ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசிய காவலர் மாயழகு மீது நடவடிக்கை எடுப்பதா? – சீமான் கண்டனம்

35

அறிக்கை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது குடிசையைக் கொளுத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசிய காவலர் மாயழகு மீது நடவடிக்கை எடுப்பதா? – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசிய காவலர் மாயழகு மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்ததற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் எழுந்த தைப்புரட்சி எனும் வரலாற்றுப்பெரும் நிகழ்வில் 20-01-17 அன்று சென்னை, மெரீனாவில் நடந்தப் போராட்டத்தில் பங்கேற்று பேசியதற்காக ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் மாயழகு மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. காவலர் மாயழகு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையிலும், ஊடகங்கள் முன்னிலையிலும் வாக்குறுதி அளித்த மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றைக்கு அவ்வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு 10 மாதங்களுக்குப் பிறகு துறைரீதியான நடவடிக்கை எடுத்திருப்பது ஒரு மோசடிச்செயலாகும். இதனை எவ்வகையிலும் ஏற்க முடியாது. கடந்த ஜூன் மாதம் மாயழகுவுக்கு மெமோ கொடுக்கப்பட்டபோது அதனை வழக்கமான நடைமுறைதான் என்று கூறிய உயர் அதிகாரிகள் கடந்த 13ஆம் தேதி 3-பி சார்ஜ் மற்றும் ஓராண்டுக்கு சம்பள உயர்வு ரத்து என்று உத்தரவிட்டுள்ளனர். இதனால், அவருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘இதுபோன்ற ஒழுங்கீனமானச் செயல்கள் பிற காவலரையும் அதில் ஈடுபடத்தூண்டும்’ எனவும், ‘ஒழுக்கமும், கண்ணியமும் நிறைந்த காவல்துறையின் நற்பெயருக்கு ஏற்படுத்தும் விதமாக உள்ளது’ எனவும் காவலர் மாயழகுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கும்விதமாக இம்மண்ணின் மகனாய் தம்பி மாயழகு பேசியது ஒழுங்கின்மை என்றால், காவல் பணியில் ஈடுபட வேண்டிய காவல்துறையினர் மக்களின் குடிசைக்கும், வாகனத்திற்கும் தீ வைத்தார்களே அது என்ன மாதிரியான செயல்? அது ஒழுக்கம் மிகுந்த செயலா? அப்படி தீ வைத்தவர்கள் எத்தனைப் பேர் மீது ஒழுங்கின்மை நடவடிக்கையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? போராட்டத்தில் இளைஞர்களுக்கு உதவிய நடுக்குப்பம், அயோத்திக்குப்பம் மக்களை அடித்துதைத்து ஆபாச மொழிகளால் வதைத்த காவல்துறையினர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதா? அதெல்லாம் ஒழுங்கின்மை செயலின் கீழ் வராதா?

மக்களின் பாதுகாப்பிற்காகவும், உதவிக்காகவும், வழிகாட்டுதலுக்காகவும் அமைக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பரண் படைதான் காவல்துறையாகும். ஆனால், அவற்றிற்கு முற்றிலும் நேர்மாறாக தற்போதைய காவல்துறையினரின் செயல்பாடு அமைந்திருப்பது பெரும் வருத்தத்தைத் தருகிறது. சமூக நலனுக்காக உரிமையைக் கேட்டு உணர்வோடு போராடுவோர் மீது தடியடித் தாக்குதல் தொடுப்பதும், பொய் வழக்குகளைப் புனைவதுமானப் போக்கு தமிழகம் முழுக்கக் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவது கண்கூடாகத தெரிகிறது. இதன் உச்சமாக, கதிராமங்கலத்தில் போராடியப் பெண்களை பாலியல் வழக்கில் கைதுசெய்வோம் என மிரட்டியிருக்கிறார்கள் அப்பகுதி காவல்துறை அதிகாரிகள். இவையாவும் ஆளும் ஆட்சியாளர்களின் தூண்டுதல்களால்தான் நடக்கிறது என்றாலும், தமிழகக் காவல்துறையின் நற்பெயருக்கு உண்மையிலேயே களங்கம் விளைவிப்பை இவைதான் என்பதைத் தமிழகக் காவல்துறை உயரதிகாரிகள் உணர வேண்டும். எனவே, தமிழக ஆயுதப்படை காவலர் தம்பி மாயழகு மீது எடுக்கப்பட்டிருக்கிற துறைரீதியான நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.