விவசாயி சேகர் தற்கொலை : மண்ணின் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து எட்டுவழிச் சாலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

56

சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு எதிராக திருவண்ணாமலை விவசாயி சேகர் தற்கொலை : மண்ணின் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து எட்டுவழிச் சாலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும்
– சீமான் வலியுறுத்தல்

சென்னை – சேலம் இடையிலேயான எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்துகொண்ட விவசாயி சேகருக்கு இரங்கல் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை – சேலம் இடையிலான எட்டுவழிச் சாலைத் திட்டத்தால் தனது விவசாய நிலமும், பூர்வீக வாழ்விடமும் பறிபோவதை அறிந்து அத்துயர் தாளாது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சேகர் நஞ்சுண்டு மாண்ட செய்தியானது பெரும் மனவேதனையைத் தருகிறது. எதன்பொருட்டும் ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பைச் சந்தித்திருக்கும் விவசாயி சேகரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது குடும்பத்துயரில் பங்கெடுக்கிறேன்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள மேல்வணக்கம்பாடி காந்தி நகரைச் சேர்ந்த விவசாயி சேகர் தனது நிலத்தில் கம்பு, மல்லிகை, மணிலா போன்றவற்றை 30 ஆண்டுகளாகப் பயிர் செய்து வந்திருக்கிறார். தற்போது அவ்விவசாய நிலமும், அவரது வீடும் எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டு அங்கு அளவீட்டுப் பணிகள் நடைபெற்று கற்கள் பதிக்கப்படுவது கண்டு துயருற்று அவ்வேதனையின் வெளிப்பாடாகவே தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்கள் மீது வலுக்கட்டாயமாக எட்டுவழிச் சாலைத் திட்டத்தை திணிக்க முற்பட்டதன் விளைவாகவே விவசாயி சேகர் உயிரிழந்திருக்கிறார் என்பதன் மூலம் ஆளும் அதிமுக அரசு தனது அதிகாரத் திமிரின் மூலமும், சர்வாதிகாரப்போக்கின் மூலமும் செய்த கோரப்படுகொலை இதுவென்பது தெளிவாகப் புலனாகிறது.

மக்களாட்சித் தத்துவத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற சனநாயக நாடான இந்நாட்டில் மண்ணின் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஒரு திட்டத்தை வளர்ச்சி எனும் மாயப் பிம்பத்தைக் காட்டித் திணிக்க முற்படுவது அப்பட்டமான சனநாயகத் துரோகமாகும். அந்தவகையில் காலங்காலமாக தாங்கள் வாழ்ந்து வந்த வாழ்விடமும், நிலமும் பறிபோகப் போகிறது எனும் கொடுந்துயரமே அநியாயமாக ஒரு விவசாயினுடைய உயிரைப் பறித்திருக்கிறது.
இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் சென்னைக்கும், சேலத்திற்கும் இடையேயான பயணத்தில் 2 மணிநேரத்தை மிச்சப்படுத்தலாம் என்பதைத் தாண்டி இத்திட்டத்தின் மூலம் மக்கள் பெறப் போகும் நன்மையாக ஆளும் வர்க்கம் எதனைக் கூறுகிறது? வெறும் 2 மணிநேரச் செலவைக் குறைப்பதற்காக மலைகளையும், காடுகளையும், நீராதாரங்களையும், விவசாய நிலங்களையும், வீடுகளையும், வாழ்விடங்களையும் அழிக்க முற்படுவது எவ்விதத்தில் நியாயம்? இயற்கையின் அருட்கொடையாகத் திகழும் மலைகளையும், நதிகளையும் சிதைத்தழித்துவிட்டு சாலைகளை அமைத்து மக்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிப்பதுதானா இவர்கள் காட்டும் வளர்ச்சி? இவ்வளவு நாட்களாக நீரைக் கேட்டுப் போராடிய விவசாயிகளை இன்றைக்கு நிலத்தையே கேட்டுப் போராடுகிற துயர்மிகு நிலைக்குத் தள்ளிவிட்டிருப்பதுதானா இவர்கள் கொண்டிருக்கிற முன்னேற்றம்? தங்களது நிலம் பறிபோகிறது என இழப்பின் வலியுணர்ந்து அறவழியில் மக்கள் ஒன்றுகூடினாலோ, அவ்வாறு கூடும் மக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தினாலோ அவர்கள் மீது வழக்குத் தொடுத்து சிறைப்படுத்துவதும், அவர்களின் வீடுகளுக்குக் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவதும் எவ்விதத்தில் ஏற்புடையது? சனநாயக நாட்டின் மாண்புகளுக்கும், அறநெறிசார் ஆட்சிக்கும் இதுவா அழகு?

அரசாங்கங்களும், அரச நிர்வாக அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு திட்டங்கள் வகுக்கப்படுவது யாவும் மக்களுக்காகத்தான். அத்தகைய மக்களே இத்திட்டத்தை முழுவீச்சில் எதிர்த்து களத்தில் நிற்கிறபோது எதற்காக இத்திட்டத்தை நிறைவேற்ற கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது அதிமுக அரசு? உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகளின் வளச் சுரண்டலுக்கான வேட்டைக்காடாக மாற்றி நிறுத்தப்பட்டிருக்கிற தமிழகத்தில் அதற்கு ஏதுவாகவே எட்டுவழிச் சாலைத் திட்டம் திணிக்கப்படுகிறது என்பதில் அணுவளவும் பொய்மையில்லை. ஆகையினால், இத்திட்டம் முழுக்க முழுக்க தனிப்பெருமுதலாளிகளின் நலன்களுக்கானதாக இருக்குமே ஒழிய, ஒருபோதும் மண்ணின் மக்களுக்கு நலம் பயப்பதாக இருக்கப்போவதில்லை என்பது திண்ணம்.

சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கெதிராக தன்னுயிரைக் களப்பலியாக்கியுள்ள விவசாயி சேகரின் மரணமானது இத்திட்டத்திற்கு எதிரான மக்களின் பெரும் எதிர்ப்புணர்வின் குறியீடாகும். அதற்கு மதிப்பளித்து இத்திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டியது மக்கள் நலனை விரும்பும் ஓர் அரசின் தலையாயக் கடமையாகும். எனவே, நிலப்பறிப்பால் தற்கொலை செய்துகொண்ட விவசாயி சேகரின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், மக்களின் போராட்ட உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் சென்னை – சேலம் இடையிலேயான எட்டுவழிச் சாலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திசுற்றுச்சூழல் பாசறை-விதைகள் விதைக்கப்பட்டது-முசிறி சட்ட மன்ற தொகுதி
அடுத்த செய்தி`நேர்மையான அதிகாரிக்கு இதுதான் பரிசா?’- பொன்மாணிக்கவேலுக்காக பரிந்துபேசும் சீமான் | விகடன்