பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி சமய ஆன்மீக உலகிலும் தமிழ்க் கவிதை உலகிலும் பெரும் புரட்சி செய்தவர், வடலூர் திருவருட் பிரகாச வள்ளலார் எனும் இராமலிங்க அடிகளார்.
அன்றாட வாழ்வில் அவதிப்பட்டு நிற்கும் மக்களின் துன்பங்களைக் கண்டு மனம் வருந்தியவர்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினார்.
சமூகத்தில் மலிந்து போயிருந்த கண்மூடி பழக்கங்கள் மண்மூடிப் போகவேண்டும் என்று கடுமையாகச் சாடினார்.
நலிதரு சிறுதெய்வங்களுக்கு முன் வாயில்லாத ஜீவராசிகள் ஆடு, கோழி முதலியன பலியிடப்படுவதைக் கண்டு உள்ளம் கொதித்தார்,
வறுமையால் வாடும் மக்களின் பசிப்பிணியினைத் தீர்ப்பதற்கு வடலூரில் சத்திய தர்மசாலையினை அமைத்து, பசி என்று வந்த ஏழை எளியவருக்குப் புசி என்று அன்னமிட்டார்
சாதிய சண்டையிலும் கோத்திரக் குப்பையிலும் சமயச் சழக்கிலும் ஆழ்ந்துகிடந்த மக்களைக் கரையேற்றிவிடச் சத்திய சன்மார்க்கம் கண்டார்.
வாழவேண்டிய நெறியில் வகையுடன் வாழ்ந்தால், மரணமிலாப் பெருவாழ்வு கிட்டும் என உறுதியாக அவர் நம்பினார்.
உயிர் இரக்கம் என்பதே அவர் உயிர் கொள்கையாக இருந்தது!
வள்ளலார் திருநாள் இன்று (05-10-2018)
நமது போற்றுதற்கும் வணக்கத்திற்கும் உரிய வள்ளலார் பெருந்தகைக்கு நம் புகழ்வணக்கத்தைச் செலுத்துவோம்!
அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை!
வள்ளலார் பெரும்புகழ் போற்றி! போற்றி!
—
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி