தமிழகத்தின் காவிரிப்படுகை முழுவதும் கஜா புயலினால் பேரழிவைச் சந்தித்துள்ள கொடுஞ்சூழலில் அதற்குக் கரம் நீட்டாத மத்திய அரசு, காவிரியாற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசிற்கு அனுமதி அளிப்பதா? – சீமான் கண்டனம்
கர்நாடகாவில் காவிரியாற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் அணைகட்ட முனையும் கர்நாடக அரசின் செயல்திட்ட வரைவுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கும் மத்திய அரசின் செயலானது பெரும் அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் அளிக்கிறது. தமிழர்களின் உரிமையினை மறுத்து உணர்வினை உரசிப் பார்க்கும் பாஜக அரசின் இத்தொடர் தமிழர் விரோதப் போக்குகள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது.
கர்நாடகாவில் அமைந்துள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலுக்கு அருகாமையில் மேகதாதுவில் இரு தடுப்பணைகள் கட்டி, நீர்மின் நிலையம் தொடங்க ரூ. 5912 கோடி மதிப்பீட்டில் செயல்திட்டத்தினை வகுத்து நிறைவேற்றுவதற்குரிய அரசியல் காய்நகர்த்தல்களைக் கர்நாடக அரசு செய்து வருவதை அறிந்து அதனை நாம் தொடர்ந்து கண்டித்து வந்த நிலையில், தற்போது அத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்குகிற காவிரிப்படுகை முழுவதும் புயல் பாதிப்பினுள் சிக்குண்டு விவசாயிகளும், பொது மக்களும் பாரிய இழப்புகளைச் சந்தித்து துயரத்தின் நிழலில் நிற்கிற கொடுஞ்சூழலில் அவர்களது அவலத்தைப் போக்கக் கரம் நீட்டாத மத்திய அரசு, அவர்களின் வாழ்வாதார உரிமையான காவிரி நதிநீர் உரிமையைக் காவு கொடுக்கும் வகையில் மேகதாதுவில் அணைகட்ட அனுமதி வழங்கியிருப்பது வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சும் கொடுஞ்செயல். தமிழகத்தின் ஒப்புதல் அல்லாது கர்நாடகா அரசு அணைகட்டக் கூடாது என திட்டவட்டமாக காவிரி நடுவர் மன்ற விதிகள் தெளிவுப்படுத்தி இருக்கிறபோதும் அது எதனையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாது, தான்தோன்றித்தனமாக கர்நாடகா மாநிலத்திற்குச் சார்பாக முடிவெடுத்துள்ள மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்கானது சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் பெருந்துரோகமாகும்.
காவிரி நதிநீர் சிக்கலில் தொடக்கம் முதலே விதிகளை மீறிப் பல்வேறு அணைகளைக் கட்டியும், நிர்ணயிக்கப்பட்டதைத் தாண்டிப் பாசனப் பரப்பைப் பலதருணங்களில் விரிவுப்படுத்தியும் அராஜகப் போக்கைக் கையாண்டு வந்தது கர்நாடக அரசு. அதுமட்டுமல்லாது, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஒரு ஆண்டுகூட செயல்படுத்தாது இருந்ததோடு, உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் பொருட்படுத்தாது கடத்தி விட்டிருக்கிறது என்பதன் மூலம் சனநாயக நெறிமுறைகளையும், சட்டதிட்டங்களையும், துளியும் மதியாது அத்துமீறி, பெரும் அநீதியைத் தமிழர்களுக்கு இழைத்திருக்கிறது என்பதை நாடறியும். அச்செயலின் விளைவாகத்தான், காவிரி நதிநீர் உரிமை என்பது தமிழர்களுக்கு எட்டாக்கனியாக மாறிப்போனது.
மத்திய அரசின் பாரா முகத்தாலும் கர்நாடக அரசின் தொடர் தமிழர் விரோதப் போக்காலும், முப்போகம் விளைவித்த காவிரிப் படுகையின் வேளாண் பெருங்குடி மக்கள் இன்றைக்கு ஒருபோக விளைச்சலுக்கும் வழியின்றி வேளாண்மையைக் கைவிடுவதும், தற்கொலை செய்து கொண்டு மாண்டுபோவதுமானப் பெருந்துயரம் இம்மண்ணில் பன்னெடுங்காலமாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேகதாதுவின் குறுக்கே கர்நாடக அரசு அணைகட்டிவிட்டால் சொட்டு காவிரி நீரும் இனி தமிழகத்திற்கு இல்லை எனும் பேராபத்து நிலை உருவாகும். அதன்மூலம், காவிரிப்படுகையின் வேளாண் பெருங்குடிகளை வேளாண்மையைவிட்டு முழுமையாக வெளியேற்றி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற எரிகாற்று வளங்களை நீரியல் விரிசல் முறையில் மண்ணைப் பிளந்து எடுத்துப் பொருளீட்டலாம் எனும் பெரும் வணிகசதி இதனுள் ஒளிந்திருக்கிறது. ஆகவேதான், தமிழகத்திற்குரியக் காவிரி நதிநீரை மத்திய, மாநில அரசுகள் நீண்ட நெடிய காலமாகத் தர மறுத்து வந்திருக்கின்றன என்பது மிகத் தெளிவாகப் புலனாகிறது. தனிப்பெரு முதலாளிகளின் தேவைக்காக மண்ணை நாசப்படுத்தி அழித்தொழிக்க முனையும் இக்கொடுங்கோல் திட்டங்களை மானத்தமிழர்கள் இனியும் அனுமதிக்க மாட்டோம் என ஆளும் வர்க்கத்துக்கு உரைக்கிறோம்.
ஆகவே, தமிழர்களின் உணர்வினை மதித்து காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அளித்திருக்கும் அனுமதியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும், அதற்கு மத்திய அரசிற்கு உரிய அரசியல் அழுத்தங்களைக் கொடுத்தும், சட்டப்பூர்வமாக உச்ச நீதிமன்றத்தை நாடியும் கர்நாடக அரசின் செயலைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி