சேலம் 8 வழி சாலை திட்டம் மற்றும் சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12-05-2018 அன்று சேலம் காமலாபுரத்தில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் நிகழ்வை ஒருங்கிணைத்தற்காக சூழியல் செயற்பாட்டாளர் பியுஸ் மனுஷ் மீதும் ஓமலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் சீமான், முன் பிணை கோரி மனு பதிவு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சீமானுக்கு நிபந்தனை பிணை வழங்கியது.
இதன்படி, சேலத்தில் கடந்த ஒரு வாரமாக தங்கியுள்ள சீமான், தினமும் ஓமலூர் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில், இன்று 18-07-2018 காலை 11 மணியளவில் சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கூமாங்காடு என்ற இடத்திற்கு சென்ற சீமான், சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டத்தால் விவசாய நிலங்கள் மற்றும் வாழ்விடங்களை இழந்து வாடும் விவசாயிகளை சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது அங்குவந்த காவல்துறையினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 20 க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து மல்லூர் பேரூராட்சியில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.
சீமான் கைது செய்யப்பட்டதிற்கு சேலம் பாரப்பட்டி கிராமப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாய நிலங்கள் மற்றும் வாழ்விடங்களை இழந்து வாடும் எங்களுக்கு ஆறுதல் கூறக்கூட யாரையும் அனுமதிக்காமல் எல்லோரையும் கைது செய்து எங்களைத் தனிமைப்படுத்துகிறீர்களே? என்று அப்பகுதி பெண்கள் காவல்துறையினரிடம் கதறி அழுதனர்.