கள்ளிக்குப்பம் பகுதியில் பொதுமக்களின் வீடுகளை இடிக்கிற உத்தரவினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

85

அறிக்கை: சென்னை, அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியில் பொதுமக்களின் வீடுகளை இடிக்கிற உத்தரவினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியில் குடியிருப்புகளை அகற்றும் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (12-10-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை, அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியிலுள்ள முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர், கங்கை நகர், எஸ்.எஸ்.நகர், அந்தோணி நகர் உள்ளிட்டப் பகுதியிலுள்ள 1,000 குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு நிலைபெற்று வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அங்கிருக்கும் 5,89 வீடுகள் ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி அதனை இடிப்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்கிற பெயரில் பொத்தாம் பொதுவாக இவ்விவகாரத்தை அணுகினால் இது ஏரியைக் காப்பதற்கான மிகச்சிறந்த நடவடிக்கை போலத் தோன்றலாம். ஆனால், இதனுள்ளிருக்கும் நுண்ணரசியல் மிக மிக ஆபத்தானது. ஆக்கிரமிப்புகள் என்கிறபோது வெறும் சேரிகளையும், குப்பங்களை நினைவுக்குக் கொண்டு வருகிற பெரும் ஆதிக்கத்தின் வெளிப்பாடாகும். ஆளும் வர்க்கத்தினருக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றமென்றால் குடிசைகளை இடிப்பது மட்டும்தானா? வணிக வளாகங்களும், கல்லூரி நிலையங்களும் ஏன் அதில் வருவதில்லை? என்கிறக் கேள்வியை எவரும் கேட்கத் துணிவதில்லை. நீதிமன்ற ஆணையினால் தான் இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் என்கிறார்கள். ஆனால் பல நீதிமன்றங்களே நீர்நிலைகளை ஆக்கிரமித்து எழுப்பப்பட்டிருக்கிறது. அப்படி கட்டப்பட்ட நீதிமன்றங்களை எப்பொழுது அகற்ற உத்தரவிடப்போகிறார்கள்?

சென்னை மாநகரம் முழுக்க எத்தனையோ வணிக வளாகங்களும், கல்லூரிகளும், பள்ளிகளும், பெரும் கட்டிடங்களும் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றில் எத்தனை விழுக்காட்டைத் தனது சீரிய நடவடிக்கையின் மூலமாக அரசு மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது? தமிழகத்தின் தலைநகரான சென்னையிலேயே அடிப்படைக் கட்டமைப்பு இன்றுவரை அமைக்கப்படவில்லை. காரணம், சென்னை நகருக்குள் செய்யப்பட்டிருக்கிற மிதமிஞ்சிய ஆக்கிரமிப்புகள். அதன்விளைவாகவே, கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளம் சென்னையைக் கபளீகரம் செய்தது. அது இயற்கையின் சீற்றத்தினாலோ, தனிமனிதத் தவறுகளாலோ நடந்ததல்ல! அரசாங்கத்தின் நிர்வாக முறையில் நிகழ்ந்தப் பெரும்பிழையினாலே நேரிட்டது. அதன்பிறகும், அத்தவறுகளில் இருந்து பாடம் கற்கவோ, சென்னையின் கட்டமைப்பை மறுஉருவாக்கம் செய்யவோ எவ்வித முயற்சியையும் அரசு எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால், மண்ணின் மக்களை மட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்கிற பெயரில் சென்னையைவிட்டு வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே, சென்னையின் ஆதிக்குடிகளை அவர்களின் வாழ்விடத்தைவிட்டு வெளியேற்றி ஊருக்கு ஒதுக்குப்புறமாய் கள்ளிக்குட்டையிலும், செம்மஞ்சேரியிலும், கண்ணகி நகரிலும் கொண்டுபோய் அடைத்துவிட்டார்கள். அவர்கள் வாழ்வாதாரமிழந்து தினக்கூலிகளாக இன்றைக்கு அல்லாடிக்கொண்டிருக்கின்றனர்.

அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியில் 25 ஆண்டுகளாக அம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்கிற அரசாங்கம், அவர்களுக்கு குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு, குடும்ப அட்டை, வாக்களர் அடையாள அட்டை போன்றவற்றையெல்லாம் ஏன் வழங்கியது? அவர்களிடம் வரி எப்படி வசூலித்தது? மாறி மாறி ஆண்டு அதிகாரத்தைச் சுவைத்த இரு திராவிடக் கட்சிகளுக்கும், ஆக்கிரமிப்பு செய்தது வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என அப்போது தெரியாதா? இவர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதைக் கண்டறிந்து நடவடிக்கையெடுக்க 25 ஆண்டுகளானதா? கள்ளிக்குப்பம் குடிசை வீடுகளை அகற்றுவதற்கு இவ்வளவு முனைப்புக் காட்டுகிற தமிழகப் பொதுப்பணித்துறையினர், அரசு இடத்தை அத்துமீறி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக இடத்தை இதுவரை மீட்காதது ஏன்? அரசு நிலங்களைத் திருப்பித் தந்து, அக்டோபர் 3-ம் தேதிக்குள் நிலத்தை விட்டு சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியேற வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இன்றுவரை அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த மறுத்து வருகிறது சாஸ்த்ரா பல்கலைக்கழகம். இதில் சிறைத்துறைக்குச் சொந்தமான 58.17 ஏக்கர் நிலத்தில் சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து, அதில் 28 கட்டிடங்களை கட்டியெழுப்பியிருக்கிறது சாஸ்த்ரா பல்கலைக்கழகம். நீதிமன்ற உத்தரவை மதியாது தான்தோன்றித்தனமாகச் செயல்படும் சாஸ்த்ரா பல்கலைக்கழத்தின் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்காத தமிழக அரசின் பொதுப்பணித்துறைதான், கள்ளிக்குப்பம் பகுதியில் வீடுகளை இடிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது என்பது நகைமுரணில்லையா?

கள்ளிக்குப்பம் மக்களுக்கு மாற்றுக் குடியிருப்புகளையும், உரிய வாழ்வாதாரங்களையும் உறுதிப்படுத்தி, அவர்களைக் குடியமர்த்திவிட்டு இதனைச் செய்திருந்தால்கூட ஏற்புடையதாக இருந்திருக்கும். அதனைவிடுத்து, திடீரென அவர்களை வெளியேற்றி எதேச்சதிகாரப்போக்கோடு கள்ளிக்குப்பம் பகுதி மக்களின் வீடுகளை இடிக்க உத்தரவிட்டிருக்கும் தமிழக அரசின் செயலானது ஏற்புடையதல்ல! எனவே, அம்மண்ணின் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வீடுகளை இடிக்கும் உத்தரவினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திமாவட்ட ஆட்சியரிடம் மனு-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி- சிவகங்கை மாவட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு: அக்.18, ஐயா வீரப்பனார் 14ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர் வணக்க நிகழ்வு