அயலகத் தமிழர்களுக்கான அமைச்சகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

169

அயலகத் தமிழர்களுக்கான அமைச்சகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முதுமொழிக்கேற்ப உலகின் எல்லா நாடுகளுக்கும் சென்று பொருளீட்டி வருபவர்கள் தமிழர்கள். அவகளின் மீதான பெரும் அக்கறையோடு நாம் தமிழர் அரசு பல திட்டங்களை முன் வைக்கிறது

அயலகத் தமிழர் நலம்

பெரும்பாலான தமிழர்கள் அரபுமற்றும் கிழக்கு ஆசியநாடுகளில் தினக்கூலிகளாகக் கடுமையான பணிகளைச் செய்து வருகின்றனர். அவர்களின் சட்ட உரிமை மறுக்கப்படுவது மட்டுமல்லாமல், அடிப்படை மனித உரிமைகள் கூட வெளிநாட்டு அரசுகளால் மறுக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசும் வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காமல் வேடிக்கை பார்த்தபடி இருக்கிறது.

  • 64-வது தேசிய மாதிரிப் புள்ளி விவரத்தின்படி 2009-லிருந்து 2015 வரை ஏறத்தாழ 61843 கோடி ரூபாய் இந்திய அரசுக்குத் தமிழகத் தொழிலாளர்கள் வருமானத்தை ஈட்டிக் கொடுத்துள்ளனர். ஆனால் அந்தத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதில் இந்திய, தமிழக அரசுகள் எந்த முயற்சியையும் எடுப்பதில்லை.
  • நாம் தமிழர் ஆட்சியில் 1983 குடிபெயர்வுச் சட்டம் (விதிகள் வரையறைகள்) மத்தியச் சட்டத்தை மாற்றி அமைக்க ஆவன செய்வதுடன் தமிழர் நலம் சார்ந்து வெளிநாடு வாழ் தமிழர்களுக்கெனத் தனிச்சட்டம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தனி அமைச்சகம்

MOTA (Ministry of Overseas Tamil Affairs) என்ற பெயரில் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு என நாம் தமிழர் அரசு தனி அமைச்சகத்தை ஏற்படுத்தும்.

  • தமிழ்நாடு குடிப்பெயர்வுக் கணக்கெடுப்பு 2013-இன் படி பெரும்பாலும் கூலித் தொழிலாளியாக உள்ள இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் சட்ட உதவி மையங்கள் ஏற்படுத்தப்படும்.

கணக்கெடுப்பு எடுக்கப்படும்

தமிழகத்திற்குப் பல ஆயிரம் கோடிகளை வருவாயாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் வெளிநாடு வாழ் தமிழர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் எதையும் இதுவரையான அரசுகள் வைத்துக் கொள்ளாமல் இருப்பது வேதனையான ஒன்று. நாம் தமிழர் அரசு மாவட்டம் தோறும், மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பில் தனிப் பிரிவை ஏற்படுத்தும். இந்தத் தனிப்பிரிபு அந்த மாவட்டத்தில் இருந்து வெளிநாடு சென்று வேலைபார்ப்போரின் விவரங்களைத் திரட்டி, அவர்களின் தொடர்பு எண், வேலை செய்யும் வெளிநாடு, அவர்களுக்குள்ள சிக்கல் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்து பராமரித்து வைத்திருக்க வேண்டும்.

  • மாதம் ஒரு முறை அவர்களை மாவட்ட நிர்வாகம் தொடர்பு கொண்டு அவர்களின் நிலையை விசாரித்துப் பதிவு செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் திரட்டப்படும் தகவல்களை மாநிலத் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மாநிலத் தலைமை, மத்திய அரசின் வெளியுறவுத்துறையைத் தொடர்பு கொண்டு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும்.

நெருக்கடிக்கால அழைப்பு நடுவம்

வெளிநாடு வாழ் தமிழர்களின் வருவாயை ஈட்டிக்கொள்ளும் அரசு அவர்களுக்கான அவசரகால உதவிகள் பற்றி அக்கறை கொள்வதில்லை. நமது அரசு அதற்கென்று தனிப் பிரிவை உருவாக்கும்.

24 மணி நேரமும் இயங்கும் அந்த அவசர மையம், உலகின் எந்த மூலையில் இருந்தும் தொடர்பு கொள்ளும் தமிழர்களின் அவசரக் குரலுக்கு வேண்டிய நடவடிக்கையை உடனே எடுக்கும். மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று துரித நடவடிக்கையை எடுக்கச் செய்யும்.

தனி வாரியம்

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனைக் காக்கவென்று தனி வாரியம் அமைக்கப்படும். அதில் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்கள் உறுப்பினராகப் பதிவு செய்யப்படுவர். அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்படும். வாரியம் இவர்களுக்குத் தொழில் தொடங்க, வீடுகட்ட வட்டியில்லாக் கடன் வழங்கும். தவிர, திருமணம், மருத்துவ உதவி போன்ற உதவிகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கும்.

தொழில் முனைவோர் அமைப்பு

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து, தமிழகத்தில் ஒரு தொழிலைத் தொடங்கலாம். கூட்டுப்பண்ணை முறையில், எந்த மாவட்டத்தில் என்ன தொழில் சாத்தியமோ அந்தத் தொழிலில்பல தமிழர்கள் கூட்டாகச் சேர்ந்து முதலீடு செய்யலாம். அதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தொழில் வளமும் பெருகும். அவர்களின் சிறு முதலீடும் வளர்ந்தபடி இருக்கும்.

முறையற்ற முகமைகளுக்குத் தடை (Private Agency)

தமிழ்நாட்டில் இயங்குகிற முறையற்ற ஏஜென்சிகளால் தான் பெரும்பான்மையான இளைஞர்கள் ஏமாற்றப் படுகிறார்கள். பல இலட்சங்களை இழந்து, வெளிநாட்டிலும் சரியான வேலையின்றித் தவித்து வருகிறார்கள். இப்படியான மோசடிகள் அனைத்தும் தடுக்கப்படும். அதனால் இதற்கென்று அரசே முகமையை உருவாக்கும். எந்த நாட்டில் என்ன வேலைவாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்து முறையான கட்டணத்தோடு ஆட்களை அனுப்பி வைக்கும். இதில் முறையாகப் பதிவு செய்யப்பட்ட முகமையாளர்களும் இணைந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும்.

  • இதை மீறி இளைஞர்களை ஏமாற்றி வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கும் முகமையாளர்கள் மனிதக் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப் படுவார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

துணைத்தூதரகம்

இராமநாதபுரம் மாவட்டத்தைத் தலைமையாகக் கொண்டு அரேபிய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் சிறப்புத் துணைத் தூதரகத்தை மத்திய அரசு உதவியோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  • தமிழர்கள் பெரும்பாலும் வாழுகிற வெளிநாடுகளில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் குடிப்பெயர்வு குறித்த சந்தேகங்களைச் சட்டத் திட்டங்களைத் தெரிந்து கொள்வதற்கென்றும், புகார் மற்றும் உதவிக்கென்றும் தனிஅமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும்.

வைப்பகம்

வெளிநாடுகளில் வாழுகின்ற தொழிலாளர்கள் தங்களின் ஊதியத்தைத் தனியார் ஏஜென்சி மூலமாக அனுப்பி ஏமாறாமல் இருப்பதற்குச் சட்டத்திற்குட்பட்டு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கெனத் தனிவைப்பகம் ஏற்படுத்தப்படும். அந்த வைப்பகம் பணப் பரிமாற்றத்தை மட்டும் செய்யாமல், அவர்களுக்குக் கடன் உதவி, சேமிப்பு எனப் பிற வைப்பகங்கள் செய்கின்ற சேவைகளையும் செய்து கொடுக்கும்.

வாக்குரிமை

இந்திய உச்ச நீதிமன்றம் கூறியதுபோல், வெளிநாடுகளில் வாழுகிற தமிழர்களுக்கும் வாக்களிக்ககூடிய உரிமையும் வசதியும் ஏற்படுத்தித்தர நாம் தமிழர் அரசு மத்திய அரசுக்குத் தொடர் அழுத்தம் கொடுத்து, வாக்குரிமையைப் பெற்றுத்தரும். அப்போதுதான் வெளிநாடுகளில் இருக்கும் நம் உறவுகளைப் பற்றி மத்திய அரசும் அக்கறை எடுத்துக்கொள்ளும்..

வெளிநாட்டில் வேலை செய்யும் மீனவர் நலன்

பன்னாட்டுக் கடற்கரையில் ‘ஒப்பந்த அடிப்படையில்’ மீன்பிடிக்கச் செல்லும் மீனவத் தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் முறையாகப் பதிவு செய்யப்படும். எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நாட்டில் வேலை செய்கிறார்கள் அவர்களுக்கான சிக்கல் ஏதும் உள்ளதா என அனைத்தும் கண்காணிப்பிலேயே வைக்கப்படும். அவர்களுக்கான உரிமைகள் அங்கே மறுக்கப்பட்டால் உடனடியாகப் பன்னாட்டு மனிதஉரிமை அமைப்புகளோடு தொடர்புகொண்டு தீர்த்து வைக்கப்படும்.

இதற்கென்று தனியாக ஒரு சட்ட உதவிமையம் அமைக்கப்படும். முறையற்ற காவல் முறையற்ற நிறுவனங்களால் கூலி வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், எந்தவித அடிப்படை உரிமையும் இல்லாமல், அந்நாடுகளின் சிறைகளிலும், அடைப்புக் காவலிலும் தடுத்து வைக்கப் பட்டிருக்கின்றனர். அவர்கள் பற்றிய தகவல்களை முழுதுமாகப் பெற்றுப் பன்னாட்டு நீதிமன்றம் மூலமாக அவர்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் விடுதலைக்காகத் தனிச்சட்டக் குழுமம் ஒன்றும் ஏற்படுத்தப்படும்.

  • வெளிநாடுகளில் சட்டவிரோதமாக இயங்கி வருகின்ற (Man Power Agency) முகமைகள் (ஏஜென்ஸிகள்) கணக்கெடுக்கப்பட்டு உரிய அரசுகளிடம் தகவலைச் சொல்லி மேற்கண்ட முகமைகளைத் தடை செய்வதற்குச் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவது தடுக்கப்படும்.

வெளி மாநிலத் தமிழர் நலம்

வெளிநாடுகளைத் தவிர்த்து இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழுகிற தமிழர் நலம் காப்பதற்குத் தனி வாரியம் ஏற்படுத்தப்படும். அந்தந்த மாநிலங்களில் தமிழ் வழிக் கல்வி படிப்பதற்கும், தொழில் நடத்தவும் உதவிகளை வழங்கும். தவிர சட்டஉதவிகள் வேண்டும் என்றாலும் வழங்கப்படும். அவர்களின் கலை பண்பாடு,கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்து வகை உதவிகளையும் நாம் தமிழர் அரசு செய்யும்.

வெளி மாநிலத்தவர் குடிபெயர்வு

பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை செய்வதற்காக வேண்டி, பிற மாநிலங்களில் இருந்து பல்லாயிரம் இளைஞர்கள் தமிழகம் வந்திருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய சரியான பதிவுகள் ஏதும் இல்லை. குற்றச் செயல்களில் ஈடுபடும் சில வெளி மாநிலத்தவரால் மற்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே வெளி மாநிலத்தவர் பற்றிய முறையான கணக்கெடுப்பு நடத்தப்படும்.

முறையான பதிவு மேற்கொள்ளப்படும். 15 ஆண்டுகள் தமிழகத்தில் வாழும் பிற மாநிலத்தவர்களுக்கு மட்டுமே முறையான குடும்ப அட்டையும், வாக்காளர் உரிமையும் அளிக்கப்படும். அதன் பிறகுதான் அவர்கள் தமிழகத்திற்குள் சொத்துவாங்கும் உரிமை பெற்றவர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.