எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு தமிழ் எழுத்துலகிற்கு ஏற்பட்டப் பேரிழப்பு – சீமான் இரங்கல்!

452

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு தமிழ் எழுத்துலகிற்கு ஏற்பட்டப் பேரிழப்பு – சீமான் இரங்கல்!

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

புகழ்பெற்ற எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் மறைவுற்ற செய்திக் கேட்டு மிகுந்த வருத்தமும், தாங்கொணாத் துயரமும் அடைந்தேன். மறைந்த எழுத்தாளுமை பாலகுமாரன் அவர்கள் தமிழிலக்கிய உலகில் பல அழுத்தமானத் தடங்களைப் பதித்தவர். ஆன்மிகம், வரலாறு, வேளாண்மை, தனிமனித உணர்ச்சிகள் என எதனைப் பற்றி எழுதினாலும் விரிவான ஆய்வு போல நுட்பமானத் தகவல்களைத் தெரிவித்து ரசனையானக் கதைகளோடு பிணைத்து எழுதக்கூடியவர்.

பிற்காலச் சோழர் வரலாறைத் தழுவி அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வனுக்குப்’ பிறகு பாலகுமாரன் எழுதிய பெரும்பாட்டன் இராஜராஜசோழனின் வரலாறான ‘உடையார்’ என்கிற பெரும் வரலாற்றுப் புதினம், பெரும்பாட்டன் இராஜேந்திரச்சோழனின் வரலாறான ‘கங்கை கொண்ட சோழன்’ என்கிற வரலாற்றுப் புதினமும் அவரது பெயரை தமிழிலக்கிய வரலாற்றில் என்னென்றும் நினைவுகூற வைக்கின்ற மாபெரும் சாதனைகளாகும்.

வெறும் எழுத்தாளர் மட்டுமன்றி தேர்ந்த ஊடகவியலாளராக, திரைப்பட வசனகர்த்தாவாக, சிறந்த சொற்பொழிவாராக, சிறந்த வரலாற்றுத்துறை ஆய்வாளராக விளங்கிய பாலகுமாரன் புகழ்பெற்ற பல விருதுகளையும், கலைமாமணி பட்டத்தையும் பெற்றவராவர். அவரது இழப்பு ஒட்டுமொத்தத் தமிழ் எழுத்துலகிற்கு ஏற்பட்டிருக்கிறப் பேரிழப்பாகவே கருதுகிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்க்கு இரங்கல் தெரிவித்து அவர்களது இலட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் என்கின்ற முறையில் அவருக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திசேலம் – சென்னை 8 வழி சாலை மற்றும் சேலம் விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் | சீமான், பியுஸ்மனுஷ் பங்கேற்பு
அடுத்த செய்திஅவசர அறிவிப்பு: இன எழுச்சிப் பொதுக்கூட்டப் களப்பணியாற்ற திரண்டு வாருங்கள்