தாய்மொழிக் கல்வி – ஆன்றோர் அவையக் கருத்தரங்கம் | சீமான், பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்துரை

247

இன்று  09..09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவையம் சார்பாக ‘தமிழ்நாட்டின் கல்விக்கொள்கை – தாய்மொழிக் கல்வி உலக அளவில் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் ‘கல்விக் கருத்தரங்கம்’ சென்னையிலுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில்  பொதுப் பள்ளிக்கான மாநில மேடை இயக்கத்தின்  பொதுச் செயலாளர் திரு.பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கருத்துரையாற்றினார். முன்னதாக அகவணக்கம் மற்றும் உறுதிமொழியை ஆன்றோர் அவைய ஒருங்கிணைப்பாளர் புலவர் திரு.மறத்தமிழ்வேந்தன் அவர்களும், வரவேற்புரையை ஆன்றோர் அவையச் செயல் தலைவர் திரு.சோழன் நம்பியார் அவர்களும் தொடக்க உரையை தலைவர் திரு.தரங்கை பன்னீர்செல்வம் அவர்களும் நன்றியுரையை செயலாளர் திரு.பத்மநாபன் மற்றும் துணைச் செயலாளர் ம.கலையரசி அவர்களும் கூறினார்கள். இதில் ஆன்றோர் அவையின் உறுப்பினர்கள் பேரா.சோழன், பேரா.மணி, குடியேற்றம் தமிழ்ஒளி, தரங்கை குலோத்துங்கன், தனசேகரன், புரட்சிப்பாடகர் சமர்ப்பா மற்றும் கட்சியின் பல்வேறு பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

சீமான் கருத்துரையாற்றுகையில்,

தாய்மொழி கல்வி என்பது தாய்பால் போன்றது; அதை தராவிட்டால் கூட தேசத் துரோகம் தான். தமிழ் தாய்மொழி பாடம் என்ற நிலை மாறி விருப்பப் பாடமாக மாறிவிட்டது. தமிழ்ப் படித்தால் தான் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கும் என்ற நிலை வர வேண்டும். அப்போது தான் அனைவரும் தமிழ் மொழியைக் கற்பார்கள்.

நாங்கள் உலகின் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல; எங்கள் தாய்மொழியின் மீது உயிரானவர்கள். ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட உலகின் எம்மொழியையும் கற்போம் நாம் வாழ்வதற்கு; தாய்மொழி தமிழைக் கற்போம் நம் இனம் வாழ்வவதற்கு! நாங்கள் ஆங்கிலம் பயில்வதற்கு எதிர்க்கவில்லை; தாய்மொழியை விடுத்து ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாக்கப்பட்டதற்கே எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

ஒருவனுக்கு கனவு எந்த மொழியில் வருகின்றதோ, அந்த மொழியில் தான் அவருக்கு கல்வி மொழியாக இருக்கவேண்டும்.  ஏனென்றால் நமது சிந்தனை மொழியாக இருக்கும் தாய்மொழியில் கல்வி கற்பதே நமது அறிவை முழுமையாகப் பயன்படுத்த ஏதுவானதாகும். தாய்மொழியில் கல்வி கற்றவன் படைக்கிறான்; தாய்மொழியில் கல்லாதவன் பயன்படுத்துகிறான்.

கல்வி என்பது விற்பனைப் பண்டமன்று; ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை. ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்விவரை  ஏழை – பணக்காரன் என்ற வேறுபாடின்றி தரமான சமமான இலவசக் கல்வி அனைவருக்கும் கிடைத்திட வழிவகை செய்திடல் வேண்டும். முதலமைச்சர் தொடங்கி கடைசிமட்ட அரசு ஊழியர்கள் அனைவரின் பிள்ளைகளும் அரசுப் பள்ளியில் படிப்பதைக் கட்டாயமாக்கவேண்டும் அப்போதுதான் அரசுப் பள்ளிகளின் நிறை குறைகள் ஆய்ந்தறியப்பட்டு கல்வித்தரம் தானாகவே உயரும்.

ஒரு தேசத்தின் எதிர்காலம் அந்த நாட்டின் வகுப்பறைகளில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே கல்வி குழந்தைகளுக்குச் சுமையாக இல்லாமல் சுவையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

நாம் தமிழர் ஆட்சியில் தாய்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்படும். தமிழ் பயிற்றுமொழியாகவும் ஆங்கிலம் கட்டாயப் பாட மொழியாகவும் இந்தி உள்ளிட்ட உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளும் விருப்பப் பாட மொழியாக அறிவிக்கப்படும். தரமான சமமான இலவசக் கல்வி உறுதிப்படுத்தப்படும். தொடக்கப் பள்ளிகள் முதலே சமூகநீதி, நல்லொழுக்கம், வாழ்வியல், தொன்மம், சாலை விதிகள்  முறையாக கற்றுத்தரப்படும். தமிழில் படித்தால் தான் தமிழ்நாட்டில் அரசு வேலை என்ற நிலையை நாம் தமிழர் அரசு கட்டாயமாக்கும். துறை சார் வல்லுநர்களை உருவாக்கும் தனித்திறன் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்திபெரம்பலூர் மாவட்டச் செயலாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு
அடுத்த செய்திபெரும்பாவலர் பாரதியார் – சமூகநீதிப் போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாள் மலர்வணக்கம் | செய்தியாளர் சந்திப்பு