திருபுவனம் இராமலிங்கம் கொலையின் உண்மைக்குற்றவாளிகளைக் கண்டறிந்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

116

திருபுவனம் இராமலிங்கம் கொலையின் உண்மைக்குற்றவாளிகளைக் கண்டறிந்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டம், திருப்புவனத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர் இராமலிங்கம் அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது குடும்பத் துயரில் நாம் தமிழர் கட்சி முழுமையாகப் பங்கேற்கிறது.

வன்முறை என்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. ஒரு உயிரைப் பறித்து அதில் சுகம் காண்பது மிகக் கொடூரமான மனநிலையாகும். எதன்பொருட்டும் இதுபோன்ற படுகொலைகளை நியாயப்படுத்தவோ, சகித்துக் கொள்ளவோ முடியாது. இக்கொலையினை எவர் செய்திருந்தாலும் அவர்களைத் தயவு தாட்சணையின்றித் தண்டிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதேநேரத்தில், இவ்விவகாரத்தைத் தங்களது அரசியல் இலாப நோக்கிற்காகக் கையிலெடுத்து ஆதாயம் பெற மதப்பூசல்களை உருவாக்க முயலும் மத அடிப்படைவாதிகளிடம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இக்கொலை வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு முன்னரே அதன் போக்கைத் தீர்மானிப்பது என்பது உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கவே உதவும் என்ற அபாயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, இக்கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனவும், அரசியல் தலையீடற்ற ஓர் நேர்மையான விசாரணையை நடத்தி அவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் எனவும், அப்பகுதியில் மதரீதியிலான பதட்டங்களை உருவாக்குகிற எச்செயலையும் அனுமதிக்கக்கூடாது எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: நாம் தமிழர் ஆஸ்திரேலியா உறவுகளுடன் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்வு
அடுத்த செய்திஅறிவிப்பு: வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – திருவண்ணாமலை