பட்ட சிக்கல்களும் அதற்கான தீர்வையும் முன் வைக்கிறது.

கச்சத்தீவு சிக்கல்:

தமிழகத்தின் சொத்தாக இராமநாதபுர மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்த தீவு அது. இதற்கான வரியைச் சென்னை இராஜதானிக்கு முறைப்படி கட்டிவந்திருக்கிறார்கள். எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்கு சொந்தமாக இருந்ததே இல்லை என்று வரலாற்று ஆவணங்களும் இருக்கின்றது. இந்த நிலையில் 1974ஆ-ம் ஆண்டு இந்திராகாந்தி முதன்மை அமைச்சராக இருந்தபோது இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்காவிற்கு ஒப்பந்தம் போட்டுத் தாரை வார்த்துக் கொடுத்தார். 1912-ம் அங்கே அந்தோனியார் கோவில் கட்டப்பட்டதில் இருந்து தமிழகத்தின் பாதிரியார்கள் தான் கச்சத்தீவுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். இப்போது முழு அதிகாரமும் இலங்கை அரசிடமே இருக்கின்றது.

தீர்வு:

  • கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை சுமார் 560 தமிழக மீனவர்கள், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறர்கள். நாம் தமிழர் அரசு அதற்கான சட்ட நடவடிக்கையை எடுக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுத் தரும்.
  • 1974ஆம் ஆண்டு போட்டுக்கொண்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்தில் கச்சத்தீவிற்கு இந்தியர்கள் செல்லத் தடையில்லை. எந்த நேரத்திலும் யாரும் சென்று வரலாம். தீவில் மீன் வலைகளை உலர்த்திக் கொள்ளலாம். சோழன் குடாக்கடல் (பாக் சலசந்தி) இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடிக்கலாம் என்ற ஒப்பந்தம் இருந்தது. பிறகு 1976-ஆம் ஆண்டு போட்டுக்கொண்ட மறு ஒப்பந்தத்தில் மன்னார் வளைகுடாப் பகுதியல் மீன்பிடிக்கக் கட்டுப்பாடு என மாற்றியிருந்தார்கள். ஆனாலும், கச்சத்தீவிற்குப் பழையபடி சென்றுவரத் தடை இல்லை.
  • 1983ஆம் ஆண்டு, இந்தியாதான் எல்லை தாண்டிச் செல்வது தமிழக மீனவர்களுக்குப் பாதிப்பு என்று கூறி ஒரு ஆணையை வெளியிட்டது. அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டாலே 1974ஆம் ஆண்டு போட்டுக்கொண்ட ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துவிடும். எனவே இந்திய அரசு 83-ம் ஆண்டு போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
  • வியன்னா ஒப்பந்தப்படி இரு நாடுகள் சேர்ந்து போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி இரண்டில் ஒரு நாடு அதைக் கடைபிடிக்கத் தவறினால், மற்றொரு நாடு அந்த ஒப்பந்தத்தைத் தாராளமாகத் திரும்பப்பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறைப்படி கச்சத்தீவில் விதிமுறைகளை மீறித் தமிழர்களை அனுமதிக்காததைக் கண்டித்து இந்திய அரசு தீவைத் தாரைவார்த்துக் கொடுத்ததைத் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் தமிழர் அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்கும்.

மீத்தேன் எரிகாற்று திட்டம்

வளம்கொழிக்கும் காவிரியாற்றுப் படுகையான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய பகுதிகளில் அதிகமாக நிலத்தடியில் இருக்கும் எரிகாற்றை எடுக்கும் உரிமையை மத்திய காங்சிரஸ் அரசு கெயில் (GAIL) என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்றுவிட்டது. அதை இந்த மண்ணில் செயல்படுத்த தமிழகத்தின் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்தத் திட்டத்தால் 3.45 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்புப் பாதிக்கும். 1,64,819 ஏக்கர் உழவு நிலம் பாழடைந்து போகும். அப்பகுதியின் நிலம், நீர், காற்று எல்லாமும் பயனற்றுப் போகும். நிலத்தடி நீர் அனைத்தும் உப்பு நீராக மாறும். எந்த வேளாண்மைக்கும் பயனற்ற பூமியாக மாறும்.

சோறுடைத்த சோழ நாடு பிச்சை எடுக்கும் நாடாக மாறும். அத்திட்டத்தை எதிர்த்து மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நம் பெரியத் தகப்பன் நம்மாழ்வார் தலைமையில் நடந்த போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிறகுதான் தெரியாமல் கையெழுத்தைப் போட்டுவிட்டோம் என்று மு.க.ஸ்டாலின் சொன்னதும் நடந்தது.

தீர்வு:

  • மத்திய அரசு கெயில் நிறுவனத்திற்கு அளித்த விற்பனை உரிமையை விலக்கிக் கொள்ள வேண்டும். அந்த நிறுவனத்திற்கு தி.மு.க. ஆட்சியில் வழங்கிய அனுமதியையும் நாம் தமிழர் அரசு திரும்பப் பெற்றுக்கொள்ளும். ஷெல் (SHELL) போன்ற வேறு நிறுவனங்கள் மட்டுமின்றி எந்த பெயரில் வந்தாலும் அதை எதிர்ப்போம். எதிர்காலத்தில் எந்த ஒரு திட்டத்தையும் மாநில அரசின் ஒப்புதலைப் பெறாமல் கொண்டு வரக்கூடாது. மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்ற உறுதியுடன் நாம் தமிழர் அரசு செயல்படும்.

கெயில் எரிகாற்றுத் திட்டம்

3400 கோடிச் செலவில் கேரள மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநில மங்களூருக்கு எரிகாற்றுக் குழாய் மூலம் கொண்டு செல்லும் திட்டத்தால் தமிழகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. கேரள மலையினைக் குடைந்து சென்றால் 380 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளாக முடிந்து போகும். ஆனால் தன் மாநிலத்தின் மலைவளமும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் எனக் கேரளா மறுத்து விட்டது. அதனால் தமிழக விளை நிலத்தின் வழியாகக் குழாய் பதித்து 884 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீடித்துச் செல்கிறார்கள். இதில் 504 கிலோ மீட்டர் தூரம் தமிழகத்தின் சேலம் கோவை, கிருட்டினகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஏழு மாவட்டங்களின் வழியாகச் செல்கிறது. இப்பகுதி உழவர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

நீதிமன்றம் தமிழகப் பகுதிகளில் தடையின்றி குழாய் பதித்துக் கொள்ளலாம் எனக் கெயில் எரிகாற்று நிறுவனத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளது.

தீர்வு:

  • இதனால் தமிழகத்தில் சுமார் 50,000 ஏக்கர் வேளாண்மை நிலம் பாதிக்கப்பட்டிருப்பதை நாம் தமிழர் அரசு ஒருபோதும் அனுமதிக்காது. கேரளாவிலும், ஆந்திராவிலும் இந்தவித எரிகுழாய் வெடித்துப் பல உயிர்களைப் பலியாகியிருக்கிறது. அதனால், மக்களைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்ற தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும். அதனடிப்படையில் இவர்களுடன் போட்டுக்கொண்ட 99 ஆண்டுக்கால ஒப்பந்தத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளும். எரிகாற்று குழாய் நிறுவனத்தை நிலையாகத் தடை செய்வோம்.

நியூட்ரினோ ஆய்வகம்

அணுவைப் பிளந்து அதற்குள்ளாக இருக்கும் 60 வகையான துகள்களை ஆராய்ந்து, அதில் நியூட்ரினோ துகளை ஆய்வு செய்வதற்கான திட்டம் இது. தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் பகுதியில் செயல்படுத்தும் வேலையை தொடங்கியிருக்கிறார்கள். தொன்மை வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்துவது பெருங்கேடாய் முடியும்.

50,000 டன் எடை கொண்ட உலகின் பிரமாண்ட காந்தத்தை நிறுவி இந்த சோதனை செய்வதால் அப்பகுதியின் உயிர்ச்சூழல் உட்பட சுற்றுச்சூழல் அனைத்தும் பாதிக்கப்படும். தொடக்கத்தில் நீலகிரி மாவட்டம் சிங்காராப் பகுதியில் இந்தச் சோதனையை நடத்தத் திட்டமிட்டார்கள். கர்நாடக மாநிலக் கோலார் தங்கவயலில் மூடப்பட்ட ஏதாவது ஒரு சுரங்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற போது, கர்நாடக அரசு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. அதன் பிறகுதான் எதற்கும் எதிர்ப்பைத் தெரிவிக்காதத் திராவிட ஆட்சியாளர்களால், தமிழகத்தின் தேனி மாவட்டத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

  • மலைகளைக் குடைய பல ஆயிரம் கிலோ வெடிமருந்துகளைப் பயன் படுத்துவதாலும், கற்களையும், மண்ணையும் அப்புறப்படுத்துவதாலும் ஆயிரங்கணக்கான வாகனங்கள் அந்தப் பகுதியில் இயங்கும். அது அந்தப் பகுதியின் சுற்றுச் சூழலையே பாதிக்கும். அப்பகுதியில் உள்ள வன உயிரினங்கள் முற்றாகப் பாதிக்கப்படும். இப்படிப் பல காரணங்களையும் முன் வைத்து மக்கள் போராடி வருகிறார்கள்.

தீர்வு:

  • அருகில் இருக்கும் பரம்பிக்குளம் புலிகள் காப்பகம், மூணாறு வனப்பகுதி, வால்பாறை, பொள்ளாச்சி, மேகமலை, குமிழி, கொடைக்காணல், மற்றும் தமிழர் மெய்யியல் அடையாளமாக விளங்கும் பழனி என அனைத்துத் தமிழர் இயற்கை வளங்களும் பாதிக்கும். தொன்மை வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் இயற்கை வளங்கள் அனைத்தும் பாதிக்கும். எனவே நாம் தமிழர் அரசு இத் திட்டத்தை முற்றாக எதிர்க்கும். தொடர்ந்து செயல்பட அனுமதிக்காது.
  • மாநில நலனுக்காகத் தான் மத்திய அரசே ஒழிய மக்களை அழிப்பதற்காக அன்று என்பதை எடுத்துரைத்துத் தடுப்போம்!

காவிரி ஆற்று நீர்ச் சிக்கல்

1807-ஆம் ஆண்டில், ஆங்கிலேயரின் ஆட்சியில், அப்போதைய சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் அரசுக்கும் இடையே போட்டுக்கொண்ட ஒப்பந்தம் இது. சுதந்திர இந்தியாவிலும் சிக்கலாகவே நீடித்துக்கொண்டிருக்கிறது. மத்திய அரசின் ஆற்று ஆணையம், உச்ச நீதிமன்றம் எல்லாத் தீர்ப்பைச் சொல்லியும், நமக்குத் தரவேண்டிய 419 டி.எம்.சி தண்ணீரை முறையாக கொடுக்காமல் மறுத்து வருகிறது

கர்நாடக அரசு

  • காவிரி ஆற்றுநீர் என்பது தமிழகத்தின் உரிமை. தமிழகம் வஞ்சிக்கப்படக் கூடாது என்பதில் நாம் தமிழர் அரசு உறுதியுடன் நிற்கும். அதனால் இந்தச் சிக்கலை நிலையாகத் தீர்த்து வைக்க வேண்டி சிக்கல்களின் தொடக்கத்திற்கே செல்கிறோம்.
  • 1956-ஆம் ஆண்டில் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட போது, காவிரி நீர் உருவாகும் இடமான குடகுமலை தமிழகத்தோடு தான் இருந்தது. அதைக் கர்நாடக மாநிலத்தோடு இணைக்கக்கூடாது என்று அப்போதே தமிழர்கள் பலப் போராட்டங்களை நடத்தினார்கள். ஆனாலும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே 1956இல் நடைபெற்ற மொழிவழி மாநிலம் பிரிப்பு சரியானதன்று. முறையானதுமன்று. பண்டைய தமிழர்களின் பகுதியான பெங்களூரு, குடகுமலை அனைத்தும் தமிழ்நாட்டின் உரிமை, அவற்றை மறுசீரமைப்புச் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்காடுவோம்.
  • மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி அரபிக் கடலில் கலக்கும் நீரைத் தடுத்து அணைகட்டி, அந்த நீரை மேட்டுர் அணைக்குத் திருப்பிவிடப் பாண்டியாறு-பொன்னம்பல ஆறுகளின் குறுக்கே தடுப்பணை உருவாக்கப்படும். கர்நாடக மாநிலம் தண்ணீர் தர மறுக்கும்போது தமிழகத்தின் கனிம வளமான நிலக்கரி, மின்சாரம் அவர்களுக்கு மறுக்கப்படும். நிலக்கரி பொதுச் சொத்து, பகிர்ந்தளிக்க வேண்டும் என்றால் தண்ணீரும் பொதுச் சொத்துதான். அதையும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று முடிவெடுப்போம்.
  • அந்தந்த மாநிலத்தின் வளங்கள் அவர்களுக்கே சொந்தம் என்றால், எம் மாநிலத்தின் வளம் அனைத்தும் எம் மக்களுக்கே சொந்தம்.

முல்லைப் பேரியாற்று அணை

இராமநாதபுர மாவட்டத்தில் பெரும் பஞ்சம் தலைவிரித்தாடியது. அதனையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகட்டி நீர்த் தேக்கி, வேளாண்மைக்கு பயன்படுத்த அன்றைய இராமநாதபுர அரசு முயற்சித்தது. ஆனால் பெரும் நிதி செலவாகும் என திட்டத்தை கைவிட்டார்கள். பிறகு ஆங்கிலேய அரசு அந்த முயற்சியைக் கையில் எடுத்தது. 62 இலட்சம் செலவில் அணை கட்ட முடிவானது. முறைப்படி மதுரை நிர்வாகம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டது.

  • நீர்ப்பிடிப்புப் பகுதியான 8,000 ஏக்கர் நிலத்திற்கு ஆண்டிற்கு 4,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்பதைத் தாண்டி திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு வேறு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை.
  • ஆனால் தண்ணீரை 145 அடிக்கு உயர்த்தினால் அணை உடையும். அதனால் கேரளப் பகுதி பாதிக்கும் என்று சிக்கலை ஏற்படுத்த அது மத்திய அரசு, ஆற்றுநீர் ஆணையம், உச்சநிதிமன்றம் என்றெல்லாம் வழக்காகி, இப்போது பழையபடி 145 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கிக்கொள்ளலாம் என உத்தரவு கிடைத்தும் கேரள அரசு மறுத்து வருகிறது.

தீர்வு:

  • நாம் தமிழர் அரசு முல்லைப் பேரியாற்று ஆற்றுநீர்ச் சிக்கலையே ஏற்கவில்லை. அன்றைய மதுரை நிர்வாகம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டதே தவறு. முல்லைப் பேரியாறு அணை அமைந்திருக்கும் தேவிகுளம் பீர்மேடு ஆகிய பகுதி முழுக்கத் தமிழர்கள் பெரும்பகுதியாக வாழும் பகுதி. அப்பகுதித் தமிழர்களின் போராட்டங்களை மீறி வலுக்கட்டாயமாக, கேரள அரசோடு இணைத்தது தவறு.
  • அடுத்து அந்த அணை இருக்கும் இடம் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குச் சொந்தமான இடமே அன்று. 12-ஆம் நூற்றாண்டு வரை பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் இருந்தப் பகுதி இது. அதன் பிறகு தமிழ் மூவேந்தர்களில் ஒருவரான சேரமன்னனின் பூனியாறு சமஸ்தானத்திற்குச் சொத்மான பகுதியாக இருந்தது. அந்த சமஸ்தானத்திற்கு சொந்தமான பூனியாற்று தம்பிரான் மன்னனுடன்தான், ஆங்கிலேய ஆட்சியின் மதுரை நிர்வாகம் ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். இவற்றைச் சுட்டிக்காட்டி தகுந்த ஆரதாரங்களுடன் சென்று மொழிவாரி மாநிலப் பிரிப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் எனக் கோரி நடவடிக்கையை எடுப்போம். தமிழர்களுக்கான பகுதியை நிலையாக மீட்போம்.

தேவிகுளம் பீர்மேடு ஆகிய பகுதி முழுக்கத் தமிழர்கள் பெரும்பகுதியாக வாழும் பகுதி. தமிழர்களின் போராட்டங்களை மீறி வலுக்கட்டாயமாகக் கேரள அரசோடு இணைத்ததே தவறு!

பாலாற்று நீர்ச் சிக்கல்

கர்நாடக மாநிலக் கோலார் மாவட்ட நந்தி மலையில் உருவாகிறது பாலாறு. இந்த இடம் தமிழர்கள் வசம்தான் இருந்தது. அந்த ஆறு கர்நாடக மாநிலத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும், இறுதியாக தமிழகத்திற்குள் 222 கிலோ மீட்டரும் பயணித்து, வயலார் என்னுமிடத்தில் வங்களா விரிகுடாவில் கலக்கிறது. 1892-வாக்கிலேயே கர்நாடகாவுக்கும், தமிழகத்திற்கும் பாலாற்றுத் தண்ணீர் சிக்கல் எழுந்தது. அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தில் கீழே(பகுதியில்) இருப்பவர்களின் ஒப்புதலைப் பெற்றுதான், மேலே (பகுதியில்) இருப்பவர்கள் அணையைக் கட்ட வேண்டும் என்ற வரையும் கொண்டு வந்திருந்தார்கள்.

  • அதை மீறி ஆந்திர அரசு, குப்பத்திற்கு அருகில் உள்ள கணேசபுரத்தில் பாலாற்றைத் தடுத்து ஒரு அணையைக் கட்டத் திட்டமிட்டு வருகிறது. வழக்கம்போலவே தமிழக அரசும் மக்களும் எதிர்த்து வருகிறார்கள்.
  • வேலூர், ஆம்புர், வாணியம்பாடி, பள்ளிகொண்டா, ஆற்காடு, வாலாஜாபேட்டை காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகள் பெருமளவில் பாதிப்பைச் சந்திக்கும். மழைக் காலங்களில் மட்டுமே உபரிநீரைச் சுமந்துவரும் பாலாறு, மற்ற காலங்களில் தண்ணீரைக் கொண்டு வராது. ஆந்திரா அரசு குறுக்கே அணை கட்டிக்கொண்டால் அந்த மழைக்கால நீரும் தடைபட்டுப் போகும்.

தீர்வு:

பாலாறு தமிழகத்தின் சொத்து, ஆறு இயற்கை மக்களுக்கு அளித்த கொடை. ஓர் ஆற்றின் வெள்ளப் பெருக்கால் எந்த நிலபரப்பு பேரிழப்புக்குள்ளாகிறதோ அந்நிலப்பரப்பிற்கே ஆற்று நீரின் பயன்பாட்டிற்கு முன்னுரிமை; இருமடங்கு நீர் உரிமையும் கூட என்ற பொது விதியின் அடிப்படையில் பாலாற்றுத் தண்ணீர் தமிழகத்திற்கே சொந்தமாகும். எனவே காவிரி ஆற்றுநீர்ச் சிக்கலில் என்ன தீர்வை முன் வைத்தோமோ, அதே தீர்வைத்தான் பாலாற்று நீர்ச் சிக்கலிலும் நாம் தமிழர் அரசு முன்னெடுக்கிறது. ஆற்று நீரைப் பொதுவாகக் கருதி நடுவண் அரசு பகிர்ந்தளிக்க வேண்டும். இல்லையேல் மாநில அரசின் மறுசீரமைப்புக் கோரிக்கையினை நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்துவோம்.

கல்பாக்கம் – கூடங்குளம்

1986- ஆம் ஆண்டு இரஷ்ய நாட்டின் செர்னோபில்லில் அணுஉலை வெடிக்க உலகமே அதிர்ந்து பார்த்தது. அதன் பிறகு 1988ஆ-ம் ஆண்டு இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தியும், இரஷ்யப் அதிபர் மிகைல் கோர்பசேவும் போட்டுக் கொண்டது தான் இந்தக் கூடங்குளம் அணுஉலை ஒப்பந்தம். அமெரிக்க எதிர்ப்பால் பத்தாண்டுகள் கிடப்பிலேயே இருந்தது. பிறகு 1998-ஆம் ஆண்டு மறு ஆய்வு செய்யப்பட்டது. முதலில் இராஜஸ்தான் மாநிலம் தேர்வானது. அங்கிருந்த பழங்குடியின மக்கள் கடுமையாகப் போராட்டம் நடத்த, கேரள மாநிலத்திற்கு தாவியது. ‘எங்களுக்கு மின்சாரத் தேவையைவிட மக்களின் உயிர்தான் முக்கியம்’ என அந்த மாநில முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்க, பிறகு தமிழ் நாட்டிற்குள் திராவிடக் கட்சி ஆட்சியாளர்களால் எதிர்ப்பின்றி நுழைந்து கொண்டது.

  • பலப் போராட்டங்கள், விதிமுறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற இத் திட்டத்தால் நீர், நிலம், காற்று மாசுபடும். உயிர்க் கொல்லி நோய்கள் பரவும். கடல்வாழ் உயிரினங்கள், அவற்றின் இயற்கைச் சுழற்சி முறை என எல்லாமும் பாதிக்கப்படும். 2011இ-ல் நடந்த மார்ச் 16 அன்று, ஜப்பானின் புகுசிமாவில் நடந்த அணுஉலை வெடிப்பு நம் கண்முன்னே நடந்த பேரழிவாகப் பார்க்க முடிந்தது. சுருக்கமாக மனிதகுலத்திற்குப் பேராபத்தாக முடியும். சமீபத்தில் திமிங்கிலங்கள் கூட்டம் கூட்டமாக இறந்து கரை ஒதுங்கியதும் இந்த அணுஉலைப் பாதிப்பில்தான் என்று சமூக ஆய்வாளர்களும் எச்சரித்தார்கள்.

தீர்வு:

  • உலகத்தில் பாதுகாப்பான அணு என்ற ஒன்றே கிடையாது. அணு குண்டு மேலே அமர்ந்திருப்பதும், அணு உலை அருகே குடியிருப்பதும் ஒன்றுதான்.
  • மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது அணுஉலையால் அன்று. அணுஉலை கண்டுபிடிக்கப்பட்டது மின்சாரத்திற்காக அன்று.
  • தமிழ்நாட்டில் மட்டும் அணுஉலை வேண்டாம் என்று கூறவில்லை. உலகத்தில் எந்த நாட்டிலும் வேண்டாம் என்பதுதான் நமது நிலைப்பாடு. நாம் தமிழர் அரசு அணுஉலைக் கொள்கைக்கு எதிரானது.
  • மாற்றுவழி மின் உற்பத்தியைப் பெருக்கி அணு உலையை நிலையாக மூட நடவடிக்கையை எடுப்போம்.

கணினிக் கழிவுகள்

கேரள மாநிலத்தில் இருந்து மாட்டிறைச்சிக் கழிவு, கோழியிறைச்சிக் கழிவுகள் மற்றும் மருத்துவப் பொருள் கழிவுகளைக் கொண்டு வந்து தமிழகத்தின்  எல்லையில் கொட்டிவிட்டு செல்வதை கடுமையான நடவடிக்கையின் மூலம் தடுக்கப்படும். இதற்கென்று கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படும். இறைச்சிக் கழிவுகளைக் கொண்டு வரும் வாகனங்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்வோம். அந்த நிறுவனங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

  • அதே போன்று பல்வேறு வெளிநாடுகளில் இருந்து மறுசுழற்சி செய்ய முடியாதக் \கணினிக் கழிவுகளைக் கப்பல்கள் மூலம் கொண்டுவந்து தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத் துறைமுகப் பகுதிகளில் இறக்கி வைத்துவிட்டுச் செல்கிறார்கள். இதனால் அதிகமான கணினிக் கழிவுகள் இங்கே தேங்கிக் கிடக்கிறது. மண்ணுக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். இதை தடுத்து நிறுத்துவதுடன், அப்படியான கழிவுகளைக் கொண்டு வரும் கப்பல்கள் மீதும், நிறுவனங்கள் மீதும் சட்டப்படிக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

போராடித் தீர்ப்போம்

ஆந்திர மாநிலச் சிறைச்சாலைகளில் 3,000 மேற்றபட்ட தமிழர்கள் வாடி வருகிறார்கள். அவர்கள் அனைவர் மீது செம்மரக்கட்டைகள் வெட்டிக் கடத்தினார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு பொய்வழக்குகள் போடப்பட்டிருக்கின்றது. நாம் தமிழர் அரசு அவர்கள் அனைவரையும் சட்டப்போராட்டத்தின் மூலம் மீட்கும். அவர்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்க கடன் வழங்கப்படும். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.

தேயிலை தோட்ட தொழிலாளர் நலன்

தமிழ்நாடு முழுதும் உள்ள தேயிலைத்தோட்ட தொழிளார்களுக்கு சொந்தக் குடியிருப்புகள் கட்டித்தரப்படும். உயர்க் கல்வி பயின்ற தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நிர்வாகப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும். தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிகளில் மருத்துவம், தூயக் குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துக் கொடுக்கப்படும். தொழிலாளர் பிள்ளைகளின் கல்விக்காகத் தரமான பள்ளிகள் அப்பகுதியில் ஏற்படுத்தப்படும்.

  • கூட்டுறவு ஏல மையங்களில் ’கூட்டமைப்பு’ (சிண்டிகேட்) முறை ஒழிக்கப்படும். இதனால் அரசுக்கும் தொழிலாளர்களுக்கும் வருவாய் கூடும். தேயிலைத்தூள் விற்பனையில் கலப்படங்கள் முழுதுமாக ஒழிக்கப்பட்டு, தரமான உற்பத்தி முறை கொண்டு வரப்படும்.

ஓவேலிச் சிக்கல் தீர்க்கப்படும்

நீலகிரி மாவட்டம் ஓவேலி மலைப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் எது வனப்பகுதி என்பது வரையறுக்கப்படும். அங்கு அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இந்த பகுதியில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட மாட்டார்கள். இவர்களுக்கான நிலம் ஒதுக்கப்படும். அந்தப் பகுதி வனம் பாதுகாக்கப்பட்டு வன விலங்குகளுக்கான உயிர்வாழ் சூழலை உருவாக்குவதன் மூலம் மனித உயிரிழப்புகள் தடுக்கப்படும்.

  • நலிந்துவரும் தனியார் தேயிலைத் தோட்டங்களை அரசு தோட்டங்களாக மாற்றப்படும், அதன்மூலம் மலைமக்களின் வேலைவாய்ப்புக்கு உறுதி அளிப்பதோடு, அப்பகுதியில் இருந்து வரும் பெரும் முதலாளிகளின் கூட்டுக்கொள்ளை முற்றிலும் ஒழிக்கப்படும்.

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்; இனநலம்
எல்லாப் புகழும் தரும் – தமிழ்மறை (457)

முந்தைய செய்திதமிழர் இன வரலாறு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
அடுத்த செய்திபொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட முயற்சி செய்வது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! – சீமான்