அறிக்கை: ஆண்களுக்கு நிகராக அனைத்துத்துறைகளிலும் 50 % இட ஒதுக்கீடு; பெண்களுக்கெனத் தனி சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகள்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
மகளிர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கர்ப்பிணியாக இருந்த தங்கை உஷா காவல்துறையினரின் மனிதநேயமற்ற கொடுஞ்செயலால் திருச்சியில் கொலைசெய்யப்பட்டச் செய்தியானது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. மகளிர் தின வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டிய இத்தருணத்தில் நிகழ்ந்த இக்கோரச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெருத்த சோகத்தையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. வார்த்தைகளால் விவரித்துவிட முடியாத அளவுக்குப் பெரும் இழப்புக்கு ஆளாகி நிற்கிற உஷாவின் கணவர் ராஜாவை எவ்வார்த்தைகளைக் கொண்டு தேற்றுவதென்று தெரியவில்லை. அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அத்துயரத்தில் முழுமையாகப் பங்கெடுக்கிறேன்.
மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திட வேண்டுமம்மா என்று பெண்களைப் போற்றிக் கொண்டாடினார் கவிமணி தேசிய விநாயகம். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே என்று பெண்ணிய விடுதலைக்குச் சங்கநாதம் எழுப்புகிறார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன். பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ் சோதி என்று பெண்ணிய சமத்துவத்தைப் போதிக்கிறார் திருவருட்பிரகாச வள்ளலார். பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை என்கிறார் தேசியத் தலைவர் பிரபாகரன். தாய்வழிச் சமூகமான தமிழ்ச்சமூகத்தில் பெண்களுக்கே முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. இடைக்காலத்தில் நிகழ்ந்த அந்நியப் பண்பாட்டுப் படையெடுப்பினாலும், இனக்கலப்பினாலும் பெண்களுக்குரிய தலைமைப் பறிக்கப்பட்டிருக்கிறது என்பதே தமிழர் வரலாறு நமக்குப் பகரும் பேருண்மையாகும். அத்தகையத் தமிழ்ச்சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், பெண்ணடிமைத்தனத்தை நிலைநிறுத்தும் சடங்குகளும் இருப்பது மாபெரும் கொடுமையாகும்.
அதுவும் அண்மைக்காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல்கிப்பெருகி வருவது பெண்களின் நடமாடும் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பான வாழ்க்கை முறையினைக் கேள்விக்குறியாக்குவதாகவும் உள்ளன. ஒரு தலைக்காதல் கொலை, வன்புணர்ச்சிக் கொலை, வரதட்சணைக் கொடுமை, பாலியல் தொல்லைகள், நகைகளைப் பறித்தல், அமிலத் திரவம் வீசுதல், அடிப்படை உரிமைகளையே மறுத்தல், பெண்களின் நன்னடத்தையைக் இழித்துரைத்தல், ஆதிக்கம் செலுத்தி வீழ்த்த முற்படுதல் என பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் யாவும் சொல்லி மாளக்கூடியவை அல்ல. எல்லாவற்றுக்கும் பெண்கள் மீதுதான் தவறிருக்கும் எனும் தவறானக் கற்பிதத்தைப் பொதுப்புத்திக்குள் கொண்டிருக்கிற இச்சமூகத்தில் பெண்கள் பிறந்து வளர்ந்து எழுவது சாதாரணக் காரியமுமல்ல. அத்தகையப் பெண்களுக்கு சமவுரிமை கொடுத்து போற்றுவதும், அவர்களின் உரிமையைப் பெற்றுக்கொடுக்கப் போராடுவதும் நம் ஒவ்வொருவருடையத் தலையாயக் கடமையாகும்.
பெண்கள் மீதான வன்முறை யாவற்றுக்கும் பாதிக்கப்படும் பெண்களின் வளர்ப்புமுறையைத் தவறெனச் சொல்லி, பெண்களை வெறும் சதைப்பிண்டமாகப் பார்த்து, போகப்பொருளாக அணுகும் ஆணாதிக்க உளவியலை அழித்தொழிக்காது விடுவதே பெருங்காரணமாகிறது. பெண்கள் உடுத்தும் ஆடைகள்தான் பாலியல் வன்புணர்ச்சியைக்குக் காரணமாகிறது எனப் பொருந்தா பொய்யினை உரைக்கும் இச்சமூகம், 6 வயது சிறுமியும், 60 வயது மூதாட்டியும் தான் உடுத்தும் ஆடையால்தான் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகிறார்களா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல விளைவதில்லை. ஒருதலைக்காதல் என்ற பெயரில் கொலைசெய்யப்படும் பெண்களின் ஒழுக்கம் குறித்த ஆராய்ச்சிகளை ஆண்களிடம் உட்படுத்துவதற்குத் தயாரில்லை.
விளிம்புநிலையில் இருக்கும் அடித்தட்டு சமூகத்துப் பெண்கள் மீது ஆணாதிக்க வன்முறை அதிகளவில் நிகழ்த்தப்படுகிறது என்றாலும், இத்தொடர் தாக்குதல்கள் ஒட்டுமொத்தப் பெண் சமூகத்தின் மீதே ஏவப்படுபவையே! பெண்களைச் சரிநிகராக மதிக்கத் தெரியாத, தமது வாழ்க்கையினைத் தமது விருப்பத்தின்படி அமைத்துக்கொள்ளத் உரிமைபெற்ற சக பாலினம் பெண்கள் என்ற புரிதல் இல்லாத சமூகத்தின் விளைச்சல்தான் இவையாவும்! ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல்லாயிரக்கணக்கில் நிகழ்வதாக தேசிய ஆவணக்காப்பகம் கூறுகின்றது. அதில் பாலியல் வன்புணர்ச்சி செய்யும் குற்றவாளிகள் பெரும்பாலும் படித்தவர்களாக இருப்பதன்மூலம் இங்குக் கற்பிக்கப்படும் கல்விமுறையையே நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது. படித்த இளைஞன் ஒருவன் அள்ளி எடுத்துக் கொஞ்சுகிற வயதில் இருக்கிற ஒரு குழந்தையைப் பாலியல் வக்கிரத்தோடு பார்க்கிறான் என்றால், அவன் படித்த கல்விமுறை எதனைக் கற்றுத் தருகிறது? கல்வி முறையானது பண்பாட்டையோ, ஒழுக்கத்தையோ, அற உணர்வையோ எடுத்துரைக்காமல் வெறுமனே பொருளீட்டுவதையே நோக்கமாகக் கொண்டு போதிக்கப்படுவதால் வந்த விளைவுதான் இது. வணிகமயமாக்கப்பட்ட கல்வி முறை இப்படித்தான் நீளும் என்பதனால்தான், சிந்தையை மேம்படுத்தும் கல்வியைச் சந்தைப்படுத்தக்கூடாது என்கிறோம்.பெண்கள் மீதான இத்தொடர் வன்முறைக்கு அதை மேற்கொள்ளும் வன்முறையாளர்கள் மட்டும் காரணமல்ல! பெண்களைப் பற்றிய தவறான உளவியலையும், ஆணாதிக்கச் சிந்தனையையும் அனுமதித்த இச்சமூகத்தின் அங்கத்தினராக இருக்கிற ஒவ்வொருவரும்தான் காரணம் என்பதை மனதில்கொண்டு பெண்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைக்கெதிராய் போராட முன்வர வேண்டும். பெண்களை நதியாகவும், தெய்வமாக உருவகப்படுத்தி வழிபடும் நாட்டில் பெண்களுக்கு எதிரான இத்தொடர் தாக்குதல்கள் ஒவ்வொரு மனிதருக்குமான தலைகுனிவு என்பதை மனதில்கொள்ள வேண்டும்.
பெண்கள் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்ற கல்வி முறை, திரைப்படம் என எல்லாவற்றிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். பாலியல் குற்றத்துக்கான கடும் தண்டனைகள் என்ற அறிவிப்புகள் எல்லாம் வெறும் அறிவிப்புகளோடு நின்று விடுவதும், சட்டத்திலிருக்கும் பெருந்துளைகளின் வழியே குற்றவாளிகள் தப்பிவிடுவதும் குற்றங்கள் பெருகுவதற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர்க்குப் பிணையில் வரவே முடியாத அளவுக்குக் கடுங்காவல் சிறைதண்டனை பெற்றுத்தரக் கடுமையான சட்டங்கள் உடனே இயற்றப்பட வேண்டும். இச்செயலைச் செய்தால் பெருந்தண்டனைக்கு உள்ளாவோம் என்ற அச்சம் உருவாகவேண்டும். ஏற்கனவே, 44 சட்டங்களை இதற்கென வைத்திருந்தாலும் அதனை முறைப்படுத்தவோ, சரியாகச் செயற்படுத்தவோ செய்யாதுவிட்டதன் விளைவாகத்தான் நம்மினப் பெண்களைப் பலிகொடுத்து வருகிறோம். வேலுநாச்சியாரும், குயிலியும் உலவிய மண்ணில் நந்தினியும், ஹாசினியும் கொலைசெய்யப்படுகிறார்கள் என்பது ஏற்கவே முடியாப் பெருந்துயரமாகும்.
ஆகவே, எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்குச் சமநிகராக பெண்களுக்கு 50 விழுக்காட்டு இடஒதுக்கீட்டினைப் பெற்றுத்தர முன்வர வேண்டும். மகப்பேறு காலத்தை 6 மாதங்களாக நீட்டித்து ஊதியத்துடன் கூடிய விடுப்பைத் தர வேண்டும். அலுவலங்களில் பணிபுரியும் பெண்களின் வசதிக்காக 15 நிமிடங்கள் தாமதமாக வந்தாலும் பணியில் இணைந்துகொள்ள நேரநீட்டிப்பு செய்ய வேண்டும். பெண்களுக்கென அதிகப்படியானப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். பெண்களுக்கென தனி சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கென தனிப்படை அமைத்து அவர்களின் பாதுப்பான வாழ்க்கையினை உறுதி செய்ய வேண்டும் என இந்நாளில் ஆளும் ஆட்சியாளர்களைக் கோருகிறேன்.
பெண்மையைப் போற்றுவோம்.. பெருமைமிக்க நாடாவோம்..
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.