எழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு அரசு மரியாதை! – புதுச்சேரி அரசுக்கு சீமான் பாராட்டு

44

அறிக்கை: எழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு அரசு மரியாதை! – புதுச்சேரி அரசுக்கு சீமான் பாராட்டு | நாம் தமிழர் கட்சி

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், தமிழ் இலக்கிய ஆளுமையுமான மதிப்பிற்குரிய ஐயா பிரபஞ்சன் அவர்களின் உடலுக்கு புதுச்சேரி அரசாங்கம் முழு அரசு மரியாதை செலுத்தியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை நாம் தமிழர் கட்சி பெரிதும் பாராட்டுகிறது. எழுத்துலக மேதைகளைப் பாராட்டுகிற இந்த மரபு தொடரவேண்டும். பிரதமர், முதலமைச்சர், அரசு அதிகாரங்களில் இருப்பவர்கள், அரசு அதிகாரிகள், அரசப் பதவியில் இருந்தவர்களுக்குத்தான் அரசு மரியாதை என்கிற மரபை மீறி இலக்கியம் போன்ற துறைகளில் புகழ்பெற்றவர்களுக்கும் மதிப்பளிக்கவேண்டும் என்கிற முறையைப் புதுச்சேரி அரசு புகுத்தியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. புதுச்சேரி அரசு மெச்சத்தக்க நடைமுறையை தொடங்கியிருக்கிறது.இம்மரபு இனிவரும் காலங்களில் எல்லா நிலங்களிலும் தொடரவேண்டும் என்பது எங்கள் விருப்பம். இதுபோன்ற மரபுகளை தமிழ்நாடு அரசும் பின்பற்றவேண்டும். எழுத்தாளர் ஜெயகாந்தன், முனைவர் க.ப.அறவாணன் போன்ற மேதைகளை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளவே இல்லை என்பது பெருந்துயரம். பெரும்பாவலன் பாரதியை கண்டுக்கொள்ளாத தமிழ்ச்சமூகம் என்ற அவப்பெயரை இனிவரும் காலங்களில் எல்லா எழுத்தாளுமைகளையும் இருக்கும் பொழுதும் மறைந்த பின்னும் கொண்டாடி மாற்றிக்கொள்ளவேண்டும்.
 
— சீமான்
முந்தைய செய்திஐயா பெரியார் 45ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் – செய்தியாளர் சந்திப்பு
அடுத்த செய்திவில் வித்தைப் போட்டியில் உலகச் சாதனைப் படைத்த 3 வயது சிறுமி சஞ்சனா – சீமானுடன் சந்திப்பு