மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் தமிழ் எழுத்துலகில் தனித்த ஒரு இயக்கம்! ‌- சீமான் புகழாரம்

103
மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் தமிழ் எழுத்துலகில் தனித்த ஒரு இயக்கம்! ‌- சீமான் புகழாரம்.
——————————————————
புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், தமிழ் இலக்கிய ஆளுமையுமான மதிப்பிற்குரிய ஐயா பிரபஞ்சன் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். அவரது இழப்பு தமிழ் எழுத்துலகிற்கும் , தமிழ் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும்.
 
தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு முறைமையை உருவாக்கி புகழ்வாய்ந்த எழுத்தாளராக வலம் வந்தவர் ஐயா பிரபஞ்சன் அவர்கள். புதுச்சேரியை பிறப்பிடமாக கொண்ட அவர் தஞ்சை கரந்தை கல்லூரியில் தமிழ் வித்துவான் பட்டம் பெற்றவர். புதுச்சேரியின் வரலாற்றினை ஆங்கிலேய அதிகாரிகளிடம் அதிகாரியாக பணியாற்றிய ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பினை தழுவி அவர் எழுதிய வானம் வசப்படும் புதினம் உலகப்புகழ் வாய்ந்தது. இந்நூலுக்காக அவர் 1995 ஆம் வருடம் சாகித்திய அகாதமி விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது நூல்களுக்காக தமிழக அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற ஐயா பிரபஞ்சன் அவர்கள் தமிழ் எழுத்துலகில் அசைக்க முடியாத ஆளுமையாக திகழ்ந்தார்.
 
அவர் எழுதிய மானுடம் வெல்லும், மகாநதி சந்தியா, ஆண்களும் பெண்களும் போன்ற பல புதினங்களும், நேற்றைய மனிதர்கள், விட்டு விடுதலையாகி போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் தமிழ் எழுத்துலகிற்கு கிடைத்த மாபெரும் பரிசுகளாகவே நான் கருதுகிறேன். அவரது பல நூல்கள் ஆங்கிலம் ஜெர்மனி ஹிந்தி பிரெஞ்சு போன்ற பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகப் புகழ் அடைந்தன.
 
மதிப்பிற்குரிய ஐயா பிரபஞ்சன் அவர்கள் தன் வாழ்நாளில் தனித்த ஒரு இலக்கிய அடையாளமாக , ஒரு எழுத்துலக இயக்கமாக திகழ்ந்தார். அவரது மறைவில் துயறுற்று இருக்கின்ற அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் எழுத்து உலகிற்கும் எனது ஆழ்ந்த அஞ்சலியையும் என் மனமார்ந்த ஆறுதலையும் தெரிவிக்கிறேன்.
 
மறைந்த தமிழ் எழுத்துலக மாமேதை பிரபஞ்சன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி