சேலம் – சென்னை 8 வழி சாலை மற்றும் சேலம் விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் | சீமான், பியுஸ்மனுஷ் பங்கேற்பு

191

சேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி பசுமை விரைவு சாலை அமைத்திடும் திட்டத்திற்காகக் காடுகளை அழிப்பதற்கும், மலைகளைக் குடைவதற்கும், வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டம், எருமபாளையத்தைச் சேர்ந்த பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கு ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று (13-05-18) மாலை 04 மணியளவில் அவர்களது போராட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்நிகழ்வை பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் ஒருங்கிணைத்தார்.

முன்னதாக, சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மற்றும் அவரது இயக்கத்தினரால் பராமரிக்கப்பட்டு வரும் சேலத்திலுள்ள மூக்கனேரியை பியூஸ் மனுஷோடு நேரில் சென்று பரிசல் படகில் பயணம் செய்தவாறு பார்வையிட்டார். ஏரிக்கரையோரம் பசுமை காடுகள் போன்று பராமரிக்கப்பட்டு வரும் பகுதிகளில் சில மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

பின்னர் சேலம் விமான நிலைய விரிவாக்கப்பணிகளுக்காக வேளாண் விளை நிலத்தைக் கையகப்படுத்துவது தாங்காது உயிரிழந்த விவசாயி கந்தசாமி வீட்டிற்கு நேரில்சென்று ஆறுதல் கூறினார்.

சேலம் விமான நிலைய விரிவாக்கப்பணிகளுக்காக 570 ஏக்கர் வேளாண் நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் மாலை 06 மணியளவில் சேலம் விமான நிலையம் முன்பாக காமலாபுரம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் ஆகியோர் கண்டனவுரையாற்றினார்.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பேசியதன் உரைச்சுருக்கம் பின்வருமாறு,

நெய்வேலியில் நமது தாத்தா ஜம்புலிங்கனார் அவர்கள் கிணறு தோண்டுகிறபோது நிலத்துக்கடியில் நிலக்கரியைக் காண்கிறார். அது என்னவென்று தெரியாது அரசிடம் கொடுக்கிறார். அதனை ஆய்வுசெய்கிறபோது அது நிலக்கரியென தெரிய வருகிறது. தெரிந்தவுடன், 500 ஏக்கர் நிலத்தையும் அரசாங்கத்திடம் அளித்து விடுகிறார். அவர் தனி மனிதச் சொத்தை அரசாங்கத்திடம் அளித்து பொதுச்சொத்தாக்கினார். அரசாங்கம் பொதுச்சொத்தைத் தனியாருக்குத் தாரைவார்த்து தனியார் வசப்படுத்துகிறது
நெய்வேலியில் விளை நிலங்களைப் பறித்து மக்களை வாழ்விடத்தைவிட்டு வெளியேற்றினார்கள். வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்புத் தருவதாக வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இன்றுவரை வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. நிலத்தைப் பறிகொடுத்த மக்கள் குடியிருக்க இடமில்லாது இன்றைக்குவரை வீதியில் நிற்கிறார்கள். அவர்களை இந்த அரசும், அதிகாரமும் கண்டுகொள்ளவேயில்லை. அவர்களுக்காகப் போராடச் சென்ற என்னை தடுத்தார்கள். விளை நிலங்களை அளித்தால் அதேநிலைதான் இங்கும் வரும். கையகப்படுத்தப்படவுள்ள 500 ஏக்கர் நிலம் முழுவதும் பொன் விளைகிற பூமியாக இருக்கிறது. விளை நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்த்து கந்தசாமி என்கிற விவசாயி இறந்து போய்விட்டார். ஏற்கனவே, விமான நிலையப் பணிகளுக்கு 160 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தியபோதே அவ்விவசாயிடைய 4 ஏக்கர் நிலம் பறிபோய்விட்டது. ஒன்றுமில்லாத இடத்தில் வானூர்தி நிலையம் அமைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. விளை நிலங்களைப் பறித்து வானூர்தி நிலையம் அமைப்பதைத்தான் எதிர்க்கிறோம். சொந்தங்களை பிரிவது அல்ல சோகம்; ஆடு-மாடுகளை பிரிவது அல்ல சோகம்; எது பெரிய சோகம்? தான் பிறந்த மண்ணை விட்டு பிரிவது தான் இந்த உலகத்தில் மிகப்பெரிய சோகம். ஆகவே, எவ்வித நெருக்கடி, அடக்குமுறைகள் வந்தாலும் எக்காரணம் கொண்டும் வேளாண் விளை நிலங்களை விற்பதில்லை என்கிற உறுதியை நமது மக்கள் ஏற்க வேண்டும். எத்தகைய அடக்குமுறை, ஒடுக்குமுறை, மிரட்டல்கள் வந்தாலும் ஒரு பிடி மண்ணைக்கூட கையகப்படுத்த அனுமதியளிக்கக் கூடாது.

எல்லா தேசிய இனங்களுக்கும் வாழ்க்கையில் எப்போதாவது தான் போராட்டங்கள் வருகிறது; ஆனால் தமிழின மக்களுக்கு போராட்டமே வாழ்க்கையாகி நிற்கிறது. எல்லாவற்றிற்கும் போராடித்தான் ஆகவேண்டியிருக்கிறது. சிதைந்து அழிந்து கொண்டிருக்கின்ற தமிழ்த்தேசிய இன மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குப் போராடித்தான் ஆகவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த தேசியப் பெரும்பணியிலிருந்தும், வரலாற்றின் பேரழைப்பிலிருந்தும் தமிழ் இளம் தலைமுறையினர் ஒருபோதும் ஒதுங்கிச் செல்ல முடியாது’ என்கிறார் நம் தேசியத்தலைவர். தாய்நிலத்தை விட்டு வெளியேறிவிட்டால் நாம் அடிமை; நாம் அகதி! எனவே விலை தலையே ஆயினும் அதைக் கொடுத்து நம் தாய்நிலத்தை நாம் காப்பாற்ற இறுதிவரை உறுதியாகப் போராடுவோம். இது நமக்கான போராட்டம் அல்ல; நமது எதிர்கால தலைமுறையினருக்கானப் போராட்டம். இது பாதிக்கப்பட்ட தனிப்பட்ட நபர்களுக்கானப் போராட்டமாக இல்லாமல் மக்களின் போராட்டமாக சனநாயகப் புரட்சியாக மாறவேண்டும்! முதலமைச்சரின் மாவட்டத்திலேயே வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தமுடியவில்லை என்கிற நிலையை உருவாக்கவேண்டும். அப்போதுதான் மற்ற இடங்களில் வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்தவேண்டும் என்கிற எண்ணம் அரசுக்கு வராது. நாம் நிலத்தை இழந்தால் நமது பலத்தை இழப்போம்!

இங்கே போராடுகிற மக்கள் அனைவரும் வளர்ச்சிக்கு எதிரானவர்களோ விஞ்ஞான வளர்ச்சிக்கு எதிரானவர்களோ அல்ல; அதுபோன்று எங்களைக் கட்டமைப்பது நேர்மையற்றது. வேளாண்மையை அழித்துவிட்டு வரும் வளர்ச்சி வேண்டாமென்று தான் போராடுகிறோம். எனவே இதுபோன்ற திட்டங்களுக்கு வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்துவதை விடுத்து தரிசு நிலங்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உழவு இல்லையேல்; உலகு இல்லை!

இவ்வாறு சீமான் பேசினார்.

புகைப்படங்கள்:  https://www.facebook.com/media/set/?set=a.2150334628531544.1073741939.1590339624531050&type=3

https://www.facebook.com/media/set/?set=a.2150297508535256.1073741938.1590339624531050&type=3