அறிக்கை: கோயில் சிலைகளை மீட்கும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரின் முயற்சிக்கு தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுவதா? – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி
கோயில் சிலைகளை மீட்கும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரின் முயற்சிக்கு தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுவதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பொன்.மாணிக்கவேல் அவர்கள் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினர் கோயில்களில் திருடப்பட்ட பழங்காலத்து சிலைகளை மீட்டெடுக்கும் பணியினைச் சிறப்பாகச் செய்து வருவது பாராட்டுக்குரியது. அதிலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சைப் பெரிய கோயிலில் காணாமல் போன பல நூறு ஆண்டுகள் பழமையான இராஜராஜசோழன், உலகமாதேவியின் சிலைகள் மீட்கப்பட்டது அக்குழுவினரின் குறிப்பிடத்தக்க சாதனை.
இந்நிலையில் சிலைக்கடத்தல் பேர்வழி தீனதயாளன் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை, சைதாப்பேட்டையிலுள்ள ரன்பீர் ஷா என்பவரது வீட்டில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரால் சோதனையிடப்பட்டுச் சிலைகள், கோயில் தூண்கள் என 89 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் பொருளாதார மதிப்பு ஏறத்தாழ 100 கோடி எனக் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட இவ்வளவு கோடி மதிப்புவாய்ந்த இச்சிலைகளை அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு இடமில்லை என்றும், சிலைகளை எடுத்துச்செல்ல அரசு சார்பாக எந்தப் பொருளாதார உதவியும் செய்யப்படமாட்டாது எனவும் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது.
மீட்கப்பட்ட சிலைகளை வைப்பதற்குக்கூடத் தமிழக அருங்காட்சியகத்தில் இடமில்லையென்றால் சிலைகள் மீட்கப்படும் என்கிற நம்பிக்கை அரசிடம் இல்லையா? அவ்வாறு மீட்கப்படும் சிலைகளை எங்குப் பாதுகாத்து வைப்பது என்பது குறித்தான ஒரு தொலைநோக்கும், திட்டமிடலும்கூட இல்லையென்றால் இவ்விவகாரத்தில் அரசினுடைய அக்கறையும், நிர்வாக மேலாண்மையும் இந்தத் தரத்தில்தான் இருக்கிறதா? இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பையும், பல்வேறு துறைகளையும் உள்ளடக்கியத் தமிழக அரசால் இதற்கு ஒரு மாற்றிடத்தை ஒதுக்கித் தர முடியாதா? மக்கள் பணத்தைக் கோடிக்கணக்கில் வீணாக விழாக்களில் விரயம் செய்யும் அரசு, சிலையை எடுத்து செல்லப் பணமில்லை என்பது எந்தவகையில் ஏற்புடையது? தங்கள் சொந்த பணத்தைப் போட்டு சிலையை எடுத்துச்செல்லும் சிலைக்கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு இருக்கும் அக்கறை, ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? அரசின் இந்தப் புறக்கணிப்பு கடத்தல்காரர்களுக்கு மேலும் ஊக்கம் தராதா?
இவ்வழக்கைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவிடமிருந்து மத்திய புலனாய்வு பிரிவுக்கு மாற்றக்கோரி அரசியல் செய்த தமிழக அரசு, மீட்கப்பட்டச் சிலைகளை வைப்பதற்குரிய அறைகளைக் கட்டாமல் இழுத்தடி வந்தததோடு, இப்பிரிவின் அதிகாரிகளைத் தான்தோன்றித்தனமாக மாற்றியும் வந்தது. தற்போது அதன் நீட்சியாகவே மீட்கப்பட்டச் சிலைகளை வைப்பதற்கு அருங்காட்சியகத்தில் இடமில்லை என அறிவித்திருக்கிறது. இவைகளெல்லாம் சிலைக்கடத்தல்காரர்களைக் காப்பாற்றும் அரசின் நேரடி நடவடிக்கையே!
இவ்வாறு தொடக்கம் முதலே சிலைகளை மீட்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடுகிற தமிழக அரசின் போக்கு வன்மையானக் கண்டனத்திற்குரியது. இதனை உடனடியாக மாற்றிக்கொண்டு பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, அவர்களுக்குரிய வசதிகளைச் செய்துதர வேண்டுமெனவும், மீட்கப்பட்ட சிலைகளை வைப்பதற்குரிய இடங்களை ஒதுக்கித் தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.